ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பேட்டரி’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், கன்னட நடிகரான ராஜ் தீபக் ஷெட்டி இந்தப் படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார். மற்றும் யோக் ஜப்பி, எம்.எஸ்.பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ணகுமார், ராம், பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பு – ஜான்சன், நிர்வாக தயாரிப்பாளர்கள் நவீன் – ஜெய் சம்பத், பாடல்கள் – நெல்லை ஜெயந்தா, தமயந்தி, சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், நடன இயக்கம் – தினேஷ், படத் தொகுப்பு – ராஜேஷ்குமார், கலை இயக்கம் – சிவா யாதவ், திரைக்கதை, வசனம் – ரவிவர்மா பச்சையப்பன், ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – சித்தார்த் விபின், கதை – இயக்கம் மனிபாரதி, இணைத் தயாரிப்பு – எம்.செங்குட்டுவன், எம். கோபிநாத், தயாரிப்பு – சி. மாதையன்.
“சூது கவ்வும் தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே இந்த ‘பேட்டரி’ திரைப்படம்.
கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபாரத் தளமாக்கிவிட்டனர். அந்த வியாபாரத்தின் விபரீத முடிவுகளைத்தான் இந்தப் படம் சொல்கிறது.
சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதைக் கண்டு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புகழ்.
மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும் சேவையைச் செய்கிறார்.
தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலைகிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர் விக்டர்.
இந்த மூன்று கதாபாத்திரங்களையும் ஒரு புள்ளியில் இணைத்து சொல்லப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை நிச்சயமாக எகிறச் செய்யும்.
பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்.. எதற்கு.. எப்படி?.. என்கிற ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கும்…” என்கிறது படக் குழு.
இத்திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வருகிறது.









