நடிகர் கார்த்திக் குடும்பத்தின் சொத்து விவகாரம் நேற்றைக்கு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது சொத்துக்களை தனது அண்ணன் கணேசனும் அவரது மனைவியும் ஏமாற்றி பறித்துவிட்டதாக நடிகர் கார்த்திக் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் செய்தி இந்தப் பதிவில் உள்ளது.
மேலும் இது தொடர்பாக தனது அண்ணன், அண்ணி மீது தனது ஒட்டு மொத்தக் குடும்பமே கோபமாக இருப்பதாகவும், மற்றைய குடும்ப அங்கத்தினர்களை அவர்கள் ஏமாற்றிவிட்டதாகவும் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார் நடிகர் கார்த்திக். இந்தச் செய்தியும் இந்தப் பதிவில் உள்ளது.
ஆனால் நேற்றைக்கு நடிகர் கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனாவே போலீஸில் புகார் கொடுத்து இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
சுலோச்சனா தனது புகாரில், “எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்த மகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன். என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை.
அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் போலீஸ் நடவடி்க்கை இருக்குமா இல்லையா என்பதுதான் தெரியவில்லை..!