full screen background image

மௌன மொழிகள் – சினிமா விமர்சனம்

மௌன மொழிகள் – சினிமா விமர்சனம்

நடிகர்கள்:-

ஷகீர் மனோ, அர்ச்​சனா, பி.ஸ்ரீமன், திவ்யா நாகேஷ், அர்ஜுன் – பென்ஸ் பாலா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி, விஜய் கணேஷ்-

தொழில் நுட்ப குழு:-

தயாரிப்பாளர்  பி. பாலச்சந்திரன், பி.ஸ்ரீமன்
கதை , திரைக்கதை,  வசனம்,  பாடல்கள், இயக்க​ம்- ஏசி. சௌந்தர். ஏம்.ஏ.,
இசையமைப்பாளர் – நல. இளந்திரையன்.
ஒளிப்பதிவாளர் – எம்.ஜி ராய்,
பத்திரிக்கை தொடர்பு -சரண்

கவிதையாக தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் படம் என்னவோ, ரொம்பவும் சாதாரணமான ஒரு காதல் படம்தான்.

கதிர் என்ற ஷாகிர் மனோ கொஞ்சம் வசதியானவர். வீட்டுக்கு ஒரே பிள்ளை. விளம்பர நிறுவனம் நடத்தி சின்ன சின்ன விளம்பரங்களை எடுத்து கொடுத்து பிழைப்பை நடத்தி வருகிறார்.

இவரது கண் பார்வையில் படும் பவித்ரா என்ற அர்ச்சனா சிங், மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று கிரீடம் வென்றவர். 

இவரை தான் எடுக்கப் போகும் சோப்பு விளம்பரத்திற்காக நடிக்க கேட்டு பல்பு வாங்குகிறார் ஹீரோ. இருவரும் சில இடங்களில் சந்தித்து சண்டையிட்டுக் கொண்ட பொழுது கொஞ்சம் காதலும் பிறக்கிறது.

இவர்களின் காதல் உச்சத்தில் இருக்கும் பொழுது பவித்ரா ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் காயம் பட்டு அவரது முகம் சிதிலமாகிறது.

திருமணம் நிச்சயம் ஆகி திருமணத்திற்கு காத்திருக்கும் சூழலில் நடந்த இந்த விபத்து கதிர் பவித்ரா இருவரின் வாழ்க்கையும் புரட்டிப் போடுகிறது.

இதற்கு மேல் என்ன நடந்தது?.. இவர்களுக்கு திருமணம் நடந்ததா?.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

‘கதிர்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகனான ஷகீர் மனோ நடித்துள்ளார். பார்ப்பதற்கு மத்திய வயது உடையவர் என்றாலும் பரவாயில்லை. ஒரு ஹீரோவுக்குரிய உடல் தோற்றமும், நடிப்பும் அமைந்துவிட்டதால் படத்தை முழுவதும் தாங்கியிருக்கிறார். பரவாயில்லை என்றும் சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

இயக்குநரும் தன்னால் முடிந்த அளவுக்கான இயக்க திறமையினால் அவரிடம் இருந்து நடிப்பை கொண்டு வந்திருக்கிறார். அதனால் ஹீரோவை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியாது. இன்னமும் நல்ல கதையும், திரைக்கதையும், இயக்குதல் திறமையும் கிடைத்த இயக்குநர் கிடைத்திருந்தால் ஹீரோ ஷாகீர் மனோ இதைவிடவும் சிறப்பாக நடித்திருப்பார்தான்.

ஹீரோயின் பவித்ராவாக நடித்திருக்கும் அர்ச்சனா சிங் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் முகத்தை மூடி தன்னுடைய கண்களாலேயே நடித்திருக்கிறார். படத்தின் துவக்கக் காட்சிகளில் அதிகமாகக் கோபப்பட்டு ஹீரோயின் நண்பனான அர்ஜுனனை ஒவ்வொரு கட்சியிலும் அடிக்கிறார். அந்த கோபம் மட்டும்தான் அவருடைய மிக சிறப்பான நடிப்பாக இந்தப் படத்தில் இருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் கொஞ்சம் அழகாக கட்டப்பட்டிருக்கிறார் அர்ச்சனா சிங்.

இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கும் திவ்யா நாகேஷ் கொஞ்சம் பூசினாற்போல உடம்பு இருந்தாலும், கவர்ச்சியான முகத்துடன் அழகாகவே இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின்படி அவருக்கான நடிப்பை அவர் அழகாகவே காண்பித்திருக்கிறார். இறுதியில் அவர் மனம் மாறுவது எதிர்பாராத திரைக்கதை.

படத்தில் திவ்யாவை முதன்மை ஹீரோயினாகவும் அர்ச்சனா சிங்கை திவ்யா கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஹீரோவின் நண்பனாக படம் முழுவதும் அடிவாங்கியபடியே ஓடி. ஓடி உழைத்திருக்கிறார் அர்ஜுனன். வழக்கமான அப்பாவாக தலைவாசல் விஜய்யும், அம்மாவாக மீரா கிருஷ்ணனும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹீரோயினின் அம்மாவாக அஞ்சலிதேவியும் அப்பாவாக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளவரசனும் தலை காட்டி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.ஜி.ராய் ரகுராம் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பெரிய பட்ஜெட் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவினை வாரி வழங்கி இருக்கிறார். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவினை சற்று கூடுதலாகவே உயர்த்தியும் இருக்கிறார்.

இசையமைப்பாளர் நள இளந்திரையனின் இசையில் பாடல்களும், இசையும் அசத்தல். “காதலியே” பாடல் சிறப்பான மெலடி ஃபாஸ்ட் பீட்டில் பாடல் வரிகளும் எளிதாக காதில் புகும் அளவுக்கு பாடி இருக்கிறார் பாடகர். பாராட்டுக்கள்.

திவ்யா நாகேஷ் ஆடி பாடும் “கலியுக காலமடா” பாடலின் வரிகள் காதிலேயே நுழையவில்லை. அந்த அளவுக்கு கொடூரமாக பாடியிருக்கிறார் பாடகர். ‘டிமிக்கி கொடுக்கிறா மாமூ” பாடல் தூங்கும் ரசிகர்களை எழுப்பிவிட உதவும் அளவுக்குத் தீயாய் இருக்கிறது. “காற்றே நீ” பாடலும் நடனமும், சிம்ப்ளி சூப்பர். ஆனால், பாடகரின் குரல் மட்டும்தான் நமக்கு இடிக்கிறது.

சேது ரமணனின் படத்தொகுப்பு படத்தின் கதை, திரைக்கதையை இறுக்கமாக்கி தந்திருக்கிறது. இருந்தாலும் இடையே வரும் சம்பந்தமே இல்லாத சிரிப்பை வராத காமெடிகளை கொஞ்சம் நீக்கி இருக்கலாம். மேலும், யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு வசனங்கள் ஒலிப்பதையும் தவிர்த்து இருக்கலாம்.

படத்தின் இயக்குநரான ஏ.சி.சௌந்தர் புற அழகைவிட அக அழகுதான் முக்கியம். முகத்தைவிட மனம்தான் முக்கியம். காதலில் இரு மனம் ஒருமிப்பதுதான் காதல் என்பதை தன்னால் முடிந்த அளவுக்கு, தனக்குத் தெரிந்த அளவுக்கு இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

கதை, திரைக்கதையை சொல்லியவிதத்திலும் இயக்குதலின் திறமையிலும் இயக்குநரிடம் போதாமையிருப்பது தெரிய வந்தாலும்… பாடல், இசை, ஒலிப்பதிவு, பாடல் காட்சிகள் படமாக்குதல், மற்றும் தொழில் நுட்பத்திலும் சிறப்பை கூடுதலாகக் கொடுத்து மற்றதை பேலன்ஸ் செய்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.. காதலிக்க இருப்பவர்கள்… ஒரு முறை இந்தப் படத்தை நிச்சயமாக பார்க்கலாம்.

RATING : 3 / 5

Our Score