full screen background image

பண மோசடி தொடர்பாக இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் மீது தயாரிப்பு நிறுவனம் புகார்!

பண மோசடி தொடர்பாக இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் மீது தயாரிப்பு நிறுவனம் புகார்!

‘பிப்ரவரி 14’, ‘ஆயிரம் விளக்கு’, ‘சுமோ’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின், பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

கடந்த 2022ஆம் ஆண்டு, குறைந்த பட்ஜெட்டிலான திரைப்படம் தயாரிப்பதற்கும், ‘பிக் ப்ரோ’ என்ற யூடியூப் சேனல் தொடர்பான பணிகளுக்காகவும்,

இணைத் தயாரிப்பாளர் என்ற முறையில் ஸ்ரீ அன்னமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.44 லட்சத்து 45 ஆயிரம் முதலீடாகப் பெற்றுள்ளார் ஹோசிமின்.

ஒப்பந்தத்தின்படி, திரைப்படத்தை 2022ஆம் ஆண்டிலேயே நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும், யூடியூப் சேனலைத் தொடங்கி வாக்குறுதி அளித்தபடி தொடர்ந்து நடத்த வேண்டியிருந்தது என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், திரைப்படம் சார்ந்த பணிகளையும் முடிக்காமல், யூடியூப் சேனல் தொடர்பான பணிகளையும் ஒப்பந்தத்தின்படி நிறைவேற்றாமல் இயக்குநர் ஹோசிமின் இழுத்தடித்ததாக நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதால், ஸ்ரீஅன்னமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், நீதிமன்றத்தின் சார்பில் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு இயக்குநர் ஆஜராகவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் தனது தரப்பில் தெரிவித்துள்ளது.

இதனால், தங்களது முதலீடு மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய சட்டத் தீர்வு கிடைக்க வேண்டும் என ஸ்ரீஅன்னமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நம்பியுள்ளது.

Our Score