பேய்கள் சீஸன் இன்னமும் ஓயவில்லை.. தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.. அடுத்துத் தயாரிப்பில் இருப்பது ‘ஜீரோ’ திரைப்படம்.
‘மங்காத்தா’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்த அஸ்வின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மரியான்’ படத்தில் பரத்பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வி.அருண்குமார் இப்படத்தை இயக்கி கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார். ‘நெடுஞ்சாலை’ ஷிவேதா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஜே.டி.சக்ரவர்த்தி, துளசி, ரவி ராகவேந்தர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். பாபுகுமார் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
‘ஜீரோ’ என்று தலைப்பு வைத்திருப்பதால், கதையென்ன என்று கேட்டால் எதுவுமே இல்லை என்பது போல ஒரு கதையைச் சொல்கிறார் இயக்குநர்.
“ஆனந்தமாக வாழ்ந்து வரும் ஒரு இளஞ்ஜோடிகளின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு அதீத பலம் வாய்ந்த சக்தி குறுக்கிடுகிறதாம். இதனால் அந்தத் தம்பதிகளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் படத்தின் கதை…” என்கிறார் இயக்குநர்.
“அதென்ன அதீத பலம் வாய்ந்த சக்தி…?” என்று கேட்டால், “இந்த பிரபஞ்ச உலகத்தை இறைவன் படைத்தபோதே சில அமானுஷ்ய சக்திகளையும் சேர்த்துதான் உருவாக்கியிருக்கிறார். அப்போதைக்கு அவற்றை தனது சக்தியால் அடக்கி வைத்திருந்த அவர், ‘மனித இனம் என்றைக்கு நேர்மையை விட்டு விலகுகிறதோ அன்றைக்கு நீங்கள் விடுதலைகி அவர்களைத் தொற்றிக் கொண்டு உங்களது பாவச் செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள்..’ என்று இறைவன் அந்தச் சாத்தான்களிடம் சொன்னதாக வேத நூல்கள் சொல்கின்றன.
அந்தக் காலகட்டம் இப்போது வந்துவிட்டதால் அந்த சைத்தான் சக்திகள் சக்திகள் உயிர் பெறுகின்றன. அப்படி உயிர் பெற்ற ஒரு சக்தி புதிதாக ஷிவேதாவின் உடலுக்குள் புகுந்து அவரை படுத்தும்பாடுதான் கதை..” என்றார்.
“அந்த அமானுஷ்ய சக்தியை எப்படி ஸ்கிரீன்ல காட்டப் போறீங்க?”ன்னு கேட்டால்.. “வழக்கமா இந்த மாதிரியான திகில் படங்கள்ல வர்ற அகோரமான முகம், ரத்தம், கருப்பு உருவம் அப்படியெல்லாம் எதுவும் இதுல இருக்காது.. ஆனா நீங்க எதிர்பார்க்காத மாதிரி, அந்த அமானுஷ்ய சக்தியை வித்தியாசமாக காட்டியிருக்கோம்… படம் பார்க்கும்போது நிச்சயமா அது உங்களை கவரும்..” என்கிறார் இயக்குநர்.
சென்னையில் உள்ள பின்னி மில்ஸில் போடப்பட்ட செட்டில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றதாம். படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோ, மகாபலிபுரம், அண்ணாநகர் டவர் பார்க் மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் 12 நாட்கள் நடைபெறுமாம். வரும் நவம்பர் மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறதாம்.