பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஆம்ரோ கிங்ஸ்’ நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ‘ஆம்ரோ சினிமா’ என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது.
இந்த ‘ஆம்ரோ சினிமா’ நிறுவனத்தின் முதல் படைப்பு ‘RAT’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் நடிக்கிறார். மேலும், ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த சாயா தேவியும், சின்னத்திரை நடிகையான கன்னிகாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சில பிரபல நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சீனிவாஸ் தேவாம்சம், வசனம் – கருந்தேள் ராஜேஷ், இசை – அஸ்வின் ஹேம்நாத், பாடல்கள் – சினேகன், படத் தொகுப்பு – இக்னேசியஸ் அஸ்வின், கலை இயக்கம் – முஜிபுர் ரஹ்மான்,இணை தயாரிப்பாளர் – நேரு தாஸ், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக். கதை, திரைக்கதை, இயக்கம் – ஜோயல் விஜய்.
டிஜிட்டல் கந்து வட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் இந்த ‘RAT’ படம் உருவாகிறது.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. தொழில் நுட்பத்தை வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் – எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்து கொள்வது தெரிய வரும். இது உண்மையில் ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறி வருகிறது.
இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது..? அதன் பின் அவர்களுக்கு என்ன ஆனது..? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா..? இல்லையா..? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் இந்த RAT படம்.
‘RAT’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.