ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’, ‘சங்கத் தமிழன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநரான விஜய் சந்தர் தயாரித்துள்ள திரைப்படம் ‘கார்டியன்’.
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் C.S., மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத் தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா, இப்படத்தின் கலை இயக்குநராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S., உமாதேவி ஆகியோர் தம் பாடல் வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார். S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
இந்தக் ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் நாயகி ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர செய்யும் பயமுறுத்தக் கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.
இதனிடையே நேற்று இரவு இப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் விஜயசந்தர் பேசும்போது, “நான் தொடங்கிய ‘வாலு’ திரைப்படம் மூன்று வருடங்களுக்குப் பிறகே வெளியானது. அந்தப் படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத் துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம்.
இந்தக் ‘கார்டியன்’ படத்தை தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன். கொரோனா தொற்று காலம் என்பதால் பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறிவிட்டது. அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், என் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள்தான் இந்தப் படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர்.
அப்பொழுதுதான் இந்த இரட்டை இயக்குநர்கள் இருவரும் இந்தக் கதையை என்னிடம் கூறினார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் ஹன்சிகாதான். இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்தப் படத்தை சிறப்பாக முடித்து கொடுத்திருக்கிறார்.
சிறப்பாக இந்தப் படம் வர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். தொழில் நுட்பக் குழுவினரும், இந்தப் படத்தில் பணி புரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். அதுவே இந்தப் படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூலக் காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்திருக்கிறோம். வரும் மார்ச் 8-ம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்…” என்றார்.
கலை இயக்குநர் லால்குடி.N.இளையராஜா பேசும்போது, “நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதரிடமும் அவரது மாணவர்களிடமும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கே.எஸ் ரவிக்குமார் ஸாரிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். ஊடகத் துறையினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
ஒளிப்பதிவாளர் தியாகராஜன் பேசும்போது, “ஒரு நாள் இயக்குநர் விஜயசந்தரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தபோது இந்தப் படத்தை பற்றிக் கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து “நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம்…” என்று கூறினார்.
இயக்குநர்களுக்கும், கலை இயக்குநர் லால்குடி.N.இளையராஜா அவர்களுக்கும், இசையமைப்பாளர் சாம் C.S அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும், படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படமும் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி” என்றார்.
சண்டை பயிற்சி இயக்குநர் டான் அசோக் பேசும்போது, “இங்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது முதல் படமான ‘வாலு’ படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சண்டை பயிற்சி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும், உதவி இயக்குநர்களும் இந்தப் படத்தில் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் சாம்.C.S பேசும்போது, “சமீப காலங்களில் ஹன்சிகாவுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாகவே அமைந்துள்ளது.
முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்சிகாவும் ஒருவர். மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறுவிதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
நிறைய ஹாரர் படங்கள் பண்ணும்பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவதுபோல தோன்றும், அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன்.
இயக்குநர்கள் இருவருடனும் எனக்கு இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தப் படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும். அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.
தயாரிப்பாளர் விஜய்சந்தர் உள்பட இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் ஸாருடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் தற்போது மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பல துறையினர் பணியாற்றுகின்றனர். அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன்.
ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும்விதமாக இல்லாமல், விதம்விதமான திரைக்கதைகளையும் விதம்விதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன்.
உதாரணத்திற்கு ஹன்சிகா உடனே மூன்று படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். மூன்றிலும் ஒரே மாதிரியான இசையை நாம் கொடுக்க முடியாது. விதம்விதமான இசையை முயற்சி செய்ய வேண்டி உள்ளது. அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும்; சில தோல்வியடையும். தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ஊடகத் துறையினரின் ஆதரவு மிகவும் தேவை..” என்றார்.
நாயகி ஹன்சிகா மோத்வானி பேசும்பொழுது, “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும்.
இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி..” என்றார்.
படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள யுவராஜ் பேசும்போது, “வரும் மார்ச் 8-ம் தேதி படம் வெளியாகிறது. இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்தப் படத்தின் வெளியீடு.
இது ஒரு புதுவிதமான ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலமாக எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது. இந்த வாய்ப்பு அளித்தமைக்கு விஜய்சந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி. எங்களுடைய முழு ஆதரவையும் இந்த படத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்” என்றார்.
படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும்போது, “ஊடகத் துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதேபோல இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார்.
எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது. ஊடகத் துறையினரின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
பாடகர் மற்றும் நடிகரான ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும்பொழுது, “இந்தப் படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர். நடிப்பு என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். திடீரென அவர், “இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா..?” என்று கேட்டார்.
இந்தக் கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. என்னுடன் நடித்த சுரேஷ் மேனன் மற்றும் ஸ்ரீமன் அவர்களும் என்னுடைய நீண்ட நாள் நண்பர்கள். அவர்களுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது.
திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் என்னை பாராட்டி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் குரு சரவணன் படத்தின் டப்பிங் பணியின்போது தனக்கு என்ன தேவையோ அதை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
புதுவிதமான ஹாரர் திரைப்படமான, இத்திரைப்படத்தை மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி வெளியிடுவதற்கு தனி தைரியம் வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஓடிடியில் படம் வெளியாகும்வரை காத்திருக்காமல் திரையரங்கில் வந்து கண்டுகளிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்…” என்றார்.
நடிகை தியா பேசும்பொழுது, “வாய்ப்புகள் தரப்படுவதில்லை.. உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் வெள்ளித்திரையில் இயக்குநர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். உலகிலேயே மிகப் பெரிய பரிசு நமக்கு நம் மீது உள்ள நம்பிக்கையைவிட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும்விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன். தனது பொன்னான நேரத்தை செலவு செய்து எங்களை ஊக்குவிக்க வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து, ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்விதமாக இந்த படம் அமையும். ஊடகத் துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி” என்றார்.
நடிகை ஷோபனா பேசும்போது, “எனக்கு இரண்டாவது படமே மிகப் பெரிய படமாக அமைந்தது. மிக்க மகிழ்ச்சி. இந்த வாய்ப்பினை எனக்களித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநர்கள் இருவருக்கும் மிக்க நன்றி. ஹன்சிகா அவர்களுடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று இத்திரைப்படம் வெளியாகிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் அபிஷேக் வினோத் பேசும்பொழுது, “தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான விஜய்சந்தர் என்னுடைய குரு. ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தில் மிகப் பெரிய வாய்ப்பினை எனக்குக் கொடுத்தார். அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.
நடிகர் தங்கதுரை பேசும்போது, “கே.எஸ்.ரவிக்குமார் ஸாரின் படங்களை பல முறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணி புரிந்துள்ளேன்.
‘வாலு’ திரைப்படத்தில் விஜயசந்தர் அவர்கள் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பை கொடுத்தார். இயக்குநர்களான குரு சரவணன் மற்றும் சபரி இருவரும் இரவு, பகல் பாராமல் இந்த படத்திற்காக உழைத்துள்ளனர். ஹன்சிகாவுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. அவர் மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுடன் நடித்ததும் மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் இந்த படத்திற்கு தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர். வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.
இயக்குநர் குரு சரவணன் பேசும்போது, “தமிழுக்கும், கடவுளுக்கும், எங்களது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் கே.எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக் கொண்டதுதான். தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர்தான். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போதே, தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும். “அதில் நாம் மூவரும் இணைந்து பணிபுரியலாம்” என்று விஜயசந்தார் எங்களிடம் கூறினார்.
நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள். இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப் போகும். இந்தக் கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம். பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி ஆசி பெற்றோம்.
கதாநாயகி ஹன்ஷிகா, கலை இயக்குநர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம் C.S., ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள்தான். இந்தப் படத்திற்கு எந்த அளவுக்கு சிறப்பான உழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.
ஒரு ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப்பூர்வமான கதைக் களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம். ஊடகத் துறையினரின் ஆதரவை வேண்டுகிறோம்…” என்றார்.
இயக்குநர் சபரி பேசும்போது, “நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதரான கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம். அவரை நாங்கள் எங்களின் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார்.இனிமேல் எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம்.
அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குநராக இருப்பதால் எங்களுக்கு பலவிதத்திலும் பக்க பலமாக இருந்தார். இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும், இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள்.
சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குநர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும்போதிலிருந்து நல்ல பழக்கம். அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம். இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார்.
ஊடகத் துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,” நான் எப்பொழுதும் இயக்குநர்களை பற்றித்தான் முதலாவதாக பேசுவேன். ஆனால், இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குநர்தான். அதனால் அவரைப் பற்றித்தான் முதலில் பேசுகிறேன்.
இந்த இரட்டை இயக்குநர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பேயே இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள்.
சாம்.C.S உடன் எனக்கு ரொம்ப நாட்களாகப் பழக்கம் உள்ளது. கலைஞர்-100 நிகழ்விற்கு நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார். அவருக்கு நல்ல குரல் வளம் உள்ளது. அவருக்கு இசை வெறி உள்ளது.
கலை இயக்குநர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்சிகாவும் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.
‘கார்டியன்’ என்ற தலைப்பு இந்தக் கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள். சபரி சற்று சாதுவான ஆள். இசையமைப்பாளர் கூறியதுபோல இருவரையும் கணிக்க முடியாது. எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்…” என முடித்தார்.
இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
படம் வருகின்ற மார்ச்-8-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.














