மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ என்கிற அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நடிகர் மம்முட்டி தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார்.
அனைத்து தென்னக மொழி நடிகர்களுக்கும் பொதுவானதாக சென்னையில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திலிருந்து தமிழகம் தவிர மற்ற மொழி மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் காலப்போக்கில் பிரிந்து சென்று அவரவர் மாநிலத்தில் தங்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்துக் கொண்டார்கள்.
அந்த வகையில் கேரளாவில் அமைத்திருக்கும் நடிகர்கள் சங்கத்திற்கு ‘அம்மா’ என்று பெயர். (AMMA – Association of Malayalam Movie Actors) இந்த அமைப்பிற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது.
“ஏற்கெனவே சென்ற முறை இருந்தவர்களே இந்த முறையும் தொடரலாம். தேர்தல் தேவையில்லை…” என்று சங்க உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கேட்டுக் கொண்டதால், பழைய நிர்வாகிகளே மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
சங்கத்தின் தலைவராக நடிகர் இன்னசென்ட் மீண்டும் தேர்வாகியுள்ளார். மோகன்லாலும், கே.பி.கணேஷ்குமாரும் துணைத் தலைவர்களாக உள்ளனர். திலீப் பொருளாளராக இருக்கிறார். எடவெல பாபு செயலாளராக மீண்டும் தேர்வாகியுள்ளார். இதில் கூடுதலாக நடிகர் மம்முட்டி ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் மீண்டும் அப்படியே தேர்வாகியுள்ளனர். ஆசீப் அலி, குக்கு பரமேஷ்வரன், தேவன், கலாபவன் சாஜோன், மணியம்பிள்ளை ராஜூ, முகேஷ், நெடுமுடி வேணு, நிவின் பாலி, ரம்யா நம்பீசன், சித்திக் என்ற இவர்கள்தான் அந்த 11 பேர் கொண்ட செயற்குழுவினர்.
நேற்று தேர்வு செய்யப்பட்ட இந்த நிர்வாகிகளுக்கு வரும் ஜூன் 28-ம் தேதி கூடவுள்ள ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவிருக்கிறது. தலைவரான இன்னசென்ட்டும், செயலாளரான எடவெல பாபுவும் தொடர்ச்சியாக 6-வது முறையாக அந்தப் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒற்றுமை தமிழ்நாட்டில் இல்லையே..?