Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதலும், காமெடியும் இணைந்த திரைப்படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.
இந்தப் படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்கம் – ஶ்ரீஜர், இசை – தரண், ஒளிப்பதிவு – ரமேஷ் சக்ரவர்த்தி, படத் தொகுப்பு – ஜோமின், கலை இயக்கம் – நர்மதா வேணி, சண்டை இயக்கம் – ஆக்சன் நூர், உடை வடிவமைப்பு – ஹினா, நிவேதா ஜோசப், DI – Accel Media, VFX – வெங்கி சந்திரசேகர், புரொடக்சன் கன்ட்ரோலர் – மனோகர் ஶ்ரீகாந்த், லைன் புரடியூசர் – வருண் சந்திரன், எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – அசோகன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், புகைப்படங்கள் – ராஜா, விளம்பர வடிவமைப்பு – தண்டோரா.
காமெடி கலாட்டாவாக திரைக்கு வரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா நேற்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக் குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேசும்போது, “நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. இதற்காக தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி.
ரவீந்தருக்கும், எனக்கும் ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம் உண்டு. இருவரும் இணைந்து படம் செய்யலாம் என ரொம்ப நாளாக பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், முன்பேயே ஒரு புராஜக்ட் பேசி நின்றுவிட்டது. என்னிடமும், அவரிடமும் “இருவரும் இணைந்து படம் செய்ய வேண்டாம்” என்று நிறைய பேர் சொன்னார்கள்.
நான் 2017, 2018-ம் வருட காலக்கட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து என்னை வைத்து படம் செய்ய முன் வந்தவர்கள், ரவீந்திரன் மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும்தான். அதில் ரவீந்திரன் இப்போது இந்தப் படத்தை முடித்துவிட்டார்.
படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப் படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.
இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப் படத்தில் நிறைவேற்றியுள்ளார்.
யோகிபாபு இந்த பிஸியான நேரத்திலும் எனக்காக இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவர் அன்புக்கு நன்றி. இந்தப் படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வர வேண்டும்.

ஒரு முறை சமந்தாவிடம் “அழகாக இருக்கீங்க.. அழகாவும் தமிழ் பேசறீங்க..” என்று சொல்லியிருக்கிறேன். அதே போல்தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார். நல்ல தமிழில் பேசுகிறார். அதற்காக சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..” என்றார்.