‘ஆம்பளை’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சியில் இருந்தாலும் ‘பூஜை’ படத்தின் முன்னேற்றம், தியேட்டர் கலெக்சன் பற்றியும் நடிகர் விஷால் அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்.
திருப்பூருக்கு பூஜை படத்தின் விழாவுக்காக சென்றபோது அந்த ஊரில் திருட்டு டிவிடி விற்ற கடைகளை சோதனையிட்டு போலீஸுக்கு தகவல் அளித்து அவர்களை கைது செய்ய வைத்துள்ளார்.
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைபேட்டை அருகேயுள்ள ஒரு டிவிடி கடையில் புதுப்பட டிவிடி விற்பது விஷாலுக்கு தெரிய வந்தது. அவரது உதவியாளரை கடைக்கு அனுப்பி புதுப்பட டிவிடி இருக்கிறதா என விசாரிக்குமாறு கூறினார். உதவியாளர் சென்று கேட்டபோது, ‘பூஜை’, ‘கத்தி’, ‘ஹேப்பி நியூ இயர்’ உட்பட பல்வேறு புதுப்பட டிவிடிக்கள் அந்தக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து விஷால் தரப்பில் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் டிவிடி கடையில் ரெய்டு நடத்தி டிவிடி விற்ற திருப்பூரை சேர்ந்த முத்துராஜ் (27) என்பவரை கைது செய்து 100க்கும் மேற்பட்ட புதுப்பட டிவிடிக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பொள்ளாச்சியிலும் பெருமாள் செட்டி வீதியில் உள்ள ஒரு டிவிடி கடையிலும் புதிய தமிழ்ப் படங்கள் விற்பனை ஆவதை அறிந்த நடிகர் விஷால் தன்னுடன் வந்திருந்த நடிகர்கள் சதீஷ், வைபவ் ஆகியோருடன் அதிரடியாக கடையினுள் நுழைந்து சோதனையிட்டுள்ளார்.
பின்பு காவல்துறையை வரவழைத்து அவர்களிடத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்தக் கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளாராம்.
இது தொடர்பாக பொள்ளாச்சியில் நேற்று நிருபர்களிடம் பேசிய நடிகர் விஷால், “பொள்ளாச்சியில் ஒரு கடையில் கத்தி, பூஜை திரைப்படங்களின் திருட்டு டிவிடிக்களை பிடித்துள்ளோம். திருட்டு டிவிடி விற்பது.. அதில் படம் பார்ப்பது சட்டப்படி குற்றம். தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்.. திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள். பல பேர் உழைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடுகிறோம்..
எனது ரசிகர்களுக்கும், நடிகர் விஜய் ரசிகர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.. நீங்கள் உங்கள் ஊரில் உள்ள டிவிடி கடைகளில் திருட்டு டிவிடிக்கள் விற்பனையாகிறதா என்று சோதனை நடத்துங்கள். அப்படி விற்பனை செய்வது தெரியவந்தால் போலீஸில் புகார் செய்யுங்கள்..” என்றார்.
வரவர இந்த நாட்டுல சினிமா ஹீரோக்களே களத்துல குதிச்சுத்தான் நியாயத்தை நிலை நாட்டணும் போலிருக்கே..?
இது ஓகே.. இது மாதிரியே சினிமா தியேட்டர்களுக்கும் ஒரு ரவுண்டு அடிச்சு அதிகமான விலைக்கு விற்கும் தியேட்டர்காரங்க.. பிளாக்ல டிக்கெட்டை விற்பனை செய்பவர்கள்.. ஏ.சி. வசதிக்கான பணத்தை வாங்கிட்டு ஏ.சி. போடாமல் ஏமாற்றும் தியேட்டர் அதிபர்களையும் அண்ணன் விஷால் பிடிச்சுக் கொடுத்தால் அப்பாவி ரசிகர்களுக்கு சந்தோஷமா இருக்கும்..!