நடிகர்கள் :
ரஜித் சிஆர் (பிரஜித் / அமுதன்)
தீப்ஷிகா (ஆரா / அஜிலா)
ஸ்ரீராம் கார்த்திக்
நக்சா சரண்
வி.ஜே. பப்பு
ஜி.எம். குமார்
சுஜாதா
வணக்கம் கந்தசாமி
கராத்தே ராஜா
ஈஸ்வர்பாபு
மஞ்சு
எல்.வி. அதவன்
வழக்கறிஞர் பாபு
ராம்ஸ்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :
எழுத்து & இயக்கம்: வீ.ஜே. மீனாட்சி சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம்: பிளாக் அண்ட் வைட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்: டி. ஜூட் அனந்த்
இணைத் தயாரிப்பாளர்கள்: ஆர். ராஜேஷ், டாக்டர் கே.எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்) , கடையனேந்தல் ஆர்.ஏ. பீட்டர்
இசை: மாறா
ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ.
படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
கலை இயக்கம்: ராம்ஜி
நடன அமைப்பு: தீனா
ஒலிப்பதிவு: டோனி ஜே
சிறப்பு ஒலி விளைவுகள் (SFX): கிஷோர் காமராஜ்
ஃபோலி: தினேஷ் நாராயணன்
டப்பிங் பொறியாளர்: முகமது ரிஸ்வான்
விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX): ஜீவரத்தினம் ஆர்.
ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தினி
ஆடைப் பொறுப்பாளர்: எஸ்.பி. சுகுமார்
ஒப்பனை: வேல்முருகன்
விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்
படப்பிடிப்பு புகைப்படங்கள்: அஜய்
நிர்வாகத் தயாரிப்பாளர்: என். குழந்தைவேலு (மஞ்சு சினி எக்யூப்மென்ட்ஸ்)
லைன் புரொட்யூசர்: குருவேல் கார்த்திக்
தயாரிப்பு மேலாளர்: ஏ.வி. பழனிசாமி
பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ் K அகமது, பாரஸ் ரியாஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஏ.எஸ். பக்தீஸ்வரன், ஆர்.ஜே. முகமது ரஃபி மீரான் , ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்
டிஜிட்டல் பார்ட்னர்கள்: உய்ரே மீடியா, இன்ஃபினிட்டி பிளஸ் டிஜிட்டல், மீடியா சினிமாக்ஸ்
ஆடியோ உரிமை: சரிகமா இந்தியா லிமிடெட் (RPSG குழுமம்)
விநியோகப் பங்குதாரர்: ஷாலினி சினி கிரியேஷன்ஸ்
காதல், கல்யாணம், ஆனவக் கொலை என்ற கதையை முன் ஜென்மக்கதையாக மாற்றி அதற்கு சஸ்பென்ஸ், திரில்லர் என்ற பெயிண்ட்டெல்லாம் அடித்து இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஹீரோ ரஜித் காடுகள் பற்றிய ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கிறார். இது பற்றி தன்னுடைய ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக கொடைக்கானல் அருகில் இருக்கும் பூம்பாறை கிராமத்திற்கு வருகிறார்.
இவர் வந்த நேரத்தில் தங்குவதற்கு வசதி இல்லாததால் அதே ஊரில் இருக்கும் இன்னொருவரின் வீட்டில் தங்க வைக்கப்படுகிறார் ரஜித்.
அந்த வீட்டில் இருக்கும் நக்சா சரண் ஏதோ நெடுநாள் பழகிய குடும்ப உறவினரை போல ரஜித்தை விழுந்து, விழுந்து கவனிக்கிறார். நக்சா சரணின் உபசரிப்பில் திக்கித் திணறிப் போகும் ரஞ்சித் அந்த வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது நக்சாவைக் காதலிப்பதாகப் சொல்கிறார். ஆனால் நக்சாவோ தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி அழுகிறார்.
அதோடு அந்த ஊரில் இருந்து கிளம்பி தன்னுடைய சொந்த ஊரான கொச்சிக்கு வந்து விடுகிறார் ரஜித். சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய நண்பனுடன் அந்த ஊருக்கு திரும்பி வருகிறார் ரஜித்.
தான் தேடி வந்த நக்சாவைப் பேருந்தில் பார்த்து அவரைப் பின் தொடர்ந்து சென்று பேசுகிறார் ரஜித். ஆனால், நக்சாவோ இவரை யார் என்றே தெரியாது என்கிறார். ஊரே திரண்டு வந்து ரஜித்தையும், நண்பனையும் சாத்துகிறது. போலீஸ் வந்து விசாரிக்கிறது.
அனைத்து விசாரணையிலும் ரஜித் சொல்லுகின்ற அந்த கதாபாத்திரங்கள் அதே ஊரில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ரஜித் யார் என்றே தெரியவில்லை. நக்சா இருந்த வீட்டை தேடிப் போய் பார்க்கிறார் ரஜித். அது இடிந்து சிதிலடைந்து போயிருக்கிறது. அந்த வீட்டைப் பற்றி விசாரிக்கும் பொழுது அதே ஊரில் பல வருடங்களாக பேசாமல் மௌன சாமியாராக இருக்கும் ராம்ஸை அனைவரும் கை காட்டுகிறார்கள்.
இன்னோரு பக்கம் ஒரு பேருந்தில் எழுத்தாளர் ஸ்ரீராம் கார்த்திக் தீப்ஷிகாவை சந்திக்கிறார். முதலில் சண்டையில் துவங்கும் இவர்களது நட்பு அந்தப் பேருந்து பயணத்தில் இறுகிப்போய் இனிய நட்பாகிறது. ஸ்ரீராம் தான் எழுதி இருக்கும் கதையை தீப்ஸிகாவிடம் சொல்கிறார்.
அந்த கதையின்படி ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இருக்கும் அஜிலா என்ற தீப்ஸிகாவை காதலிக்கிறார் அமுதன் என்ற அஜித். இவர்களது காதல் வீட்டுக்கு தெரிய வர அஜிலாவுக்கு வீட்டுக்குள்ளேயே காவல் போடப்படுகிறது. அதிலிருந்து அமுதனும், அஜிலாவும் தப்பித்து பூம்பாறைக்கு ஓடி வருகிறார்கள்.
பூம்பாறை ஊர் தலைவரான ஜி.எம்.குமார் இவர்களை வரவேற்று அஜிலாவை தன் மகள் போல நினைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். அன்றைய இரவில் அந்த ஊரில் நடந்த நிகழ்வுகளால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய குழப்பங்கள் நடந்திருக்கின்றன என்கிறார் ராம்ஸ்.
அந்தக் குழப்பங்கள் என்ன? அன்று இரவில் பூம்பாறையில் என்ன நடந்தது? அமுதனும், அஜிலாவும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இறுதியில் நக்சாவைத் தேடி வந்த ரஜித் என்ற ஆனார் என்பதுதான் இந்தப் படத்தில் புரிந்து கொள்ளப்பட்ட கதை.
ரஜித் இதற்கு முன்பேயே சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவைகள் கவனத்திற்கு வரவில்லை. இந்தப் படத்தில் கொஞ்சம் அழுத்தமான வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். அந்தக் கேரக்டரை சிறப்பாகவே செய்திருக்கிறார். பூம்பாறைக்குத் திரும்பி வந்து நக்சாவையும், மற்றவர்களையும் தேடிப் பிடித்து பேசும்போது ஏற்படும் குழப்பத்தில் தவிக்கும் நடிப்பில் ஓகே என்று சொல்லும் அளவுக்கு செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் செய்த திரைக்கதை குழப்பத்தினால் அதற்கு மேல் அவரை ரசிக்க முடியாமல் போய்விட்டது.
தீப்சிகாவுடனான காதல் போர்ஷனில் மரியாதைக்குரிய காதலனாக இந்த ரஜித்தை ரசிக்க முடிகிறது. இன்னும் சிறந்த இயக்குநர்கள் கையில் ரஜித் கிடைத்தால் இவரால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
நக்சா சரண் முதல் பாதியில் துவக்கக் காட்சியில் இருந்து இடைவேளைவரையிலும் படத்தை நகர்த்தி செல்லும்போது அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடைய முகபாவனைகளும் நடையும், பேச்சும் ஏதோ ஒருவிதத்தில் அவரை கூர்ந்து கவனிக்க வைக்கிறது
ஒரு பக்கம் காதலியாகவும் இன்னொரு பக்கம் பேருந்து நண்பியாகவும் நடித்திருக்கும் தீபக்ஷிகா படத்திற்கு மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம். அவருடைய முக அழகு வெகுவாக கவர்கிறது. காதல் போர்ஷனில் படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக தீப்சிகாவைக் காதல் கொள்வார்கள். அந்த அளவுக்கு அவரது முகபாவனைகள் கவர்ந்திழுக்கின்றன. பூம்பாறையில் நடக்கும் கல்யாண காட்சிகளிலும் அங்கே நடக்கின்ற காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு இயக்குநருக்கு கிடைத்த ஒரு பலம் என்று சொல்லலாம்.
ரஜித்துக்கு நண்பனாக ஓடி வந்து அவ்வப்பொழுது அடி வாங்கி படத்தின் திரைக்கதையை நகர்த்தும்விதத்தில் பல வசனங்களையும் பேசி நடித்திருக்கிறார் வி.ஜே.பப்பு.
கதாசிரியனாக தீப்திகாவுக்கு பேருந்தில் அறிமுகமாகி கதையை முழுவதுமாக சொல்லி முடித்துவிட்டு இது நடந்ததா இல்லையா? முடிவென்ன? என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்பது போல சற்றென்று மறைந்து போகும் ஸ்ரீராம் கார்த்திக், ஒரு வசீகரமான முகத்துக்கு சொந்தக்காரர். அந்த வசீகரத்துடனேயே படத்துக்குள் வந்து சென்று இருக்கிறார்.
பூம்பாறை கிராமத் தலைவராக நடித்திருக்கும் பாசத்தைக் காட்டும் ஜி.எம்.குமார், பால்காரராக நடித்தவர், கீரை விற்கும் பெண்ணாக நடித்தவர், ஊர் மக்கள் என்று மற்ற நடிகர், நடிகையர் அனைவருமே இயக்குநரின் இயக்கத்துக்கேற்ப நடிடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்லும்படியாக இதற்கு மேல் யாரும் நடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.
படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானல் பூம்பாறை கிராம பகுதிகளில் என்பதால் அந்த பகுதியை எந்த அளவுக்கு அழகாக காட்ட முடியுமோ, அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஹீரோயின்கள் இருவருடன் ஹீரோக்களையும் அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். நக்சா சரணின் வீடு செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் மட்டும் அந்த இடத்துக்கே சம்பந்தமில்லாதது போல் தனித்து தெரிகிறது.
மாறாவின் இசையில் ‘உள்ளார உருக வச்ச’ பாடல் நல்ல மெலடி இசையில் உருவாகி உள்ளது. பாடல் காட்சிகளும் சிறப்பாக படம் ஆக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதைவிடவும் கனமான குரல் கொண்ட பாடகரை பாட வைத்திருந்தால், பாடல் இன்னமும் அதிகமாக ரீச்சாகியிருக்கும்.
‘குறிஞ்சி மலை மேல’ என்ற பாடலும் கல்யாண கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. பின்னணி இசையும் சில இடங்களில் சஸ்பென்ஸ் திரில்லரை கூட்டுவதுபோல கொடுத்து படத்திற்கு உதவி இருக்கிறது.
தீனாவின் நடனம் பாடல் காட்சிகளில் சிறப்பு. ராம்ஜியின் கலை இயக்கம் பூம்பாறையின் பூர்வீகத்தை அழித்துவிடாமல் அமைந்துள்ளது.
நிகழ்காலம், கடந்த காலம் என்று மாறி மாறி வருகின்ற காட்சிகள் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியதால் இந்தப் படத்தின் முடிவில் தியேட்டரை விட்டு வெளியில் வரும் பொழுது இது என்ன மாதிரியான படம் என்கின்ற ஒரு கேள்வியை எழுப்பிவிட்டது. இதற்கான முழு காரணத்தையும் இயக்குநர்தான் சுமக்க வேண்டும்.
ஆனால், பட தொகுப்பாளரும் கொஞ்சம் மனம் வைத்திருந்தால் அந்த சிறிய குழப்பத்தைக்கூட சரி செய்து, படத்தின் களம் என்ன என்பதை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கலாம். மகேந்திரன் கணேசன் கொண்டுவந்து கொடுத்த காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார். இயக்குநரின் விருப்பத்தின்படி செய்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளதுபோலும்.
ஆணவக் கொலைகளை கண்டிக்க வேண்டியவிதத்தில் கண்டித்து இருக்க வேண்டும். ஆனால் அதையும் முன்ஜென்மக் கதை, சஸ்பென்சாக மாற்றிவிட்டதால் அந்தக் கொலை பற்றிய சம்பவமும் அழுத்தம் இல்லாமல் போய்விட்டது. அந்த ஊர்க்காரர்களின் கதறலுக்கும் அந்த வீடு இடிந்து போயிருக்கும் நிலைமைக்கும் நம்மால் பரிதாபம்கூட பட முடியவில்லை.
சிட்டுக் குறிஞ்சியை இன்னமும் தூரமாகப் பறக்க விட்டிருக்கலாம்!
RATING : 3 / 5









