இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார், ஜார்ஜ் மரியன், ரைச்சல் ரபேக்கா, முத்துலட்சுமி, நிரோஷா மற்றும் அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர்: சிவகுமார் முருகேசன், தயாரிப்பாளர்: சுதன் சுந்தரம் – சிவகார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், இசை: நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு: விவேக் விஜயகுமார், படத்தொகுப்பு: சான் லோகேஷ், ஒப்பனை: என் செல்லதுரை ஆலங்குடி, கலை: ராமு தங்கராஜ், பத்திரிக்கை தொடர்பு: டிஒன், சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்.
பொதுவாக கிராமப்புறங்களில் ஆண்களே இல்லாத ஒரு குடும்பத்தில், ஒரு பெண் மட்டுமே தலையெடுத்து தன்னுடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் ஆளாக்குகின்ற அளவுக்கு வாழ்ந்து காட்டியிருந்தால் அந்தப் பெண்ணை ‘தாய்க்கிழவி’ என்று அழைப்பது வழக்கம். அப்படி ஒரு ‘பவுனுதாயி’ என்ற ‘தாய்க்கிழவி’யின் கதைதான் இந்தப் படம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் காடுபட்டி என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்தின் தலைவியாக தாய்க்கிழவியாக வாழ்பவர் பவுனுத்தாயி.
அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூன்று மகன்களும் திருமணம் செய்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் சிங்கம்புலி சவுண்டு சர்வீஸ் கடை வைத்திருக்கிறார். அருள்தாஸ் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். பால சரவணன் மார்க்கெட்டில் பூ கட்டி விற்பனை செய்து வருகிறார். இவர்களில் பால சரவணன் மட்டுமே நான்காம் வகுப்பை தாண்டியவர்கள் மற்றவர்கள் அந்த அளவுக்குக்கூட படிக்காதவர்கள்.
இந்த நேரத்தில் பவுனு தாயியின் ஒரே மகளான ராய்ச்சல் ரபேக்கா திருமணமாகி ஒரு பையன் இருந்தும், இப்போது தன் அம்மா வீட்டில்தான் இருக்கிறார்.
இவரது கல்யாணத்தின் போது 20 பவுன் நகை போடுவதாக சொல்லி 16 பவுனை கொடுத்துவிட்ட பவுனு தாயி மீதி 4 பவுனை கொடுக்காததால் அவருடைய மருமகன் முத்துக்குமார், தன் மனைவியை கொண்டு வந்து அம்மா வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று இருக்கிறார். “அந்த நான்கு பவுனை உங்க அம்மா என்றைக்கு கொடுக்கிறதோ அன்றைக்கு என் வீட்டுக்கு வரலாம்” என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார் முத்துக்குமார்.
ஆனால் ரெபெக்காவோ மீண்டும் கணவனின் வீட்டுக்கு போகவே விருப்பமில்லாமல், தாயுடனே தன்னுடைய மகனை வளர்த்துக் கொண்டு அங்கேயே வாழ்கிறார்.
தாய்க்கிழவியான பவுனு தாய் இப்போது ஊர் முழுவதும் வட்டி தொழில் செய்து வருகிறார். குறைந்தபட்ச தொகையை கடனாக கொடுத்துவிட்டு வீடு வீடாக சென்று அடாவடியாக பேசி அவர்களிடம் வட்டி வசூலிப்பதுதான் இந்த தாய்க்கிழவியின் இப்போதை தினசரி வேலை.
வட்டி தராதவர்களை கண்டபடி திட்டுவார் பவுனு. அசிங்கமான வார்த்தைகளில் பேசுவார். இவரைப் பார்த்தாலே ஊரிலுள்ள அனைவரும் விழுந்து அடித்துக் கொண்டு ஓடி மறைகிறார்கள். நேரில் பார்த்தால் வட்டி கேட்பாரே என்பதால் இவர் மீது அந்த ஊர் முழுவதும் வெறுப்பாக இருக்கிறது. கிழவி எப்போது மண்டையை போடும் என்று அந்த ஊரின் பெண்களும் சேர்ந்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் திடீரென்று பவுனு தாய்க்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். ஊரில் இருந்து மூன்று மகன்களும் தங்களுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். செய்தி அறிந்து மருமகன் முத்துக்குமாரும் அங்கு வந்து உட்கார்ந்து ரகளை செய்து கொண்டிருக்கிறார்.
வயதாகியும் இன்னமும் திருமணமாகாமல், தனக்கு பெண் தேடிக் கொண்டிருக்கும் முனீஸ்காந்த் இவர்களது உறவினர். அவரும் அன்றைக்கு அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது திடீரென்று கோல்ட் குமார் என்ற இளவரசு அங்கே வந்து தன்னுடைய கடையில் பவுனுத்தாயி ஒரு மாதத்திற்கு முன்பாக 160 பவுன் நகையை வாங்கிச் சென்றதாக சொல்கிறார்.
இளவரசு சொன்ன விஷயத்தை கேள்விப்பட்ட மூன்று மகன்களும், முனீஸ்காந்தும் “அம்மா அந்த 160 பவுனை வீட்டில்தான் வைத்திருப்பார். அதனால் அதை எப்படியாவது கண்டுபிடித்து தங்களுக்குள்ளேயே பங்கிட்டு கொள்ளலாம்” என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.
கிராமத்து வழக்கப்படி வீட்டு பெரியவர்கள் இறந்துவிட்டால், அந்த வீடு, நிலம் எல்லாம் ஆண் பிள்ளைகளுக்கு போய்விடும். அம்மாவோ அல்லது பாட்டியோ இறந்திருந்தால் அவர் வைத்திருந்த பவுன் நகைகள் அனைத்தும் மகள்களுக்கு போய் சேரும். இது இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் இருக்கின்ற நடைமுறைதான்.
160 பவுன் நகையை சுருட்டுவதற்காக பிளான் செய்யும் மூன்று மகன்களும் அம்மாவை அப்படியே அல்லாக்காக தூக்கி மதுரைக்குக் கொண்டு வந்து அங்கேயிருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.
அந்த 160 பவுனை மூன்று பங்காக போட்டாலும் ஆளுக்கு 53 பவுன் ஒரு என்பதால் தங்களிடம் இப்போது இருக்கும் நகையை விற்று அம்மாவிற்கு சிகிச்சை செய்கிறார்கள்.
அடுத்து என்ன நடந்தது? தாய்க் கிழவி உயிர் பிழைத்தாரா? இல்லையா? அந்த 120 பவுன் நகை கிடைத்ததா? குடும்பத்தில் பாகப் பிரிவினை நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த ‘தாய்க்கிழவி’ படத்தின் மீதமான திரைக்கதை.
இந்தக் கதாப்பாத்திரம் கிடைத்ததற்காக ராதிகா நிச்சயமாக பெருமைப்பட வேண்டும். ‘கலையரசி’ என்ற பெயருக்கு ஏற்ற நடிப்பை தன்னுடைய அனைத்து படங்களிலும் கொடுத்து வரும் ராதிகா இந்தப் படத்தில் சக நடிகைகளையே பொறாமைப்பட வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய சிறப்பான நடிப்பும், வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அபாரம் என்றே சொல்லலாம்.
மற்ற நடிகைகள் பேச கூச்சப்படும் பலவிதமான கிராமத்திய கெட்ட வார்த்தைகள் அத்தனையையும் இந்தப் படத்தில் அசால்டாக பேசி நம்முடைய சிரிப்பலையை எழுப்பி இருக்கிறார் ராதிகா.
முதல் பாடலின்போது ராதிகாவின் கேரக்டர்ஸ் என்ன என்பதை செய்வதற்காக இயக்குநர் வைத்திருந்த திரைக்கதை காட்சிகளின்படி அந்த அறிமுகமும், அவர் வட்டி வசூலிக்கும்விதமும் நமக்கு சிரிப்பையே தந்தது. இந்த அளவுக்கு கட் அண்ட் ரைட்டான ஒரு பெண்ணை கிராமத்தை தவிர வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது.
மருத்துவமனையில் உயிர் பிழைத்தவுடன் அமைதியாக அவர் பேசுகின்ற பேச்சுக்களும்… மகன்கள் ஒவ்வொருவரின் குறைகளையும் அவர் சுட்டிக் காட்டுகின்ற இடத்தில ஒரு தாய் எப்படி ஒரு மன வருத்தத்துடன் மகன்களின் நடவடிக்கை குறித்து வருத்தப்படுவாரோ… அந்தக் கிராமத்து கிழவியை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் ராதிகா.
வட்டி வசூலிக்க வந்த இடத்தில் ஒரு ரூபாயைகூட விடாமல் கச்சிதமாக பொறுக்கி வரும் பவுனுத்தாய், தன்னுடைய இறந்த கணவரின் புகைப்படம் முன்பாக எரியும் லைட்டைகூட “இந்த சனியனுக்கு எதுக்கு அஞ்சு பைசா செலவு பண்ணனும்” என்று அதையும் ஆப் செய்துவிட்டு போகும் போது யாராலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
பல காட்சிகளில் வீட்டுக்குள் படுத்த படுக்கையாக இருந்தபடியே தன் மனதில் நினைத்ததை சொல்வதற்காக தன்னுடைய கைகளை காட்டி அவர் சொல்கின்ற விதமும், அத்தனை பேருடைய நடிப்பையும் பார்க்காமலே கண்களை மூடிக் கொண்டு அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு ஏற்ப முகத்திலேயே ரியாக்சன் காட்டும்பொழுதும் அசத்தி விட்டார் கலையரசி ராதிகா.
இந்த வருடத்திய அனைத்து வகை விருதுகளையும் ராதிகா இந்தப் படத்திற்காக பெற போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
மூன்று மகன்களில் அருள்தாஸ் ஒரு ஸ்டெப் முன்னாலேயே பறந்திருக்கிறார் என்று சொல்லலாம். மூவருமே தங்களது இயல்பான நடிப்பையே காட்டி இருக்கிறார்கள்.
இறந்தது தன்னுடைய அம்மாதான் என்றாலும் பணப் பிரச்சனையில் சிக்கி தவிக்கின்ற மூன்று பேரும் வீட்டை கொடுத்தால் அதை விற்று வருகின்ற பணத்தில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே என்று சாதாரணமான ஒரு குடிமகன் போலவே பேசுகிறார்கள். அதிலும், சிங்கம்புலி தன் மகளுக்கு வரன் பார்த்திருப்பதால் நகை செய்ய வேண்டுமே என்கின்ற காரணத்தினாலும் அம்மா எப்போது மண்டையை போடுவார்… சொத்தை எப்போது பிரிக்கலாம் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறார்.
தீவிரமான கமலஹாசனின் ரசிகனாக நடித்திருக்கும் சிங்கம்புலி பல இடங்களில் கமலஹாசன் பாடல்களை வைத்து தன்னுடைய வசனத்தை பேச ஒவ்வொரு இடத்திலும் கை தட்டல் பறக்கிறது. அதிலும் இடைவேளை பிளாக்கில் கமலஹாசன் பாட்டோடு அந்த சீன் முடியும் பொழுது செம காமெடி..!
ஆங்கிலம் தெரியாது என்றாலும் தெரிந்தது போல நடித்து டாக்டர் சொன்னதை அப்படியே உடான்ஸாக மாற்றி கொடுக்கும் பால சரவணனின் அந்த அப்பாவித்தனமான நடிப்பும் அபாரம்.
அம்மாக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. என்பதை பால சரவணன் முதல்முறையாக கேள்விப்படும்பொழுது ஐந்து நிமிடத்தில் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு அம்மாவை காப்பாற்றுவதில் தவறே இல்லை என்ற அவர் நடக்கின்றபொழுது அந்த காட்சியை நிறைய எமோஷன்ஸ் சேர்த்து, அதையும் திரையில் இருந்து படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
அமைதியான மகளாக நடித்திருக்கும் ராய்ச்சல் ரபேக்கா ஒரு அமைதியான நடிப்பை காண்பித்திருக்கிறார்.
தன்னுடைய அண்ணிகள் அனைவரும் தன்னை கேரோ செய்வதை பார்த்துவிட்டு பவுனுத்தாயி தனக்கு என்னென்ன சொல்லிக் கொடுத்தார் என்பதையும் அதனால் “நான் இப்போது தனித்து நிற்க பழகிவிட்டேன்.. நிச்சயம் என் மகனை ஆளாக்குவேன்” என்று அவர் தைரியமாக சொல்லுகின்ற இடத்தில் கை தட்டல் பெற்றுவிட்டார்.
மருமகள்களாக நடித்தவர்களும் தங்கள் பங்குக்கு மாமியாருக்குப் பிடிக்காத மருமகள்களாக பேசி வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
இன்னமும் திருமணத்திற்கு பெண் தேடி அலையும் முதிர் கண்ணனாக இருக்கும் முனீஸ்காந்தின் நடிப்பும் இந்த படத்தில் ஒரு மிகப் பெரிய பலமாக கிடைத்துவிட்டது.
“எதற்காக நீ கல்யாணம் பண்ணணும்னு துடிக்கிற?” என்ற பால சரவணன் கேட்டதற்கு அவர் சொல்கின்ற அந்த பதில் அபாரம். அட்டகாசம். இப்போதுவரையிலும் திருமணம் செய்யாதவர்கள் நிச்சயமாக இதைக் கேட்டால் நிச்சயமாக ஏங்கிப் போவார்கள். அப்படி ஒரு அழகான உண்மையைச் சொல்லியிருக்கிறார் முனீஸ்காந்த்.
மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார் இன்னொரு பக்கம் தன்னுடைய வில்லத்தனத்தை அலட்சியமாக காட்டி நடத்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார். இப்படியும் ஒரு மருமகன் ஒரு வீட்டிற்கு வாய்த்துவிட்டால் அந்த வீடு என்ன ஆகும் என்று நம்மை யோசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தில் நடித்த அந்த ஊர் மக்களும், மற்றை நடிகர், நடிகைகளும் மிகச் சிறப்பாக இந்தப் படத்திற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்து… இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று நம்மையும் வியக்க வைத்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகோ அழகு. பின்னணி இசையை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மற்றவர்கள் வேகவேகமாக பேசுகின்ற வசனங்களை நாம் எளிதாக புரிந்து கொண்டிருக்க முடியும்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் அச்சு அசலான ஒரு கிராமத்து வாழ்வியலை அப்படியே நம்முடைய கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். ஒளி எங்கும் கூடவே இல்லை. அதே சமயம் குறையவும் இல்லை. அந்த கிராமத்தின் அப்போதைய தட்ப வெப்ப நிலைக்கேற்ப கூடுதல் வெளிச்சத்தை காட்டாமல் இயற்கையிலேயே படம் பிடித்திருக்கிறார். பல காட்சிகளில் பல நடிகர், நடிகைகளின் முக அழகை, கேமரா கோணத்தில் அழகுபட வைத்து அவர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் எடிட்டரான சான் லோகேஷ் படத்தின் காட்சிகள் ஃபேமிலி டிராமாவாக இருப்பதால் அதையே கடைசிவரையிலும் மெயின்டன் செய்து கொண்டு சென்று இருக்கிறார்.
இதில் ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே பவுனுத்தாயிதான் என்பதால் அவருக்கான அளவுக்கதிகமான பில்டப் கொடுக்காமல் அடுத்தடுத்த காட்சிகளை ரசித்துப் பார்க்கும் அளவுக்கு தன் படத் தொகுப்பினை செய்து கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கும் அறிமுக இயக்குநரான சிவகுமார் முருகேசன், தன்னுடைய பிரமாதமான கதை சொல்லலிலும், இயக்கத்திலும் இந்தப் படத்தை ‘ஓஹோ’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.
இப்போதைய பெண்களுக்கு தேவை தன்னம்பிக்கை மட்டும்தான். அந்த தன்னம்பிக்கையை வைத்துக் கொண்டு அதன் வழிகாட்டுதலில் தானே சுயமாக நின்று உழைத்து வாழ்க்கையை ஓட்டலாம் என்கின்ற ஒரு விஷயத்தை இந்த பவுனுத்தாயி என்ற தாய்க்கிழவி மூலமாக இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் பவுனுத்தாயி பேசுகின்ற அநாகரிமான பேச்சுக்கள், சரளமான கெட்ட வார்த்தைகள்.. “நாளைக்கு வரும்போது வட்டியை எடுத்து வைக்கல… சேலையை உருவி அம்மணமா உட்கார வைத்து விடுவேன்” என்று அவர் பேசுகின்ற வசனம் பவுனுத்தாய்க்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. அவரும் ஒரு ரவுடி, குற்றவாளியாகத்தான் நமக்குத் தெரிகிறார். பிறகு இவர் எப்படி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க முடியும்?
இந்த உலகத்தில் குற்றம், குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை என்றாலும் திரைப்படம் மூலமாக ஒருவரை உங்களுக்கு முன்னோடியாக நீங்கள் அடையாளம் காட்டும்பொழுது அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதைப் பற்றி மட்டும் பேசாமல் இயக்குநர் நழுவி இருக்கிறார்.
படத்தில் பேசப்பட்டிருக்கும் அந்த கெட்ட வார்த்தைகள், தேவையில்லாத ஆபாச அர்ச்சனைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்து இருந்தால் அல்லது முழுமையாக நீக்கி இருந்தாலும் பவுனுத்தாய் இன்னும் மிகப் பெரிய பவுனாகவே நமக்கு தெரிந்திருப்பார்.
இந்தப் படத்தில் மூன்று இடங்களில் நம்முடைய மனதில் இருக்கும் ஒரு மெல்லிய பாச உணர்வை தூண்டி விட்டிருக்கிறார் இயக்குநர்.
அது முனீஸ்காந்த் எதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்று அவருடைய விருப்பத்தைச் சொல்லும்பொழுது.. தலைமை மருத்துவர், சக மருத்துவர் மற்றும் நர்ஸ்களை அழைத்து கண்டிக்கின்ற பொழுதும், இறுதியாக பவுனுத்தாய் தன்னுடைய குடும்பத்திற்காக தான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பதை ஆதாரத்துடன் காட்டும்பொழுதும் நமக்கு உணர்ச்சி மேலிடுகிறது.
கடைசியாக இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் நடக்கும் திருமணம்தான் இந்தப் படத்தின் ஹைலைட்.
சற்றும் எதிர்பாராதவிதமாக இயக்குநர் கொடுத்த இந்தக் காட்சிதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துவிட்டது. ஒரு வசனத்திற்குகூட கிடைக்காத இந்த அளவுக்கு பலமான கை தட்டல்கள் இந்தத் திருமண காட்சிக்குக் கிடைத்தது என்றால் அது ரசிகர்களை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்து பாருங்கள்!
‘கலையரசி’ ராதிகாவின் கலை உலக வாழ்க்கையில் இந்தப் படம் எவ்வளவு முக்கியமோ…. அதேபோல் இப்போதைய தமிழ் சினிமாவில் சிவக்குமார் முருகேசன் என்ற இந்தப் புதிய திறமையான இயக்குநரின் வருகையும் முக்கியம்தான்.
தமிழ்த் திரையுலகத்துக்கும் இந்தப் படம் ஒரு முக்கியமான, அழகான திரைப்படமாகும்!
RATING : 4 / 5









