full screen background image

ஜெடூசி – சினிமா விமர்சனம்

ஜெடூசி – சினிமா விமர்சனம்

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் வழங்க, நட்ராஜ் ஏகாம்பரம் மற்றும் விஜயசாந்தி ஸ்ரீதர் தயாரித்திருக்கும் இந்த ‘ஜெடூசி’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் நட்ராஜ் ஏகாம்பரம்.

ஸ்ரீதர் – சக்தி(ஹீரோ),

ஸ்வேதா – காவேரி (ஹீரோயின்),

சினி யுதன் – அனு (2வது ஹீரரயின்),

பிளாக் பாண்டி – சின்னா(காமெடியன்)

பவா செல்லதுரை – கொம்பன் (ஹீரோயினின் அப்பா),

ஜெயந்தி மாலா – வள்ளி (ஹீரோவின் அம்மா),

ஏ.வெங்கடேஷ் (எ) ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷ்,

அருவி மதன் (டி.எஸ்.பி. விக்ரம்), அசோக் பாண்டியன் – (கண்ணபிரான்).

தொழில் நுட்பக் கலைஞர்கள்:-

இசை – விக்னேஸ்வரன், ஒளிப்பதிவாளர் – நாக அர்ஜுன், படத் தொகுப்பு: எஸ். பி. அகமது, கலை இயக்கம்: செல்வராஜ், சண்டைப் பயிற்சி: கௌதம் ஹரி, அசால்ட் மதுரை, பத்திரிக்கை தொடர்பு – சரண்.

‘ஜெடூசி’ என்பது திருவண்ணாமலை  மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலைத் தொடரில் வசிக்கும் மலைவாழ் பெண்கள் தங்கள் கொண்டையில் சொருகி இருக்கும் ஊசி.

இந்த ஊசிதான் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம் பிடித்திருக்கிறது. அதனால்தான் இதற்குப் பொருத்தமாக ‘ஜெடூசி’ என்றே பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர்.

திருவண்ணாமலையில் ஒரு புகழ் பெற்ற கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று ஏழு பேர் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் ஒரே மாதிரியாக!. தடயங்களை அழிப்பதற்காக கெமிக்கலையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

போலீஸ் குற்றவாளிகளை வீசி தேடி வருகிறது. இதற்காக டி.எஸ்.பி. விக்ரமின் தலைமையில் தனி டீமும் அமைத்து மும்முரமாக விசாரித்து வருகிறார்கள்.

இவர்களது விசாரணைக்கு சிசிடிவி எந்த விதத்திலும் பலனளிக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனை சுற்றி இருக்கும் சிசிடிவிகளையும் அந்தக் கல்லூரியை சுற்றி இருக்கும் சிசிடிவிகளையும் சர்வீஸ் செய்வது ஒரே சென்டர்தான்.

சக்தி என்ற ஸ்ரீதர்தான் இந்த சிசிடிவிகளை சர்வீஸ் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பிளாக் பாண்டிதான் அந்தக் கடையின் உரிமையாளர்.

போலீஸ் விசாரணையில் கல்லூரியின் தாளாளரான தொழில் அதிபர் ஏ.வெங்கடேஷ்தான் கொலையாளியின் அடுத்த குறி என்பது போலீசுக்கு தெரிய வருகிறது.

கொலையாளிக்கு முன்பாகவே அங்கே சென்று கொலையாளிக்கு ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கிறார்கள் போலீசார்.

கொலையாளி வந்தானா? போலீஸிடம் பிடிபட்டானா? ஏ.வெங்கடேஷ் என்னவானார் இவருக்கும் கொலையாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? இந்த ஏழு கொலைகளை ஏன் செய்தான்? என்பதெல்லாம் படத்தின் பிற்பகுதியில் வரும் திரைக்கதை.

படத்தில் ‘காவேரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வேதாதான் படத்தின் ஹீரோயின். 

மலைவாழ் மக்களுக்கே உரித்தான முகம். ஆனால் களையான முகம். கவர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

எதிர்கால கனவுகளுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும், தன்னுடைய தாய், தந்தையருடன் இருக்கும் பாச காட்சிகளிலும் நடிப்பு தெரியாமல் நடித்திருக்கிறார்.

கல்லூரிக்கு வந்த பின்பு இந்த நவ நாகரிக உலகில் ஒன்ற முடியாமல் அவர் தவிக்கின்ற தவிப்பும், அறைத் தோழிகளுடன் செட்டும் சேர முடியாமல் தவிக்கின்ற தவிப்பிலும் ஒரு 18 வயது மாணவிக்கான மனநிலையை பிரதிபலித்திருக்கிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அவர் கதறி அழுகும் போதும் அந்த கையறு நிலையில் அவர் படும் துயரமும் நமக்குள் ஒரு சோகத்தை தந்திருக்கிறது.

அவருடைய முடிவு இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை திரைக்கதை கொடுத்திருப்பது சற்று சறுக்கல்தான்.

காவிரியின் மாமனாகவும் ஹீரோவாகவும் நடித்திருக்கும் ஸ்ரீதர் வித்தியாசமான ஒரு முகம். இவரும் மலைவாழ் மக்களுக்கு ஒரு பிரதிநிதி போலவே தெரிகிறார்.

அமைதியான, சாந்தமான மனிதரான இவர் பிற்பாடு எப்படி இந்தப் படுகொலைகள் எல்லாம் செய்ய முடிந்தது என்பதை அவர் சொல்லுகின்ற பொழுது ஒரு கணம் அவர் செய்தது சரிதானே என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மிக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஸ்ரீதர். பாராட்டுக்கள்.

மெயின் வில்லனாக நடித்திருக்கும் ஏவெங்கடேஷ் அப்பாவியைப் போல் பேசி அன்பானவரை போல் காட்டிக் கொண்டு கொடூரமானவனாக நடித்திருக்கிறார்.

காவிரியின் அப்பா, அம்மாவாக நடித்த பவா செல்லத்துரையும், ஜெயந்தி மாலாவும் கிராமத்து அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கும் நடிகையும், டி.எஸ்.பி.யாக நடித்திருக்கும் ‘அருவி’ மதனும்கூட இயக்குநர் சொல்லிக் கொடுத்தது போலவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நாக அர்ஜுனின் ஒளிப்பதிவு திருவண்ணாமலையை சுற்றி சுற்றி வளைத்து வளைத்து நமக்கு காட்டி இருக்கிறது.

மலைப்பகுதியையும், கிராமத்து மக்களின் கிராமத்து சுற்றுப்புறத்தையும்கூட அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

விக்னேஸ்வரனின் இசையில் காதல் பாடலும், சோகப் பாடலும் கேட்கும் ரகம். அறிமுக இசை அமைப்பாளர் என்பதால் பரவாயில்லை என்றே சொல்லலாம்.
பின்னணி இசையில் ஒரு பரபரப்பை கொடுத்திருக்கிறார்.

எஸ்.பி.அகமதுவின் படத் தொகுப்பு இந்த படத்திற்கு நிச்சயமாக ஒரு நல்ல பலமாக அமைந்துள்ளது.

இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு இயக்கம் செய்து படத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார். அதையும் தன்னால் முடிந்த அளவு குறிப்பாக சஸ்பென்ஸ் திரில்லராக படத் தொகுப்பு செய்து இருக்கிறார்.

சமீப ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சொல்லுகின்ற படங்கள் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.

இதேபோல் கல்லூரியில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரம் போன்றவைகளை வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டன.

அந்த திரைப்படங்களில் இருந்து இது எப்படி வித்தியாசம் எனில் ஒன்றை ஒன்றுதான்… அது கொலை செய்யும் முறை.

மலைவாழ் பெண்களின் தலையில் அவர்கள் அணிந்திருக்கும் ‘ஜெடூசி’ என்ற அந்த கொண்டை ஊசியை வைத்து அனைவரையும் கொலை செய்து இருக்கிறார் கொலையாளி.

உண்மையில் போலீசாரின் விசாரணையில் கொலையாளியை தேடுகிறார்கள். பின்பு கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறார்கள். அவ்வளவுதான்.

அதற்குப் பின்பு நீதிமன்றத்தில் கொலையாளி செல்கின்ற அந்த சோகக் கதை நம்முடைய மனதில் இடம் பிடிக்கிறது என்றாலும் அதைக் கண்டிக்கும்விதமான விஷயங்கள் நீதிபதியைத் தவிர வேற யாரிடமிருந்தும் வரவில்லை என்பது ஒரு பெரும் சோகம்.

கிளைமாக்ஸ் சீனில் நீதிபதியிடம் இருந்து இப்படி ஒரு ஷாக் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அப்படி துணிந்து ஒரு திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநருக்கு இதற்காகவே நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

அதேசமயம், ஒரு கொலைக்கு இன்னோரு கொலை சரியாகாது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் சினிமாக்காரர்கள் மட்டும் அதுதான் சரி என்பதாகவே நமக்குப் பாடம் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப் பழிக்கும் பழி கொலைகளுக்கு ஒரு எண்டு கார்டை யாரும் போடக் கூடாதா?!

முடியல சாமிகளா!!!

RATING : 3 / 5

Our Score