full screen background image

“புகை, மது, மாதுவால் கெட்டுப் போகும் கலைஞர்கள்…” – நடிகர் சிவக்குமார் வேதனை!

“புகை, மது, மாதுவால் கெட்டுப் போகும் கலைஞர்கள்…” – நடிகர் சிவக்குமார் வேதனை!

“திறமைசாலி கலைஞர்கள் தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது…” என்று நடிகர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த பாடலாசிரியரும், இயக்குநரும், பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றி பத்திரிகையாளர் அருள்செல்வன் ‘சகலகலா வல்லபன்’ என்கிற பெயரில் ஒரு நூலை தொகுத்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்ட இயக்குநர் கே. பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார்.

IMG_0062

விழாவில் நூலை வெளியிட்டு நடிகர் சிவக்குமார்  பேசும்போது, “திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக் கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய். அப்போது அந்த பையன் இட்லி துணியை தூக்கி  மேலும் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். கூடவே சித்தியும் இருந்தாள். குளித்து விட்டு வந்த போது சித்தி சொன்னாள் ‘நீயில்லாதபோது உன் பையன் 2 இட்லியைத் திருடி விட்டான்’ என்று.

அப்போது  ‘அவனுக்காகத்தானே நானே இந்தத் தொழிலைச் செய்கிறேன்?’ என்று கூறி மறுநாள் முதல் 3 இட்லியை கூடுதலாகக் கொடுக்க ஆரம்பித்தாள் அந்தத் தாய். அன்று இட்லி திருடிய அந்தப் பையன்தான் எஸ்.எஸ்.வாசன். 

அப்படிப்பட்ட வாசன் ஒரு சைக்கிளோடு சென்னைக்கு வந்தார். பெரிய தயாரிப்பாளர் ஆனார்.1948-ம் ஆண்டிலேயே கல்கத்தாவில் தன் படத்துக்கு 10450 லேம்ப் போஸ்டர் போட்டவர் எஸ்.எஸ்.வாசன். 

1934-ல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். கதாநாயகனான அவருக்கு 750 ரூபாய்தான் சம்பளம். கதாநாயகிக்கு 1000 ரூபாய் சம்பளம். இயக்குநருக்கு 500 ரூபாய் சம்பளம். இயக்கியவர் கே.சுப்ரமணியம். படம் ‘பவளக்கொடி’. இப்படி பலர் பற்றியும் அறிய காரணமாக இருந்ததுதான் ‘பேசும் படம்’ பத்திரிக்கை.

IMG_0007

சைக்கிள் ஒட்டத் தெரியாமலேயே ஒரு சைக்கிளை தெரியாமல் எடுத்துக் கொண்டுபோய் முதல் வாய்ப்பில் நடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் 10 ஆண்டுகள் போராடி ‘ராஜகுமாரி’யில் நடித்தார். பல ஆண்டுகள் போராடினார். அப்படி குட்டிக்கரணம் போட்டுத்தான் எம்.ஜி.ஆர். மேலே வந்தார். ஆனால் கையில் பத்து ரூபாய் இருந்தபோது, ஏழு ரூபாய் செலவு செய்து… மூன்று ரூபாய் தானம் செய்தவர் எம்.ஜி.ஆர். 

எப்போது உன் கையில் பத்து ரூபாய் இருந்தும், அதில் ஒரு ரூபாய்கூட தானம் செய்ய மாட்டாயோ , அப்படிப்பட்ட நீ 1000 ரூபாய் இருந்தாலும், நூறு ரூபாய் சத்தியமாக தானம் செய்ய மாட்டாய். இன்று கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள நடிகர்கள் என்ன தானம் செய்வார்கள்..? 

அன்று இது போன்ற  நல்ல செய்திகளை  மட்டுமே வெளியிட்ட பத்திரிகைதான் ‘பேசும் படம்’. பிறகு மாடர்ன் ஆர்ட் வந்த பிறகு ஆர்ட்  மாறியது போல, வல்லபன் வந்தது மாடர்ன் ஆர்ட் காலம். 

அப்போது வாழ்க்கையில் நான் மிகவும் சிரமப்பட்ட காலம். இரண்டு வெள்ளை சட்டைகளைத்தான் வைத்திருப்பேன்.  இரண்டு வெள்ளை சட்டை  வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேச வைத்தேன். அப்படிப்பட்ட காலத்தில் ‘பேசும் பட’த்தில் ஆசிரியராக வல்லபன் இருந்தார்.

என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி எம்.ஜி.ஆர். பத்மினி, சாவித்திரி என்று பலரையும் வரைய வைத்து அந்த 24 ஓவியங்களையும்  ‘பேசும் பட’த்தில் வெளியிட்டார். அப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன்.

IMG_0072

அவர் பிறந்த ஊர்  கேரளாவின் திருச்சூர். பிறந்த ஆண்டு 1943. அவர் 60 வயதில் இறந்துவிட்டார். 5-ம் வகுப்புவரை கேரளாவில் படித்துவிட்டு 6-ம் வகுப்பிலிருந்து இங்கு வந்து படித்து எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.

அவருடைய அப்பா பிரியாணி கடை வைத்திருந்தார்.  கல்லூரியில் படித்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால்  விருது வாங்கியிருக்கிறார். அந்த இளைஞன்தான் ‘பிலிமாலயா’ வல்லபன் .

‘பிலிமாலயா’வில் ஒரு மோட்டோ போட்டிருப்பார். ‘நல்லதைச் சொல்லும்போது நன்றி கூற நேரமில்லாதவர்கள்.. அல்லதைச் சொல்லும்போது எரிந்து விழ உரிமையில்லாதவர்கள்’ என்று..! என்ன  ஒரு தைரியம் பார்த்தீர்களா..? 

‘பிலிமாலயா’வில் ‘எரிச்சலுடடும் எட்டு கேள்விகள் ‘என்று கேட்டு வாங்கிப் போடுவார். பொதுமக்கள் பேசிக் கொள்வதை தைரியமாகக் கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்றுப் போடுவார். என்னிமும் கேட்டார்கள் ‘மகாவிஷ்ணு, சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே நடிக்க வராதா..?’ என்று..! இப்படிப் பலரிடமும் கேட்டுப் போட்டுள்ளார். வாசனிடமும் கேட்டதுண்டு.. ‘சினிமாவே விஷூவல் மீடியா என்று சொல்கிறார்கள்.. நீங்கள் பக்கம் பக்கமாக வசனம் வைத்துள்ளீர்களே..?’ என்று.

முதன் முதலில் ஆபாவாணனையும், பாரதிராஜாவையும் மெரீனா பீச்சில் சந்திக்க வைத்து பேட்டியெடுத்து வெளியிட்டவர்  வல்லபன். இதைவிடப் பெரிய விஷயம் இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டு பிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன்தான். இது எவ்வளவு பெரிய விஷயம்..?

கதாசிரியர் ‘அன்னக்கிளி’ செல்வராஜுக்கு இன்று உடல்நிலை சரியில்லை. அவரை நாம் கொண்டாட வேண்டும். முதன் முதலில் வல்லபனை ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் பாடல் எழுத வைத்தவர் அவர்தான். அதற்கான சன்மானம் 200 ரூபாயை டெல்லி திரைப்பட விழாவுக்குச் சென்ற வல்லபனுக்கு, சித்ரா லெட்சுமணன் மூலம் கொடுத்து அனுப்பினார் செல்வராஜ். தயாரிப்பாளர் கோவைத்தம்பி கதையோ, திரைக்கதையோ, வசனமோ வல்லபனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார். 

IMG_0224

இறுதியாக ஒன்று.. கடவுள் என்பவனும், காலம் என்பவனும் கொடூரமானவர்கள். படைப்புக் கலைஞனை கொஞ்சம்விட்டால் நம்மையே கேள்வி கேட்பான் என்று நினைத்துதான் நம்மைப் போன்ற கலைஞர்களுக்கு மூன்று சாபங்களை கொடுத்திருக்கிறான் கடவுள்.

ஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகனாக இருந்தாலும் சரி, நடனம் ஆடுபவனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, அவனுக்குப் புகை, மது, மாது என்கிற மூன்று சாபங்களைக் கொடுத்திருக்கிறான் கடவுள். 

இதை உலகளவில் சொல்வேன். கலைஞர்கள், மறைந்தவர்கள்  என்று யாரை எடுத்துக் கொண்டாலும்… நடிகர்களும் சரி.. நடிகைகளும் சரி.. இயக்குநர்களும் சரி.. பலருக்கும் புகை, மது, மாது  பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் 25 ஆண்டுகள் இந்த உலகத்தில் நம்முடன் இருந்திருப்பார்கள். இன்னும் நிறைய சாதித்திருப்பார்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். கலைஞர்களுக்கு நல்ல, ஆரோக்கியமான உடல் நலன்தான் மிக மிக முக்கியம். ஆகவே, கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள்…” என்றார் நடிகர் சிவகுமார். 

விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள்  சித்ரா லெட்சுமணன்,  பேரரசு,  ஈ.ராம்தாஸ்,  த.செ.ஞானவேல்,  கவிஞர்கள் அறிவுமதி, யுகபாரதி, பத்திரிகையாளர்கள் தேவிமணி, ‘மக்கள் குரல்’ ராம்ஜி, குங்குமம் கே.என். சிவராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ராஜசேகர் தொகுத்து  வழங்கினார்.

Our Score