full screen background image

“மது பழக்கத்தால் பெரிதும் அவமானப்பட்டேன்” – நடிகர் முத்துக்காளையின் அனுபவப் பேச்சு

“மது பழக்கத்தால் பெரிதும் அவமானப்பட்டேன்” – நடிகர் முத்துக்காளையின் அனுபவப் பேச்சு

குடிப் பழக்கத்தினால் நான் பெரிதும் அவமானப்பட்டிருப்பதாக நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற ‘தொடாதே’ திரைப்பட விழாவில் பேசும்போது இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தத் ‘தொடாதே’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கும், என் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுவை தொட்டால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

ஊரில் இருந்து நான் சென்னைக்கு வந்ததே, ஸ்டண்ட் கலைஞனாக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அந்த ஸ்டண்ட் யூனியன் விழா ஒன்றில் என்னால் சரியான முறையில் செயல்படவில்லை. அதற்கு காரணம் மது. அந்த மதுவால் அப்போது அங்கு அவமானப்பட்டேன். அதனால், இனி அந்த மதுவை தொடக் கூடாது என்று முடிவு செய்தேன்.

ஐந்து வருடங்களாக நான் மது குடிப்பதில்லை. இன்று என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நடிப்பதோடு, படிக்கவும் செய்கிறேன். இரண்டு டிகிரி முடித்துவிட்டேன். மது பழக்கத்தை விடுவது என்பது சுலபமான காரியம் அல்ல. இப்போது பலரும் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இறந்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதில் இருந்து மீண்டு வந்தேன். இப்போது வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் ‘தொடாதே’ படம் மூலம் பலரும் மது பழக்கத்தில் இருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற விழிப்புணர்வு படங்கள் நிறைய வர வேண்டும். இப்படி ஒரு படத்தை இயக்கிய அலெக்ஸ் சார், தயாரித்த எஸ்.ஜெயக்குமார் சார் மற்றும் நடிகர் காதல் சுகுமார் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன்.” என்றார்.

Our Score