நேற்று பாளையங்கோட்டையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிதியளிப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் கூட்டத்தின் முடிவில் நடிகர் சங்க விவகாரம் பற்றியும் பேசினார்.
அவர் தன்னுடைய பேச்சில், “நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை பல முறை பேசி முடிவெடுத்த பின்னரே தனியாருக்கு ஒப்பந்தம் போட்டு கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி மாதத்துக்கு 24 லட்சம் ரூபாய் நடிகர் சங்கத்துக்கு வருமானமாக கிடைக்கும். பராமரிப்பு செலவு, பாதுகாப்பு செலவு, மின்சார செலவு எதுவும் சங்கத்தைச் சேர்ந்தது அல்ல.
மொத்தம் உள்ள 68 ஆயிரம் சதுர அடியில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சதுர அடிவரையில் நடிகர் சங்கத்துக்கு கேட்டு உள்ளோம். மீண்டும் நடிகர் சங்கம் கடன்பட்டுவிடக் கூடாது என்பதே எங்கள் விருப்பம்.
நடிகர் சங்கத்திற்கு நாங்கள் பொறுப்புக்கு வரும்போது சங்கம் கடனில் இருந்தது. அதை அடைத்து உள்ளோம். சங்க கட்டிடம் கட்டுவது குறித்த ஒப்பந்தம் குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் பேசப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தால் சங்கத்திற்கு வருமானம்தான் வரும். இந்த ஒப்பந்தம் குறித்து எங்களிடம் யாரும் பேசவில்லை.
2013-ம் ஆண்டு நடந்த பொதுக் குழுவில் இன்று குற்றம் சாட்டுகிறவர்கள் ‘சிறந்த தலைமை’ என்று பாராட்டி பேசினார்கள். நான் கடந்த முறையே ‘பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன்’ என்றேன். அப்போது அவர்கள் ‘நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்’ என்றார்கள். இப்போது ‘கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் போவேன்’ என்று கூறி இருக்கிறேன்.
ஏற்கனவே செயற்குழுவில் சூர்யா, சிம்பு உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். எங்கள் மீது சாட்டுகின்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல. அவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று வரட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. நடிகர்களிடம் ஒற்றுமை வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட்டு ஓடுவதற்கு நாங்கள் கோழையல்ல..” என்று கோபத்துடன் பேசியிருக்கிறார்.