full screen background image

ஓ பட்டர்பிளை – சினிமா விமர்சனம்

ஓ பட்டர்பிளை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து – இயக்கம்: விஜய் ரங்கநாதன், தயாரிப்பாளர்கள்: வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல், தயாரிப்பு நிறுவனங்கள்: ஆன்ட்ஹில் சினிமா – பாலம்பூர் டாக்கீஸ், இசை: வைசாக் சோமநாத், ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன், படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன், கலை இயக்கம்: சரண்யா ரவிச்சந்திரன், ஆடை வடிவமைப்பு: டீனா ரோசரியோ, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த், வி.எஃப்.எக்ஸ்: செலிப்ரேஷன் ஆஃப் லைஃப், லைன் புரொடியூசர்: நோயல் ஆண்டோன், கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: பீட்ரூட், பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ், பப்ளிசிட்டி டிசைன்: பரணிதரன்.

நம்மைச் சுற்றி ஏதாவது மரணமோ அல்லது பிரச்சனைகளோ ஏற்பட்டால் அதில் தங்களுடைய பங்களிப்பு என்ன.. நம்மால்தான் அது நடந்ததா.. அவரால்தான் இது நடந்ததா என்று நம் மனம் கண்டு பிடிக்கத் தோன்றும்.

இந்தக் குழப்பத்திலேயே ஒருவர் தெளிவான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுபவர், தன்னால் ஏற்பட்ட துயரம் என்றால் அதனுடைய குற்ற உணர்வு அந்த மனிதரின் சாவு வரையிலும் நீடிக்கும்.

இயல்பாக நடந்த ஒரு விஷயத்தை நீங்கள் ஏன் உங்களால்தான் நடந்தது என்று குற்ற உணர்வில் சிக்கிக் கொள்கிறீர்கள் என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது.

சமீபத்தில் திருமணமாகியிருந்த புதுமணத் தம்பதிகளான கௌரியும் அர்ஜுனும் கொடைக்கானலுக்கு வருகிறார்கள்.

வந்த இடத்தில் அர்ஜுன் பெரும் மனக் குழப்பத்தில் இருக்கிறார். காரணம் இந்த திருமணம் முடிந்த மறுநாளே அவர் பார்த்து வந்த வேலை பறிபோய்விட்டது. அடுத்து என்ன வேலைக்கு போகலாம் என்கின்ற விரக்தியில் இருந்தவரை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு வரலாம் என்று கொடைக்கானலுக்கு வந்திருக்கிறார்கள்.

அர்ஜுன் எந்தளவுக்கு மனக் குழப்பத்திலும் தைரிய இழப்பிலும் இருக்கிறாரோ, அதே அளவுக்கு கௌரியும் ஒரு மன குழப்பத்தில்தான் இருக்கிறார். காரணம், அவருக்கு ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு இருந்த ஒரு காதல்தான்.

திருமணத்துக்கு முன்பு இருந்த காதலை வெளிப்படையாக கணவரிடம் சொல்லி விடலாம் என்று கௌரி நினைக்கும்போதெல்லாம் அர்ஜுன் எந்தவொரு விஷயத்தையும் அமைதியாக அணுகாத குணம் உள்ளவராக இருப்பதால் கௌரிக்கு தைரியம் வரவில்லை.

எந்த காதலனை நினைத்து பயந்து கணவரிடம் சொல்லலாம் என்று நினைத்தாரோ.. அந்த காதலனான சூர்யாவை அர்ஜுன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரைப் பார்த்தவுடன் கௌரிக்கு இன்னமும் பயம் அதிகம் ஆகிறது.

சூர்யா எதற்காக வீட்டுக்கு வந்தான் என்கின்ற கேள்வி கௌரியை குழப்பத்தில் தள்ளுகிறது. ஆனால், அர்ஜுனோ மிக இயல்பாக சூர்யாவிடம் பேசி பழகுகிறான்.

ஒரு கட்டத்தில் அர்ஜுனும் இல்லாமல் போக தற்கொலைக்கு முயல்கிறார் கௌரி. அந்த நேரத்தில் அவருடைய சகோதரி லட்சுமி பிரியா கௌரிக்கு நிறைய அட்வைஸ்களை வாரி வழங்குகிறார்.

வாழ்க்கையில் எதுவும் நடக்கும் என்பதை பலரும் கௌரிடம் சொன்னாலும் அவளால் சாந்தி அடைய முடியவில்லை.. தான் இறந்தால் மட்டுமே இந்த மனப்பிறழ்வு பிரச்சனைகளில் இருந்து தன்னால் விலக முடியும் என்று நினைக்கிறார் கௌரி.

இதற்குப் பிறகு என்ன நடந்தது? சூர்யாவும் கௌரியும் என்ன ஆனார்கள்? கௌரி சரியான நிலைமைக்கு வந்தாரா? குற்ற உணர்விலிருந்து விடுபட்டாரா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சைக்காலஜிக்கல் திரைப்படம் என்பதால் அது மாதிரியான படங்கள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள். எதையும் வெளிப்படையாக பேசினாலே எல்லாவிதமான குழப்பமும் தீர்ந்துவிடும்.

ஆனால், உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றாக பேசினால் நிச்சயமாக நாம் ஒரு மன நோயாளிதான். இன்றைக்கு இந்தியாவில் குடும்பமே முக்கியம் என்கின்ற கான்செப்டில் பிறந்து வளர்ந்த பெரியவர்களும், இளைஞர்களும் குடும்பம் என்ற அமைப்பை ஏற்கவும் முடியாமல் அதில் இருந்து விலகவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ண்ணவோட்டத்தில் காற்பகுதியைத்தான் வாசியை இந்தப் படம் சொல்கிறது.

படத்தின் ஹீரோவும் நிவேதிதாதான்; ஹீரோயினும் நிவேதிதாதான்..! உள்ளொன்று வைத்துக் கொண்டு இதழ்களில் மட்டும் சிரிப்பை உதிர்த்துவிட்டு உள்ளுக்குள் கடும் போராட்டத்தில் இருக்கும் ஒரு அபலைப் பெண்ணாக நிவேதிதா தன்னுடைய நடிப்பை இந்த படம் முழுவதும் கொடுத்து இருக்கிறார். ]

மனம் ஒரு நிலையில் இல்லை என்றால் நிச்சயமாக எந்த ஒரு கொண்டாட்டத்தையும் நம்மால் ஏற்க முடியாது நம்முடைய முகம் காட்டுகின்ற உணர்ச்சியிலேயே இவர் ஏதோ பிரச்சனைகள் சிக்கியிருக்கிறார் என்று அனைவருமே புரிந்து கொள்வார்கள் அது மாதிரியான தன்னுடைய கதாபாத்திரத்தில் ஆழ்ந்து நடித்திருக்கிறார் நிவேதிதா.

அவருடைய டஸ்கியான கலரும் எப்பொழுதும் அமைதியாக இருக்கும் முகமும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது.

அர்ஜுனாக நடித்திருக்கும் அட்டுல் தன்னுடைய திருமண கொண்டாட்டத்தைக்கூட கொண்டாட முடியாமல் தவிக்கும் மனநிலையை சிறப்பாக காட்டி இருக்கிறார். இன்னொரு பக்கம் சூர்யாவுக்கும், கௌரிக்கும் இருக்கும் பழைய உறவு பற்றி தெரிந்து கொள்ளாதபடி மனைவியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாதவராக மிகைப்படுத்தல் எதுவும் இல்லாத ஒரு நடிப்பை காட்டி இருக்கிறார்.

பிக்பாஸ் சிபி சந்திரன். சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவருடைய வித்தியாசமான ஆடை, படத்திற்காக வைத்திருந்த நீளமான முடி, ஆண்களே காதல் செய்யும் ராயல் என்ஃபீல்டு புல்லட் என்று அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் பழைய காதலில் நிரந்தரமாக இருக்காமல், அடுத்தடுத்த காலம் காட்டும் வழிகளில் செல்லும் ஒரு பாசிட்டிவ் கேரக்டராக சிபிச்சந்திரன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் மேலும் சில துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் இயக்குரின் கொஞ்சமான இயக்கத்தால் ஓர் அளவுக்கு நடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

பட்டாம்பூச்சியை வளர்க்கும் நாசரும், சின்ன வயதிலேயே ஆன்மீகம்தான் என்ற நினைப்பில் துறவி ஆகியிருக்கும் லட்சுமி பிரியாவும், வித்தியாசமான தோற்றத்தில் கீதா கைலாசமும் படத்தில் ஆங்காங்கே தென்படும் திரைக்கதையின் ஓட்டையை நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் கதைக்களன் கொடைக்கானல் என்றாகி வந்த பின்பு அந்தக் கொடைக்கானல் எப்படி இந்த படத்தில் வந்திருக்கிறது என்ற கேள்விதான் அனைவருக்கும் எழும். கொடைக்கானலின் இயற்கை அழகை கச்சிதமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன். கேமரா கோணங்களை மாற்றி மாற்றி வைத்து வசன காட்சிகள் அதிகமாக இருக்கின்ற அந்தச் சூழலை கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்.

வைஷா கோபிநாத்தின் இசையில் பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இது வேற ஏன்டா டையில என்று நம்மை கொஞ்சம் சோதிக்கவும் செய்திருக்கின்றன. இருந்தாலும் ‘போகாதே’ என்ற ஒரு பாடல் மட்டும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறது.

பின்னணி இசை வசனங்களுக்கு இடையூறு தராமல் ஒலித்திருக்கிறது.  இருந்தாலும் படத்தின் மிக மெதுவான ஓட்டத்திற்கு இந்தப் பின்னணி இசையும் ஒரு காரணமாகிவிட்டது.

கணவன், காதலன் என்று இரண்டு ஆண்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் கௌரி என்ற பெண்ணின் மனக்கிலேசத்தை சொல்லும்விதமாக திரைக்கதையை அமைத்து, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் குரலாக அதைச் சொல்ல வைத்திருக்கிறார்கள் படத்தின் கதாசிரியர்கள்.

இந்தக் குரல் படத்தில் காட்டப்பட்டதைவிடவும் அறிவுப்பூர்வமாகவும், இயற்கையை எதிர்கொள்ளும் விதமாகவும் எழுதி இருந்தால் அனைத்து தரப்பினருக்குமே இந்த படம் திருப்தியை கொடுத்திருக்கும்.

உலக மகளிர் தினம் வரும் சூழலில் இந்தப் படத்தைப் பொருத்தமாக இன்றைக்கு வெளியிட்டு இருந்தாலும் ஒரு இளம் பெண் எதிர்கொள்ள வேண்டிய உளவியல் பிரச்சனைகளை வெளிப்படையாகவே இந்தப் படத்தில் விவாதித்து இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

அழகிய பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வைத்து அவ்வப்பொழுது சில தத்துவார்த்த வார்த்தைகளை வைத்து இயக்குர் இந்தப் படத்தை வித்தியாசப்படுத்தி காட்ட முனைந்திருக்கிறார்.

இதை இன்னமும் அதிகமான நேர்மறை பிரச்சனைகளை வைத்தும் வசனங்களை வைத்தும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

RATING : 3.5 / 5

Our Score