full screen background image

போர்த் ப்ளோர் – சினிமா விமர்சனம்

போர்த் ப்ளோர் – சினிமா விமர்சனம்

சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள புதிய திரில்லர் படம்தான் இந்த “ஃபோர்த் ஃப்ளோர்”.

MANO CREATION தயாரிப்பில், தயாரிப்பாளர் A. ராஜா வழங்க, இயக்குநர் L.R.சுந்தரபாண்டியின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக ஆரி அர்ஜுனன், நாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளனர். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தரண் குமார் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு, ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரி செய்துள்ளார். எடிட்டிங் ராம் சுதர்ஷன், பாடல்களை கு.கார்த்திக் எழுதியுள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார்.

வழக்கமான கதைகளிலிருந்து விலகி, குழப்ப மன நிலையும் மர்மமும் கலந்த சைக்காலஜிக்கல் திரில்லராக இப்படம் வடிவெடுத்துள்ளது.

கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள மர்மமான தொடர்பை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லும்விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் மையம்.

செவன்த் ஸ்டுடியோ சார்பில் K.கண்ணன் தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

பரபரப்பு, மர்மம், மனநிலையியல் திரில்லர் – இந்த மூன்றும் கலந்த ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்தப் படம் வந்துள்ளது.

ஐடி துறையில் வேலை செய்யும் ஹீரோ ஆரி, இப்போது மும்பையில் இருக்கிறார். அவரை சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறது அவரது நிறுவனம். இதனால், சென்னையின் புறநகர் பகுதியில் அவருடைய அலுவலகத்தின்  கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் நான்காவது மாடியில் குடியேறுகிறார் ஆரி.

அதேசமயம் அவர் மும்பையில் இருந்து சென்னை வருவதை தெரிந்து கொண்ட அவரது முன்னாள் காதலி தன்னை வந்து சந்திக்கும்படி கேட்கிறார். தன்னுடைய முன்னாள் காதலியை சந்திக்க நினைக்கிறார். அவரைத் தொடர்பு கொள்கிறார். ஆனால் போன் சுவிட்ச் ஆஃபாக இருக்கிறது.

காதலியை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கிறார் ஆரி. காதலி எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இந்த நேரத்தில் ஆரி தூங்கும் பொழுது நிறைய கெட்ட, கெட்ட கனவுகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. அது அவரை பயமுறுத்துவது போல இருக்கிறது.

இன்னொரு பக்கம் அதே பிளாட்டில் அமானுஷ்யமான சம்பவங்களும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்க தான் ஏதோ ஒரு பொறியில் மாட்டிக் கொண்டதை உணர்கிறார் ஹரி.

அவர் கனவில் கண்டது சில இடங்களில் உண்மையாகவே அவர் கண் முன்னாலேயே நடக்க துவங்க ஆரி பெரும் குழப்பமடைகிறார். அப்போது தனக்கு ஒரு மகளும் இருப்பதை தெரிந்து கொண்டு காதலியோடு, தன் மகளையும் தேடும் பணியில் தீவிரமாக இறங்குகிறார்.

ஆரியின் காதலி கிடைத்தாரா? அவருடைய மகள் கிடைத்தாரா? அந்த வீட்டில் நடக்கும் மர்மம்தான் என்ன? அங்கிருந்து ஆரி தப்பித்தாரா? இல்லையா..? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்தப் போர்த் ஃப்ளோர்’ என்ற திரைப்படம்.

ஐடி நிறுவன ஊழியர் என்ற வகையில் ஆரியின் கெட்டப் பொருத்தமாக இருக்கிறது. ஒரு பொறுப்பற்ற காதலனாகவும் அவர் நடிக்கின்ற அந்த நடிப்பும் மிக இயல்பாக அமைந்திருக்கிறது.

தன்னுடைய மனைவியை தேடும் பொழுதுதான் தனக்கு மகளும் இருக்கிறாள் என்ற உண்மையை தெரிந்தவுடன் அதற்குப் பிறகு தன்னுடைய மகளை தேடி அவர் ஓடுகின்ற ஓட்டமும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு இடமாக அவர் அலையும் அலைச்சலில்… போகின்ற இடங்களில் எல்லாம் நம்மையும் அழைத்துச் செல்வதுபோல தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் ஹீரோயின்களாக நடித்திருக்கும் பவித்ரா. தீப்ஸிகா என்ற இரண்டு பேருமே அழகாகத்தான் இருக்கிறார்கள். சில காட்சிகளே ஆனாலும் அழகாகவும் நடித்திருக்கிறார்கள். அதிலும் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் தீப்ஷிகா ஆரியுடன் சண்டையிடும் காட்சிகளில் புதுமுக நடிகையாக தெரியாத வண்ணம், தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார்.

வழக்கறிஞர் சந்துருவாக நடித்தவர், ஆரியின் கதையை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தலைவாசல் விஜய், ஆரியின் மகளாக நடித்தவர் என்று மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக வெள்ளை சட்டையுடன் வலம் வரும் சுப்பிரமணிய சிவா தன்னுடைய வில்லத்தனத்தை சிறப்பாக காட்டி இருக்கிறார். இனிமேல் சிவாவும் தாராளமாக வில்லனாகவே நடிக்கலாம். அந்தக் கெட்டப்பும், கெத்தும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

ஒளிப்பதிவாளர் விஜய் லக்ஷ்மன் அந்த அடுக்கு மாடி குடியிருப்பையும் நான்காவது மாடியையும், அந்த வீட்டுக்குள் நடக்கின்ற பேயின் அட்டூழியங்களையும் அழகாக தனது கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.

பேய் என்றாலே நமக்கு பயம் வரும். படம் பார்ப்பவர்களையும் பயமுறுத்தினால்தான் அந்த பேய் படத்துக்கு ஒரு மரியாதை கிடைக்கும். அதை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். படத் தொகுப்பாளர், இசையமைப்பாளரையும்  வைத்து தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு பயமுறுத்தலை செய்திருக்கிறார் இயக்குநர்.

தருண் குமாரின் இசையில் கு.கார்த்திக் எழுதி இருக்கும் பாடல்கள் ஒருமுறை மட்டுமே கேட்க வைத்திருக்கிறது. திடீர் திடீரென்று பாடல்கள் வரும் திடீர் திடீர் என்று காணாமல் போகும் என்ற அளவில் படத்தில் இந்தப் பாடல்களின் ஆதிக்கம் இருப்பதால் இது எந்த வகையிலும் நமக்கு உதவவில்லை என்பது ஒரு சோதனையான ஒரு விஷயம்.

ராம் சுதர்சனின் படத் தொகுப்பு இந்தப் படத்தைக் கச்சிதமாக வரிசைக்கிரமமாக நமக்கு கொண்டு வந்து காட்டி இருக்கிறது.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தரபாண்டியன், ஒரு மர்ம கதையோடு காதலையும் சேர்த்து காதலர்களின் அத்துமீறலால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளையும் சொல்லி குழந்தை செண்டிமெண்ட்டையும் கொஞ்சம் முன் வைத்து காதலனை திரும்பி வந்து கண்ணீர்விடும் கதையைச் சொல்லியிருக்கிறார்.

காதலில் விழுவது, லிவிங் டு கெதராக வாழ்வது… ஆரியின் பொறுப்பற்றத்தனத்தால் காதலில் விலகிச் செல்வது.. திடீரென்று பொறுப்பு வந்து மறுபடியும் வேலைக்கு சென்று ஒரு ஐடி நிறுவன அதிகாரியாக திரும்பி வந்து காதலியை தேடுவது… தனக்கு மகள் இருக்கிறாள் என்பதை அறிந்தது அவளையும் தேடுவது என்று படத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டு வந்து முடிவில் ஒரு நியாயத்தை நம்மிடம் சொல்லி இருக்கிறார்.

ஆரி அடிக்கடி காணும் அந்த கனவுக்குள் நிஜமாக அந்த வீட்டில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கும் இடையேயான இந்த சம்பந்தத்தை தொடர்பை இயக்குநர் இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதனாலேயே முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வது போல தெரிகிறது. பிற்பகுதியில் கடைசி அரை மணி நேரம்தான் இந்தப் படம் சஸ்பென்ஸ். திரில்லரை கொண்டு வந்து காட்டியிருக்கிறது.

இந்த ஃபோர்த் ஃப்ளோர் பேய் படமா அல்லது மிஸ்டரி படமா அல்லது சஸ்பென்ஸ் திரில்லர் படமா அல்லது காதலர்களின் கதையா என்று பட்டிமன்றமே வைக்க கூடிய அளவுக்கு இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

இதனால் இந்தப் படத்தை ஆஹா என்றும் சொல்ல முடியவில்லை. ஓஹோ என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால், நிச்சயம் ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

RATING : 2.5 / 5

Our Score