தியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழியில், ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘பாக்கெட் நாவல்’!
சில கூட்டணிகள் மீண்டும் இணையும்போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
அந்த வகையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ எனத் தனது வித்தியாசமான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜா குமாரராஜா.
அந்த வரிசையில், ‘பாக்கெட் நாவல்’ படத்திலும் தனது தனித்துவமான பாணியைத் தொடர்ந்திருக்கும் அவர், இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான ஒரு கதையை உருவாக்கியுள்ளார்.
ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், கதாப்பாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனப் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களது அனுபவங்களையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
இதனால், ரசிகர்கள் தங்களைப் படத்தின் கதையோடு எளிதாகப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் எனப் படக் குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
மற்றொரு சுவாரஸ்யமாக, வழக்கமாகத் தனது படங்களின் படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும் தியாகராஜா குமாரராஜா, இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி குறுகிய காலத்திலேயே நிறைவு செய்துள்ளார்.
விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ராஜ் பி. ஷெட்டி முதல் முறையாக தமிழில் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வருவதும் ‘பாக்கெட் நாவல்’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படக் குழு விவரம்:
நடிகர்கள்: விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர்
இயக்கம்: தியாகராஜா குமாரராஜா
கதை மற்றும் திரைக்கதை: ஆண்ட்ரூ லூயிஸ்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
படத்தொகுப்பு: சத்யராஜ் நடராஜன்
கலை இயக்கம்: வி. சண்முகராஜா
சண்டைப் பயிற்சி: திலீப் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு: எஸ்.டி. எழில்மதி
தயாரிப்பு: தியாகராஜா குமாரராஜா, எஸ்.டி. எழில்மதி
தயாரிப்பு நிறுவனங்கள்: டைலர் டர்டன், கினோ ஃபிஸ்ட்









