இளையராஜாவின் இசையில் பாடிய கல்லூரி மாணவிகள்..!

இளையராஜாவின் இசையில் பாடிய கல்லூரி மாணவிகள்..!

இசைஞானி இளையராஜா தான் வாக்களித்தபடியே 9 கல்லூரி மாணவிகளையும் ஒரு திரைப்படத்தில் பாட வைத்துவிட்டார்.

சமீப காலமாக இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை பல கல்லூரிகளிலும் இசை விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் சமீபத்தில் சென்னை ராணி மேரிக் கல்லூரியிலும், எத்திராஜ் கல்லூரியிலும் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவை கலந்து கொண்டார்.

இந்தக் கல்லூரிகளில் நடந்த விழாக்களில் அந்தந்த கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகள், அவருடைய இசையில் வெளிவந்த பாடல்களை அவர் முன்பாகவே பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

பலரது குரல் வளத்தைப் பார்த்து இசைஞானி இளையராஜாவே அசந்து போனார். அப்போது அந்த அந்த மாணவிகள் அதே மேடையில் இசைஞானியிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள். "நாங்கள் சினிமாவில் பாட முடியுமா..?" என்று தங்களது விருப்பத்தை வேண்டுகோளாகத் தெரிவித்தார்கள்.

அவர்களது வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா மேடையில் பாடியவர்களில் சில மாணவிகளை அழைத்து தனது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதியளித்தார். 

அதன்படி அவர் தற்போது இசையமைத்து வரும் ‘தமிழரசன்’ என்கிற புதிய படத்தில் அந்த மாணவிகளை பாட வைத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

S.N.S. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பில் கெளசல்யா ராணி தயாரித்து வரும் தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வருகிறார். பாபு யோகேஸ்ரவன் இயக்கி வருகிறார்.

இசைஞானியிடம் விண்ணப்பம் வைத்து 10 நாட்களுக்குள்ளாக அவருடைய இசையமைப்பிலேயே பாடிவிட்ட அதிசயத்தைக் கண்டு அந்த மாணவிகள் இன்னமும் அதிர்ச்சி விலகாமல் இருக்கிறார்கள்..!