2015-ல் செம்மரம் வெட்டியதாக சொல்லி ஆந்திர வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘RED SANDAL WOOD’.
இந்தப் படத்தை J.N.சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கே.ஜி.எப்.ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் , சைதன்யா, விஜி, அபி, கர்ணன், ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, இசை – சாம் CS, பாடல்கள் – யுகபாரதி, சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி, எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின், சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், வசனம் – சி.முருகேஷ் பாபு, தயாரிப்பு – J.பார்த்தசாரதி, கதை, திரைக்கதை, இயக்கம் – குரு ராமானுஜம்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் குரு ராமானுஜம் பேசும்போது, “இந்த கதை 2015-ம் ஆண்டில் தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப் பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப் பகுதியில் ஆந்திர வனத் துறையினரால் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார். அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார் வெற்றி.
அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராதபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
கடத்தல்காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள்..? என்கவுண்டர் செய்ய சொன்னது யார்..? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக் கூடிய செம்மரம் வெட்டும் குற்றத்திற்காக மனித உரிமையை காலில் போட்டு மிதித்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி..?
இதில் பிரபாவிற்கும், கர்ணாவிற்கும் என்ன நடந்தது என்பதை உண்மைக்கும், மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை…” என்றார்.
இதன் படப்பிடிப்பு ரேணிகுண்டா, தலக்கோணம், தேன்கணி கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது.
இத்திரைப்பபடம் வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீசுப்புலக்ஷ்மி மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் K.ரவி வெளியிடுகிறார்.









