தன்ஷிகா பிக்சர்ஸ் சார்பில் ஆம்பூர் ஜே.நேதாஜி தயாரிக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம்’. இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகவன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘சந்திரமுகி, சிவகாசி, பரமசிவம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி.ஜோசப் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சேரன் பாண்டியன், சிந்துநதிப் பூ’ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சௌந்தர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிவுமதி, யுகபாரதி, மணிஅமுதன், நல்அறிவு மற்றும் அறிமுகக் கவிஞர் பரத் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த விவேக் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ‘அருந்ததி, அந்நியன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் ‘பாசக்கார நண்பன்’ படத்தின் நாயகியாகவும் நடித்த திவ்யா நாகேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, ‘சேது’ பாரதி ஆகியோருடன் தயாரிப்பாளர் ஜே.நேதாஜியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
“இந்த படம் ஒரு க்ரைம், சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் படம். எல்லாருக்கும் அன்புதான் தேவை. அது இருந்தால் போதும் அவரவர் வாழ்க்கை சிறப்பா இருக்கும். அந்த அன்பு கிடைக்கலைன்னா ஏற்படுற விளைவுகளினால் அவரோட சம்பந்தப்பட்டவங்க வாழ்க்கையும் சீர்குலைஞ்சு போயிரும்.. இதை மையமா வச்சித்தான் இந்த படத்தை எடுத்திருக்கோம்.
அனாதையா இருந்த ஒரு பையனைப் பார்த்து பரிதாபப்பட்ட பெரிய பணக்காரர் ஒருத்தர் அவனை தன் கூடவே வேலைக்கு வச்சிருக்கிறாரு. ஆனா அவன் வளர்ந்து பெரிய ஆளான பின்னாடி வரிசையாக கொலைகளை பண்ண ஆரம்பிக்கிறான். பணக்கார்ர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.. நாம் நன்றாகத்தானே அவனை வளர்த்தோம். இதுல என்ன தப்பு இருக்குன்னு பார்த்தா.. அவனோட சின்ன வயசுல அவனுக்கு ஏற்பட்ட ஒரு அவமானம்தான் இதுக்கெல்லாம் காரணம்னு தெரியுது.. அதுதான் படத்தோட கரு..” என்கிறார் அறிமுக இயக்குனர் ராகவன்.
ஒரு குத்துப் பாடலுக்கு நாகு நடனமாடியுள்ளார். வேலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆம்பூர், வேலூர், ஏலகிரி, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு – தன்ஷிகா பிக்சர்ஸ் – ஆம்பூர் ஜே. நேதாஜி
இணை தயாரிப்பு – எம்.ஜி.வேலுமணி, சி.கணேஷ், ஜி.எஸ்.சரவண பாபு, ஜே. லோகநாதன், சி.சௌந்தர்ராஜன்.
இயக்கம் – ராகவன்
இசை – சௌந்தர்யன்
பாடல்கள் – அறிவுமதி, யுகபாரதி, மணி அமுதன், நல்அறிவு, பரத்
ஒளிப்பதிவு – சேகர் வி. ஜோசப்
படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்
கலை – கபிலன்
சண்டைப் பயிற்சி – லீ முருகன்
நடனம் – எஸ்.எல். பாலாஜி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்