நடிகர் கமல்ஹாசன் வாராவாரம் ‘குமுதம்’ பத்திரிகையில் தனது கலையுலக நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருவது தெரிந்ததே..! சென்ற வாரத்திய ‘குமுத’த்தில் கே.பாலசந்தரை கடைசியாக சந்தித்தது பற்றி கூறியிருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்.சி கேட்ட, “உங்களது வாழ்வில் மறக்க முடியாத தருணம் எது.” என்ற கேள்விக்கு கமல் அளித்துள்ள பதில் இப்போதைய பொருத்தமான சூழலைக் காட்டுகிறது.
கமல்ஹாசனின் பதில் :
“அப்படியொரு தருணம் சமீபத்தில் 2014 நவம்பர் 7-ம் தேதி நடந்தது. திரு.கே.பி. என்னை என் பிறந்த நாள் அன்று பார்க்க விரும்புவதாகவும் தானே நேரில் வருவதாகவும் சேதி அனுப்பினார்.
நானே நேரில் சென்று சந்தித்தேன். அவரை வணங்கிய என்னை வழக்கத்திற்கு அதிகமாக வெகுநேரம் அவரது அரவணைப்பில் வைத்திருந்தார். பின் ‘The finest actor in india’ என்றவர்.. மேலும் ‘உலகத்திலேயே ஒரு நடிகன் உலகின்னும் உணரவில்லை’ என்றார்.
42 வருடங்களுக்கு முன்னால் அதே பக்வத்சலம் சாலையில் (அப்போது டிசில்வா ரோடு) அவர் பாதம் தொட்டு வாழ்த்துப் பெற்றது நினைவுக்கு வந்தது.
42 வருடங்கள் ஒரு தருணமாகச் சுருங்கிய விந்தையையும், என்னை நடிகனாக்கியதில் அவருக்குப் பங்கே இல்லாததுபோல், ஒரு கமல் ரசிகனாக மாறி அவர் வியந்ததையும் ஊரறிய கூவிச் சொல்லத் தோன்றியது. உங்கள் கேள்வியின் மூலம் அது சாத்தியப்பட்டது. நன்றி..”