full screen background image

“தேர்தல் தேதியை மாற்ற முடியாது…” – நடிகர் ராதாரவி பதில் மனு..!

“தேர்தல் தேதியை மாற்ற முடியாது…” – நடிகர் ராதாரவி பதில் மனு..!

நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்தும் அதிகாரியாக யாரை நியமிக்கவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் செயற்குழுவுக்குத்தான் உள்ளது என்றும், தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலின் நடைமுறைகள் குறித்து நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், “தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் ஜூலை 15-ந் தேதி நடைபெறும் என்று கடந்த 5-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ந் தேதி புதன்கிழமை வருகிறது.

பொதுவாக திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தேர்தல் பொது விடுமுறை நாளான மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமைதான் நடத்துவது வழக்கம்.  ஆனால், நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்களால் ஓட்டு போட வர முடியாத நிலை ஏற்படும்.

மேலும், தகுதியான வாக்காளர்களின் பெயர் பட்டியலை கேட்டும் நடிகர் சங்கத்தின் நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.  இந்த தேர்தல் வடபழனியில் நடைபெறுவதால், அங்கு போக்குவரத்து அதிகம் இருக்கும். நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்த வக்கீல்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை ஞாயிற்றுக்கிழமை நடத்தவேண்டும் என்றும், வாக்காளர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்றும், வடபழனிக்கு பதில் வேறு ஒரு பகுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்…” என்றும் தங்களது மனுவில் கோரியிருந்தனர். 

இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனு தாக்கல் செய்தார்.

ராதாரவி தன் பதில் மனுவில், “தேர்தல் அதிகாரியாக யாரை நியமிக்க வேண்டும்., யாரை நியமிக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம், நடிகர்கள் சங்கத்தின் செயற்குழுவுக்குத்தான் உண்டு. கடந்த ஜூன் 1-ந் தேதி நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக வக்கீல்கள் ஜெ.செல்வராஜன், ஆர்.முரளி, எஸ்.ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வக்கீல்கள் எல்லாரும் மதிப்புக்குரிய மூத்த வக்கீல்களிடம் ஜூனியராக பணியாற்றியவர்கள். அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே, சங்க விதிகளின்படி இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களும் தேர்தல் அதிகாரிகளாக கடந்த 8-ம் தேதி பதவி ஏற்றுவிட்டனர்.

அதேபோல, சங்கத்தின் 3,200 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாருக்கும் வாக்காளர்களின் பெயர், முகவரி, தொலைப்பேசி உள்ளிட்ட விவரங்களை கொடுக்க முடியாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று முடிவான பின்னர், அவர்களுக்கு மட்டுமே வாக்காளர் பெயர் பட்டியல் வழங்கப்படும்.

மேலும், வாக்காளர்கள் பெயர் பட்டியல் நடிகர் சங்கத்தின் விளம்பர பலகையில் ஒட்டப்படும், உறுப்பினர்கள் அதில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

தனியார் சங்கங்களின் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கேட்பது இப்போது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. எனவே, தனியார் தொழிற்சங்கங்களின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நல்லதொரு வாய்ப்பு இந்த ஐகோர்ட்டுக்கு கிடைத்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் பதவி வகித்த ஒரு நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, தரம் தாழ்த்தக்கூடாது.

தேர்தலில் தோல்வியடைபவர்கள் தேர்தல் வழக்கை சிவில் (கீழ்) கோர்ட்டுகளில் தொடரும்போது, அதில் தேர்தல் அதிகாரி என்ற ரீதியில் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்த வேண்டியது வரும்.

‘வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் தேர்தல் நடந்தால், அங்கு இடநெருக்கடி ஏற்படும்’ என்று மனுதாரர்கள் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், அந்த அலுவலகம் 7.5 கிரவுண்டு நிலத்தில் அமைந்துள்ளது. அங்கு கார்கள் நிறுத்த ஏராளமான இடம் உள்ளது. இடம் போதவில்லை என்றால், அருகே உள்ள ஏவி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் கார்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. எனவே, வடபழனி போக்குவரத்து நெரிசல் பகுதி என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது.

மேலும், இதற்கு முன்பு பலமுறை நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் வேலை நாட்களில் நடந்துள்ளது. அப்போது 75 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. எனவே, தேர்தல் விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. சங்க நடவடிக்கையின் மீது நம்பிக்கை, ஆர்வம் உள்ள நடிகர்கள் வேலை நாளாக இருந்தாலும், வாக்களிக்க வரவேண்டும்.

மேலும், தந்தி டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால் கிருஷ்ணா, ‘வெளியூர் உறுப்பினர்களை தபால் மூலம் ஓட்டு போட அனுமதிக்கமாட்டேன். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஊரை சுற்றிக் காட்டி, ஓட்டுபோட வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் 1,100 வெளியூர் உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வந்து, விதிமுறைகளுக்கு மாறாக அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து, பணம், மதுபானம் உள்ளிட்டவைகளை கொடுத்து ஊரைச் சுற்றிக் காட்டி, வாக்களிக்க வைக்கவேண்டும் என்று மனதாலும், உடலாலும் அவர் தயாராகிவிட்டார் என்பது நிரூபணமாகிறது. இந்த செயல் நடிகர்கள் சங்கத்தின் விதிகளுக்கு எதிரானது ஆகும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்…” என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து மனுதாரர்கள் விஷால் கிருஷ்ணா, நாசர் சார்பில் மூத்த வக்கீல் ரவீந்திரன், ராதாரவி சார்பில் வக்கீல் ரூபட் பர்னபாஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல, நடிகர் பூச்சி முருகனும் நடிகர் சங்கத்தின் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் வருகிற 25-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Our Score