full screen background image

80’s பில்டப் – சினிமா விமர்சனம்

80’s பில்டப் – சினிமா விமர்சனம்

‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு படம் இந்த ’80’s பில்டப்.’

‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய காமெடிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் கல்யாண், இந்தப் படத்தில் சந்தானத்தோடு இணைந்திருப்பதாலும், சந்தானமும், பேயும் இணைந்தாலே ஹிட்டுதான் என்கின்ற எண்ணம் ஆடியன்ஸ் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்திருப்பதாலும் படத்தின் மேல் ஏகத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா திரைப்படம் என்பதைப் பார்ப்போம்.

பெரிய ஜமீன்தார் வீட்டில் பெரிய பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் வரைபடம் ஒரு கத்தியில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

அதைத் தேடி வரும் ஒரு கும்பல் கத்தியை கைப்பற்ற முயற்சிக்க அந்த முயற்சியில் அவர்கள் திருடி கொண்டு வந்திருந்த வைரங்களை இழக்கிறார்கள்.

ஜமீன் வீட்டில் தாத்தா துர் மரணம் அடைகிறார். இழவு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த நாயகி மீது, இறந்த தாத்தாவின் பேரன் அதாவது நாயகன் காதல் கொள்கிறான்.

தன் தாத்தாவை அடக்கம் செய்து வீட்டை கழுவிய ஈரம் காய்வதற்குள் அவளே என்னை காதலிப்பதாக சொல்ல வைக்கிறேன் என்று தன் தங்கையிடம் சவால் விடுகிறான்.

நாயகியை காதலிக்க வைப்பதற்காக பற்பல திட்டம் போடுகிறான் நாயகன்.

அதேநேரம், அந்த மரண வீட்டில் எப்படி தாங்கள் இழந்த வைரங்களையும், தாங்கள் தேடி வந்த கத்தியையும் எடுப்பது என்று திருட்டுக் கும்பல் திட்டம் போடுகிறது.

இறுதியில் யாரின் திட்டம் வென்றது என்பதே இப்படத்தின் கதையும் திரைக்கதையும்.

படத்தின் தலைப்பு 80’s பில்டப் என்று இருப்பதால் 1980ம் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களோ, காட்சிகளோ அல்லது அந்த காலத்து வாழ்க்கை முறையோ கதையிலோ திரைக்கதையிலோ முக்கிய அங்கம் வகிக்கம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படத்தில் 1980-ம் காலகட்டம் நாயகன் கதிர் (சந்தானம்) கமல் ரசிகர் என்றும், அவரின் தாத்தா (ஆர்.சுந்தர்ராஜன்) ரஜினி ரசிகர் என்று சொல்வதற்கும் மட்டுமே பயன்பட்டு இருக்கிறது.

படத்தில் மன்சூர் அலிகான், மனோபாலா, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆர்.சுந்தர்ராஜன், ரெட்டின் கிங்க்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த், கூல் சுரேஷ், சுவாமிநாதன், தங்கதுரை என்று ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும் கதிராக நடித்திருக்கும் சந்தானம்தான் பெரும்பாலான படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார் என்று சொன்னால் நடிகர் ஆனந்தராஜ் மீதி படத்தை தன் இடுப்பில் சுமந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு சந்தானத்திற்கு இணையாக ஆனந்தராஜ் அடிக்கும் ஒன் லைனர்கள் இப்படத்தில் மிகச் சிறப்பாக ஒர்க்-அவுட் ஆகி இருக்கிறது.

பெண் வேடமிட்டு திருட்டு கும்பலுக்கு உதவ வந்திருக்கும் ஆனந்தராஜ், இறந்து போன ஆர்.சுந்தர்ராஜனின் மகனும், சந்தானத்தின் தகப்பனுமான ஆடுகளம் நரேனின் சபல வலையில் சிக்கிக் கொண்டு போராடும் போராட்டங்களும், அப்படியான போராட்டங்களின் போதும் அவர் உதிர்க்கும் காமெடி வசனங்களும் திரையரங்கை அதிர வைக்கின்றன.

இழவு வீட்டில் கறிச் சோறின் வாசம் பிடித்து சமையற்கட்டில் திருட்டுத்தனமாக சென்று சோறு திங்கும்போது, மாட்டிக் கொண்டு அவர் பேசும் இயல்பான வசனங்கள் சிரிப்பலைகளை உருவாக்குகின்றன.

சிறு வயதில் இருந்தே தன்னோடு சவால்விட்டுக் கொண்டு திரியும் தன் தங்கையிடம் போட்ட சவாலில் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் திணறும் சந்தானம் தன் கூட்டணி நண்பர்களையும் எதிர்க் கூட்டத்தில் இருந்து எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் கலாய்க்கும் இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார்.

சண்டையின்போது ரஜினி ரசிகனாக மாறி ரஜினியின் உடல் மொழியை அச்சு அசலாக தன் உடலுக்குள் கொண்டு வரும் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

சுவாமிநாதன் மற்றும் கூல் சுரேஷ் உடனான கவுண்டர்களில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

சபலத் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் இந்த கதாபாத்திரத்திலும் தன் அற்புதமான நடிப்பால் தடம் பதிக்கிறார்.

இவர் மஞ்சக்கிளியாக வரும் ஆனந்த்ராஜ் மடியில் படுத்துக் கொண்டு செய்யும் சேஷ்டைகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி சிறப்பான தேர்வு. எல்லாவிதமான முக பாவனைகளும் சிறப்பாக வருவதோடு சில கேமரா கோணங்களில் அழகாகவும் தெரிகிறார்.

தங்கையாக நடித்திருக்கும் சங்கீதா, சந்தானத்திடம் போடும் சவால்கள்தான் படத்தை நகர்த்துகின்றன என்பதால், பல காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு.

அவற்றில் பாஸ் மார்க் வாங்குவதோடு அழகாகவும் இருக்கிறார் என்பதால், இனி வரும் பல படங்களில் அழகான தங்கையாக இவரைப் பார்ப்போம் என்கின்ற நம்பிக்கை பிறக்கிறது.

தாத்தாவாக வந்து இறந்து போகும் ஆர்.சுந்தர்ராஜனுக்கும், எமதர்மனாகவும் சித்ரகுப்தனாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் முனிஷ்காந்த் போன்றோருக்கு பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம். இருப்பினும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர்த்து படத்தில் நடித்திருக்கும் இன்ன பிற நடிகர்களான சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா, மயில்சாமி, மன்சூர் அலிகான், தங்கதுரை போன்றோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

பாடல்களில் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பின்னணி இசையில் கோட்டைவிட்டு சொதப்பி இருக்கிறார்.

காமெடி படங்களுக்கு என்றே போடப்பட்டு இருக்கும் ஆர்கெஸ்டிரா வகை இசை கோர்ப்புகளை ஆங்காங்கே அள்ளி தெளித்திருக்கிறார். அவ்வளவே. புதுமையாக ஏதும் இல்லை.

ஜேக்கப் ரத்தினராஜின் கேமரா முழுத் திரைப்படமும் ஒற்றை வீட்டிற்குள் நடக்கின்றது என்கின்ற எண்ணத்தை மறக்கடிப்பதோடு, ஒளி வண்ணங்கள் மூலம் ஒரு கலர்புல்லான காட்சியமைப்பை படத்துக்கு கொடுத்திருக்கிறது.

இயக்குநர் கல்யாண் இன்னும் கொஞ்சம் கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

படத்தில் வரும் காமெடிகள் தனித் தனியான காமெடிகளாக மட்டுமே இருக்கின்றது. படத்தின் கதையோடு சேர்ந்த காமெடியாக இருந்திருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்.

அதுபோல் காமெடி காட்சிகள் என்ற பெயரில் சில காட்சிகளில் எல்லை மீறி இருப்பதையும் தவிர்த்து இருக்கலாம்.

80’s பில்டப்பின் மிகப் பெரிய பில்டப்பே, மீண்டும் சந்தானம் மற்றும் பேய் காம்போ என்பதுதான். ஆனால் இங்கு பேய் என்பது மருந்துக்கு கூட இல்லை.

மற்றபடி சந்தானத்தின் ஒன் லைன் காமெடிகளும், ஆடுகளம் நரேன் – ஆனந்த்ராஜ் கூட்டணி செய்யும் அதகளங்களும் நம் சிரிப்பிற்கு கியாரண்டி கொடுப்பதால் இந்த 80’s பில்டப் படத்திற்கு தாராளமாக ஒரு விசிட் அடிக்கலாம்.

மதிப்பெண் – 2.75/5

Our Score