full screen background image

நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜோதிலட்சுமி.

jyothilakshmi-2

1959-ம் ஆண்டே ‘காத்தவராயன்’ படத்தில் பேபி ஜோதியாக அறிமுகமானார். 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஜோதிலட்சுமி. இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கட்டோடு குழலான ஆட’ பாடல் காட்சியில் சரோஜாதேவியுடன் ஜோதிலட்சுமியும் நடித்திருப்பார். எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1965-1975 காலகட்டங்களில் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். ‘பூவும் பொட்டும்’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் ஜோதி லட்சுமி. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடன தாரகையாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முறையாக பரதநாட்டியம் பயின்றவர். இவர் நடிகை ஜெயமாலினியின் சகோதரியாவார்.

மலையாளத்தில் இவரது முதல் படம் ‘முறைப்பெண்ணு’. அதன் பின் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குநர் பாலாவின் ‘சேது’ படத்தில் ‘கானக் கருங்குயிலே’ பாடலுக்கு நடனமாடினார். இது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் இப்படத்திற்குப் பின்னர் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் மீண்டும் ஒரு வலம் வந்தார்.

தமிழில் நாகேஷ் அவர்களுடனும், தெலுங்கில் அல்லு ராமலிங்கையாவுடனும் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார் ஜோதி லட்சுமி.

இவரது மகள் ஜோதி மீனா நாற்பதிற்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களிலும் 3 தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின்போது தனது தங்கை ஜெயமாலினியோடு வந்து கலந்து கொண்டார்.

சமீப நாட்களில் அவருக்கு ரத்தப் புற்று நோய் இருப்பது தெரிந்து அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு வீட்டிலேயே அவருடைய உயிர் பிரிந்தது..!

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்..!

Our Score