அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ போஸ்டரை ரஜினி வெளியிட்டார்

அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ போஸ்டரை ரஜினி வெளியிட்டார்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் ‘அந்த நாள்’ என்னும் திரைப்படம் மறக்க முடியாத திரைப்படமாகும்.

1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநரான அகிர குரசோவாவின் ‘ரஷோமான்’ என்னும் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.

மர்மக் கதையின் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், பண்டரிபாயும் நடித்திருந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு படத்திற்கு 10 பாடல்கள் இருந்த நிலையில்... ஒரு பாடல்கூட இடம் பெறாமல் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

இந்தப் படத்திற்கு பிரபல நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதியிருந்தார். வீணை எஸ்.பாலசந்தர் திறம்பட இயக்கியிருந்தார். ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருந்தது.

Antha Naal First Look

இப்போது 65-ம் வருடங்கள் கழித்து அதே ஏவி.எம். நிறுவனம் ‘அந்த நாள்’ என்னும் அதே பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை தரவிருக்கிறது.

இந்தப் படத்தை கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ரகுநந்தன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக அறிமுக நடிகர் ஆர்யன் ஷாம் நடிக்கிறார். இவர் ஏவி.எம்.குடும்பத்தைச் சேர்ந்தவர். தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், தயாரிப்பாளர் எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவருமாவார்.

இந்தப் படத்திற்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்.எஸ்.ராபர்ட் சற்குணம் இசையமைத்திருக்கிறார். ஜெ.எஃப்.காஸ்ட்ரோ படத் தொகுப்பு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான வி.வீ. இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் அறிமுக போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தன்னுடைய இல்லத்தில் நடைபெற்ற சிறிய விழாவில் வெளியிட்டிருக்கிறார்.

IMG_2100

அப்போது, "அறிமுக நாயகனான ஆர்யன் ஷாம் புகழ் பெற வேண்டும். இந்தத் திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.." என்று வாழ்த்தினார் ரஜினிகாந்த்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநரான வி.வீ., ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.