“சத்தியமா நான் அப்படி சொல்லலை…” – நடிகர் சிம்பு அறிக்கை..!

“சத்தியமா நான் அப்படி சொல்லலை…” – நடிகர் சிம்பு அறிக்கை..!

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வெளியான அதே தினத்தன்று கர்நாடகாவில் விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும் அதை எதிர்த்து போராடத் துவங்கினர்.

அதற்கடுத்த நாள் நடிகர் சிம்பு, “இனிமேல் என்னுடைய எந்தப் படமும் கர்நாடகாவில் திரையிடப்பட மாட்டாது…” என்று தெரிவித்ததாக ஒரு செய்தி இணைய உலகத்தில் வலம் வரத் துவங்கியது.

ஆனால் இந்தச் செய்தி எங்கேயிருந்து.. யாரிடமிருந்து வந்தது என்கிற உண்மைத் தன்மையை ஆராயாமல் வழக்கம்போல வைரலாக பரவி “சிம்பு எம்புட்டு நல்லவரு..” என்கிற ரீதியில் அவருக்கு பெருமை சேர்க்க ஆரம்பித்துவிட்டது.

உடனேயே தனது டிவிட்டர் பக்கத்தில் அந்தச் செய்தி பொய்யென்றும், தா்ன் அதுபோல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சிம்பு சொன்னாலும், புரளி ராக்கெட் வேகத்தில் பரவியது.

இதனால், இரண்டு நாட்கள் கழிந்த பின்பு இன்றைக்கு சிம்புவிடம் இருந்து இது தொடர்பாக ஒரு புதிய செய்தி, அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

அது இங்கே :

அன்பு நண்பர்களே,

தற்போது நான் தாய்லாந்து நாட்டில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன்.

காவிரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.

இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவிரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை.

இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல. சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள்.

நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை பெய்து, இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே.

அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன். இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.  

நன்றி..!

அதான.. ஒரு மனுஷனை ரெண்டு நாள்கூட ‘நல்லவன்’னு பெயர் எடுக்க விடமாட்டீங்களே..!?

Our Score