full screen background image

“தீபாவளிக்கு என் படம் ரிலீஸாவதில் எனக்குப் பெருமைதான்” – ‘டீசல்’ பட ஹீரோ ஹரீஷ் கல்யாண் பெருமிதம்..!

“தீபாவளிக்கு என் படம் ரிலீஸாவதில் எனக்குப் பெருமைதான்” – ‘டீசல்’ பட ஹீரோ ஹரீஷ் கல்யாண் பெருமிதம்..!

’பார்க்கிங்’, ‘ப்பர் பந்து’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘டீசல்’.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்.பி. சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் எஸ்.பி.சங்கர் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் கதாநாயகியான அதுல்யா ரவி வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லன்களாக வினய், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஷாகிர் உசேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட், தங்கத்துரை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு திபு நினம் தாமஸ் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு மற்றும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத் தொகுப்பு செய்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் ஹாட்ரிக் வெற்றிக்கான வாய்ப்பாக உள்ள இந்தப் படம், தீபாவளி போட்டியில் களம் இறங்கும் படம்,  மற்றும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் பீர்’ பாடல் இடம் பெற்றுள்ள படம் என்று பல கோணங்களிலும் தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் மையக் கரு பற்றி இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி கூறியுள்ள தகவல், இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இதுவரையிலும்  தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பல கோடி பெறுமானமுள்ள கச்சா எண்ணெய்யை திருடும் மாஃபியா கும்பல் பற்றிய உண்மை சம்பவங்கள்தான் இந்த டீசல்’ படத்தின் மையக் கருவாம்.

தற்போது இந்த திருட்டு செயல் தடுக்கப்பட்டுள்ளது என்றாலும், கடந்த 2014-ம் ஆண்டுவரை, சென்னை துறைமுகப் பகுதியிலும், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியிலும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சம்பவத்தை கருவாகக் கொண்டு, இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.

இந்த டீசல் படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி பேசும்போது, ”இந்தக் கச்சா எண்ணெய் கடத்தல் பற்றி எனக்கு சில தகவல்கள் கிடைத்தன. ஆச்சரியப்பட்டு இதை நான் மேலும் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. இது சென்னையில் மட்டும் நடக்கவில்லை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடந்து வந்த மிகப் பெரிய கடத்தல் தொழில் என்று தெரிந்தது.

இதனை மையமாக வைத்தே ஒரு படம் பண்ணலாமே என்று தோன்றியது. அதற்காக கேட்டதை மட்டுமே வைத்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துவிடவில்லை. இதில் உள்ள உண்மை என்னவென்று பல மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு கூடுதலாக பலவற்றையும் அறிந்து கொண்டுதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதினேன்.

இது சாதாரண பிரச்சனை அல்ல. சர்வதேச அளவிலான பிரச்சனையும்கூட. அதனால், அதில் ஒரு சில விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறேன்.

இந்தப் பிரச்சனை 2014-ம் ஆண்டோடு முடிந்துவிட்டது. அதனால் இந்தப் படத்தின் கதையும் அந்த காலக்கட்டத்தில் நடப்பது போலத்தான் இருக்கும். 2014 மற்றும் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திலும் இந்தக் கதையோடு மக்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.

காரணம், டீசல் என்பது நம் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை வைத்து இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது என்பது மக்களுக்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும்.” என்றார்.

“பீர்’ பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றாலும் படத்தின் வெளியீட்டில் தாமதமானது ஏன்?” என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “பீர்’ பாடலை கம்போசிங் பண்ணிய உடனேயே நிச்சயம் இந்தப் பாடல் ஹிட்டாகும் என்று என் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தார்கள். அதேபோல் பாடல் வெளியான உடனேயே மிகப் பெரிய ஹிட்டும் கிடைத்தது.

ஆனால், அதன் பிறகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. படப்பிடிப்பை முடித்த பிறகுதானே படத்தை வெளியிட முடியும்..? அதனால்தான் தாமதம் ஏற்பட்டது…” என்றார்.

நாயகன் ஹரிஷ் கல்யாண் இந்த டீசல்’ படம் குறித்து பேசும்போது, “இந்தக் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட அதிர்ச்சி என்னிடம் வந்து இந்தக் கதையைச் சொன்னதுதான். “இது மாஸான ஆக்‌ஷன் கதையாச்சே…? என்கிட்ட ஏன் சொல்றீங்க…?” என்றேன். “இல்லை… நீங்கள்தான் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பீர்கள்” என்றார் இயக்குநர். நானும் இதுவரையிலும் முழுமையான ஆக்‌ஷன் படம் எதுவும் பண்ணாததால், ஒரு பெரிய மாற்றமாக இந்தப் படம் இருக்கும் என்று நம்பித்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

ந்தப் படத்தில் நான் ஒரு மீனவனாக நடித்திருக்கிறேன். இதற்காக லாஞ்ச் படகு ஓட்டவும் கற்றுக் கொண்டேன். அந்தப் படகை ஓட்டுவது சாதாரணமானதல்ல. அதை திருப்பவே ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தது. காட்சிகளை ரியலாக சூட் செய்ததால், அந்தப் படகினை நானே ஓட்ட வேண்டி இருந்தது. அதனால் கற்றுக் கொண்டேன். மேலும் பைபர் படகின் டிரைவிங்கையும் கற்றுக் கொண்டு  அதையும் இதில் ஓட்டியிருக்கிறேன். மீன் வலை வீசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இந்தப் படம் எனது சினிமா பயணத்தில் முக்கியமான படமாகவும், நான் நடிக்கும் முதல் முழுமையான ஆக்‌ஷன் படமாகவும் இருக்கும்.

என் வாழ்க்கையில் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பாக ஒவ்வொரு தீபாவளியன்றும் ரஜினி சார், கமல் சார் படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் இன்று நான் நாயகனாக நடித்தப் படம் தீபாவளியன்று வெளியாவதை நினைத்தால் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.  இது திட்டமிட்டதில்லை. நல்ல தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தபோது, மற்ற படங்களின் வருகையையும் கணக்கீட்டு வைத்துப் பார்த்தால் இந்தத் தீபாவளியன்று படம் வெளியானால் சரியாக இருக்கும் என்று தோன்றியது அதனால்தான் இந்த ‘டீசல்’ படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம்.” என்றார்.

பீர்’ பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான இப்படம், தீபாவளி பண்டிகை வெளியீடாக வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Our Score