full screen background image

தன்னுடைய அண்ணன் மீது சொத்து அபகரிப்பு புகார் அளித்துள்ளார் நடிகர் கார்த்திக்..!

தன்னுடைய அண்ணன் மீது சொத்து அபகரிப்பு புகார் அளித்துள்ளார் நடிகர் கார்த்திக்..!

நடிகர் கார்த்திக்கின் குடும்ப சண்டை போலீஸ் ஸ்டேஷன் படியேறியுள்ளது.

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் தனது தந்தை வாழ்ந்த அதே வீட்டில்தான் தனது தாயுடன் வசித்து வந்தார்.

சென்ற மாதம் ஒரு நாள் அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக தனி வீடு பார்த்துச் சென்றுவிட்டார். குடும்பத்தில் சொத்துச் சண்டை பெரிதாகி.. கார்த்திக்கின் பெயருக்கு எந்தச் சொத்தும் இல்லை என்று அவரது அண்ணனும், அண்ணியும் கூறியதால் தனியே சென்றதாக கார்த்திக்கின் நலம் விரும்பிகள் கூறினார்கள்.

தனியே வாழ்ந்தாலும் அது பற்றி எந்தக் கவலையுமில்லாமல் சமீபகாலமாக பல விழாக்களில் கலந்து கொண்டார் கார்த்திக். இப்போது ‘அனேகன்’ படத்தில்கூட தனுஷுடன் இணைந்து நடித்திருக்கிறார் கார்த்திக்.

அதேபோல் கார்த்திக் துவக்கியிருந்த ‘நாடாளும் மக்கள் கட்சி’ என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் இருக்கிறது. சினிமாவிலும், அரசியலிலும் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில் இருக்கும் கார்த்திக்கிற்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையும் இப்போது மனக்கவலையாக்கியிருக்கிறது..

நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது அண்ணனின் மீது கார்த்திக் தன்னுடைய சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக புகார் கொடுத்திருப்பதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கார்த்திக் அளித்துள்ள மனுவில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார், சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்துள்ளனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திக்கின் இரண்டு மனைவிகளும், இதே சென்னையில் தத்தமது குழந்தைகளுடன் தனியே வாழ்கிறார்களாம். இப்போது கார்த்திக்கும் தனியே வசிக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது..!

Our Score