கோடம்பாக்கத்து பெரிய தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஒன்று இன்றைக்கு நடந்திருக்கிறது.
இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘புலி’ திரைப்படத்தின் டீஸரை அதன் தயாரிப்பாளர்கள் அனுமதியில்லாமல் ரிக்கார்டிங் ஸ்டூடியோ மூலமாகவே இணையத்தில் பரவியது திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய இரவுதான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாளான இன்று, ஜூன் 22-ம் தேதி இந்தப் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்து அறிவித்திருந்தார்கள்.
ஆனால் அதற்குள்ளாக இன்று மதியம் 2 மணியளவில் யூடியூப் மூலம் ‘புலி’ படத்தின் டீசர் திருட்டுத்தனமாக வெளியாகியது, இதனால் ‘புலி’ படக் குழுவும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உடனடி விசாரணையில் இறங்கினார்கள்.
நுங்கம்பாக்கம் 4 Frames Editing Studio-வில்தான் இந்தப் படத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வந்திருக்கின்றன. அங்கிருந்துதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற உறுதியோடு ஸ்டூடியோவை முற்றுகையிட்டனர் தயாரிப்பாளர்கள்.
செய்தியறிந்து பதறியடித்து ஓடி வந்தார் 4 பிரேம்ஸ் ஸ்டூடியோவின் அதிபரான இயக்குநர் பிரியதர்ஷன். முதலில் ஊழியர்களிடத்தில் விசாரித்து எதுவும் பலனில்லாமல் போக அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ரகசியமாக சோதனையிட்டதில் அந்த ஸ்டூடியோவில் பயிற்சியாளராகப் பணியாற்றிய மிதுன் என்பவர்தான் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து அந்த வீடியோவை அப்லோட் செய்தார் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக மிதுனை பிடித்துக் கொண்டு போய் நுங்கம்பாக்கம் போலீஸிடம் ஒப்படைத்தார் பிரியதர்ஷன். மிதுன் மீது 2 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 4 Frames உரிமையாளரும், இயக்குநருமான பிரியதர்ஷன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, “எனது நிறுவனத்தில் இண்டன்ஷிப்பில் பணிபுரிய வந்த எம்.எஸ்.மிதுன் என்பவர், இந்த சட்டவிரோத செயலை செய்திருப்பது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று கூறினார்.
4 Frames தியேட்டரின் மேனேஜரான கல்யாணம் பேசும்போது, “இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவிருந்த ‘புலி’ படத்தின் டீசர் சட்டவிரோதமாக வெளியிட்ட மிதுனை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளோம். இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்..” என்று கூறினார்.
அங்கிருந்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, “புலி படத்தின் டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் எங்களது ஒட்டு மொத்த படக் குழுவும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த புலி படத்தை இப்படி யாரோ ஒரு முகம் தெரியாத ஒருவர் வெளியிடுவது கடுமையாக தண்டிக்கதக்கது. இப்படி ஒரு டீசர் வெளியானதால் எங்களுக்கு பெரிய பயம் எழுந்துள்ளது. பின்னாளில் முழு படமே இப்படி வெளியானால் எங்கள் நிலைமை என்ன ஆகும்..? ஏற்கனவே ‘ஐ’, ‘பாகுபலி’ போன்ற பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை குறிவைத்து இந்த மாதிரி செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. இந்த மாதிரி செயல்களை எப்படியாவது எதிர்காலங்களில் தடுக்க வேண்டும்…” என்று திரையுலகத்தினரை கேட்டுக் கொண்டார்.