தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு டப்பிங் சீரியல்களுக்கெதிராக திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைதியான முறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறதாம்.
இது குறித்து நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான இயக்குநர் தளபதி பேசுகையில், “அங்கொன்றும், இங்கொன்றுமாக டப்பிங் சீரியல்கள் தமிழ்ச் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது புற்றீசலாக அனைத்து சேனல்களிலுமே டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலைமை எங்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
சீரியல்களை நம்பியே எங்களது சங்கத்தைச் சேர்ந்த 20000 தொழிலாளர்கள் குடும்பங்கள் இருக்கின்றன. இந்த டப்பிங் சீரியல்களால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சிறுக சிறுக பல நடிகர், நடிகையருக்கும் வேலை கிடைக்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பாக நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவர்களெல்லாம், இப்போது மாதக்கணக்கில் வீட்டில் இருக்கிறார்கள். காரணம் சீரியல்கள் தயாரிப்பு குறைந்து கொண்டே போகிறது.
மிகக் குறைந்த விலையில் வெறும் 20000 ரூபாயில் டப்பிங் சீரியலை வாங்கி டெலிகாஸ்ட் செய்வதால் அந்த டிவிக்களுக்கு நிறைந்த லாபம் கிடைக்கிறது. ஆனால் இதையே நம்பியிருக்கும் எங்களுக்கு யார் வேலை தருவது..?
ஹிந்தி சேனல்களின் வீச்சு அதிகம். அதனால் அங்கே சீரியல்களின் மூலம் கிடைக்கும் லாபமும் அதிகம். அதனால்தான் அவ்வளவு ரிச்சான, பகட்டான உடைகள், ஆடம்பரமான வீடுகள். நிறைய லொகேஷன்கள் என்று பார்ப்போரை கவரும் வண்ணம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழில் நிலைமை அப்படியில்லை.
தயாரிப்பாளர்களின் கையைக் கடிக்காமல் சீரியல் முடிந்தாலே போதும் என்று நினைப்பது போலத்தான் தமிழ் சீரியல்களின் தயாரிப்பு நிலைமை இருக்கிறது. ஆகவே இதற்கேற்றாற்போலத்தான் நாமும் இங்கே காட்சிகளை வைக்க முடியும்..
இது போன்ற டப்பிங் சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள்வரை அனைத்தையும் நமது பெண்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை, நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும். இதையும் கருத்தில் கொண்டுதான் இந்தப் போராட்டத்தை துவக்கியிருக்கிறோம்.
உண்மையில் இது போராட்டம் என்றுகூட இல்லை. டப்பிங் சீரியல் பற்றிய அறவழி விழிப்புணர்வு முயற்சி என்று வேண்டுமானாலும் சொல்லலாம். நாங்கள் யாரையும் குற்றம் குறை சொல்லியோ, தாக்குவதற்காகவோ, திட்டுவதற்காக இதனை ஆரம்பிக்கவில்லை. அது எங்களுடைய நோக்கமும் இல்லை. டப்பிங் சீரியல்களால் சின்னத்திரை கலைஞர்கள் பாதிக்கப்படும் அவலத்தை அரசின் கவனத்திற்கும், பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லவே இந்த ஏற்பாடு.
மேலும் இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரியதிரைவரை உள்ள சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் கையெழுத்து வாங்கி அதை மாண்புமிகு அம்மா அவர்களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.










