full screen background image

‘அவள் அப்படித்தான்’ வரிசையில் ‘ஒரு தோழன் ஒரு தோழி’..!

‘அவள் அப்படித்தான்’ வரிசையில் ‘ஒரு தோழன் ஒரு தோழி’..!

கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு தோழன் ஒரு தோழி’.

இந்தப் படத்தில் மனோ தீபன், மினிஷ் கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடிக்க, அஸ்திரா, அபிநிதா இருவரும் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். ‘ஹலோ’ கந்தசாமி மிக முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்களும் அதிகம் நடித்திருக்கிறார்கள்.

Oru Thozhan oru Thozhi Movie still - 31

இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் இந்தப் படத்தின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே சென்னை தரமணி அரசு திரைப்பட பயிற்சி கல்லூரியில் படித்த மாணவர்கள்தானாம். மேலும் தமிழ்ச் சினிமாவில் தற்போது இருக்கும் ஒரேயொரு பெண் படத் தொகுப்பாளரான கிருத்திகா இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதோடு இல்லாமல், இந்தப் படத்திற்கு படத்தொகுப்பையும் செய்திருக்கிறார் என்பதும் இன்னொரு சிறப்பு அம்சம்.

ஒளிப்பதிவு –  சிவன்குமார்,  இசை – ஜெய் சுரேஷ், படத்தொகுப்பு – கிருத்திகா, பாடல்கள் – மோகன் ராய், பெ.மோகன், மாகாதாரா, தயாரிப்பு மேற்பார்வை – மகாதாரா, தயாரிப்பு – கிருத்திகா,  ராஜேஷ்,  பால்டிப்போ கதிரேசன், எழுத்து – இயக்கம் – பெ.மோகன்.

Oru Thozhan oru Thozhi Movie still - 16

படம் பற்றி பேசிய இயக்குநர் பெ.மோகன், “இந்தப் படம் நிச்சயம் வழக்கமான படம் இல்லை. தமிழ் ரசிகர்களுக்கு மிக, மிக வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தரப் போவது உறுதி..” என்றார் நம்பிக்கையோடு.

அவர் மேலும் பேசுகையில், “யதார்த்தத்தை நேசிக்கும் தமிழ்ப் பட ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக விருந்தாக அமையும். இதை நாங்கள் பெருமிதத்தோடும், தைரியத்தோடும் சொல்கிறோம். படம் பார்த்துவிட்டு ரசிகர்களும் நிச்சயமாக இதனை ஒப்புக் கொள்வார்கள்.

Oru Thozhan oru Thozhi Movie still - 22

பொறியாளரிடம் நாம் மருந்து கேட்பதில்லை, மருத்துவரிடம் வீடு கட்டித் தரச் சொல்லி வற்புறுத்துவதில்லை. அந்த வகையில் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க D.F.Tech மாணவர்கள்தான் டெக்னீஷீயன்களாக பணியாற்றியுள்ளனர். 1999 – 2000-ம் ஆண்டில் சென்னை தரமணியில் உள்ள அரசு திரைப்பட பயிற்சி கல்லூரியில் படித்த D.F.Tech மாணவர்களால் இந்த படம் உருவாகியுள்ளது.

ராஜபாளையம் பகுதியில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமா  மொழியில் இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது.

Oru Thozhan oru Thozhi Movie still - 7

ரசிகர்கள் எதிர்பார்க்கும் நாயகியா அல்லது கதை எதிர்பார்க்கும் நாயகியா என்ற  போட்டியில் கதையே வென்றதால், கதைக்கு ஏற்றவாறு யதார்த்தமான, அந்த வட்டார மக்களை பிரதிபலிக்கும் தோற்றத்துடன் இருக்கும் கதாநாயகி அஸ்தரா இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

யதார்த்தவாத கதையை மிக யதார்த்தமாகவே படமாக்கியதால், ஒப்பனை என்கிற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் அனைத்து நடிகர்களுமே ஒப்பனையில்லாமல்தான் நடித்திருக்கிறார்கள். காட்சிகளின் வேகத்தை குறைக்கும் செயற்கை குத்தாட்டங்களும், சண்டை காட்சிகளும் இப்படத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

oru thozhan oru thozhi-poster-1

சினிமாவை நேசித்து, சுவாசித்து படித்து, வாழ்க்கையாக எண்ணிக் கொண்டிருப்பவர்களின் ஒரு உன்னத படைப்பு இந்த படம். சுருக்கமாக சொன்னால், ‘அவள் அப்படித்தான்’ வரிசையில் அடுத்து வருவது இந்த ‘ஒரு தோழன் ஒரு தோழி’ திரைப்படம்தான்.

100 வருட தமிழ் சினிமாவில் முதல் பெண் படத் தொகுப்பாளாராக இருக்கும் கிருத்திகாவுக்கு படத் தொகுப்பில் இது இரண்டாவது படம்.  இவர் படத் தொகுப்பு செய்த முதல் படம் 2011-ம் ஆண்டு வெளியான ‘உயிரின் எடை 21 அயனி’.

தவறான படங்களை புறக்கணித்து அதே சமயம் தகுதியான நல்ல படங்களுக்கு ஆதரவு அளித்து கை தூக்கிவிடும் ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கி வரும் ஜூன் 26, வெள்ளியன்று திரைக்கு வருகிறது ‘ஒரு தோழன் ஒரு தோழி’. ரசிகர்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்…” என்கிறார் உறுதியாக.

படம் வெற்றி பெற நாமும் வாழ்த்துகிறோம்..!

Our Score