full screen background image

ஜீரோ – சினிமா விமர்சனம்

ஜீரோ – சினிமா விமர்சனம்

ஜீரோவில் இருந்துதான் அனைத்தும் துவங்குகிறது என்கிற அரிய தத்துவத்தை முன் வைத்து கதையின் துவக்கம் இருப்பதால் ‘ஜீரோ’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் போலும்..!

இந்த உலகத்தைப் படைத்த கடவுள் முதலில் ஆதாமை படைத்தார். பின்பு அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளை படைத்தார் என்று விவிலியம் கூறுகிறது. அதே விவிலியத்தில் ஏவாளுக்கு முன்பாக கடவுள் சிருஷ்டித்த லிலித் என்கிற பெண்ணைப் பற்றி அதிகமாக எங்கேயும் செய்திகள் இல்லை.

இந்த லிலித்தையும், கடவுளையும், சாத்தானையும் முன் வைத்து கதை பிடித்து திரைக்கதையாக்கம் செய்து படைத்திருக்கிறார் இயக்குநர்.

சமூக சேவை செய்து வரும் ஹீரோ அஸ்வின், யாருமற்ற அனாதை பொண்ணான ஷிவதாவை காதலிக்கிறார். திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் அஸ்வினின் அப்பா இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார். காரணம், ஷிவதான் முன் கதைச் சுருக்கம்தான்.

அவளது அம்மா ஒரு மன நோயாளி. ஷிவதா கருவில் இருக்கும்போதே மனநோயாளியான அவளது அம்மா இவளைப் பிரசவித்ததும் இறந்து போகிறாள். அனாதை இல்லத்திலேயே வளர்ந்து வந்திருக்கும் ஷிவதாவை நினைத்து பயப்படும் அஸ்வினின் அப்பா, ஷிவதாவுக்கும் அவளது அம்மா மாதிரியே மனநோய் வந்துவிடுமோ என்று அநியாயத்திற்கு பயப்படுகிறார்.

அஸ்வின் அப்பாவைப் புறக்கணித்துவிட்டு ஷிவதாவை திருமணம் செய்து கொள்கிறார். தனி பிளாட்டில் பால் காய்ச்சி குடியும், குடித்தனத்தையும் ஆரம்பிக்கும்போது ஷிவதாவிற்குள் பல உருமாற்றங்கள்.

அவளது அம்மாவை போலவே இவளுக்கும் மனநோய் பீடிக்கிறது. அவளுக்குள் லிலித் புகுந்து அவளது அம்மாவை அவளிடத்தில் காட்டி “வேறொரு உலகம் நமக்காக காத்திருக்கிறது. வா போகலாம்..” என்று அவளை அழைத்துச் செல்கிறது. அவளது அம்மாவின் ஒவ்வொரு ஆசை காட்டலும், கணவன் அஸ்வினின் ஒரு தொடுதலிலேயே காணாமல் போகிறது.

இதனால் எரிச்சலாகும் கெட்ட ஆன்மாவான லிலித், ஷிவதாவின் உடலுக்குள் பிரவேசித்து அவளை முழுமையாக ஆட்கொள்கிறாள். இதனால் ஷிவதா சில விசித்திரமான நடவடிக்கைகளை காண்கிறாள்.. செய்கிறாள்.. அவளால் ஒருமித்த மனதோடு இருக்க முடிவதில்லை.

மனநல மருத்துவரோ “இவளை என்னால் குணப்படுத்த முடியாது” என்கிறார். இந்த நேரத்தில் அஸ்வினுக்கு ஒரு விபத்து ஏற்பட.. ஷிவதா மாயமாகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.

முன் கதைச் சுருக்கமாக லிலித்தின் கதையை இடையிடையே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கடவுளால் படைக்கப்பட்ட லிலித், ஆதாம் மூலமாக  கர்ப்பம் அடைகிறாள். ஆனால் இதன் தொடர்ச்சியாக அவள் சாத்தானுக்கு அடிமையாகி கடவுளுக்கு எதிரியாகிறாள். ஆதாமோடு சண்டை போடுகிறாள். அவன் பேச்சைக் கேட்க மறுக்கிறாள்.  இதையறிந்த கடவுள் அவளைக் கண்டிக்கிறார். ஆனால் லிலித் கேட்க மறுக்கிறாள்.

சாத்தானின் தூண்டுதலால் ‘ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டால்  கடவுளை எதிர்க்க தனக்கு கூடுதல் பலம் கிடைக்கும்’ என்று எண்ணுகிறாள் லிலித். இதையறிந்த கடவுள் அவளது கருவில் இருக்கும் குழந்தையை இறந்தே பிறக்க வைக்கிறார்.  இதனால் மனம் வெறுத்த லில்லித் எங்கேயோ  போய்விட, அதன் பிறகே  கடவுள் ஆதாமுக்காக ஏவாளைப் படைத்தாராம்.

இந்த ஏவாளும் சாத்தானின் பேச்சைக் கேட்டு, தொடக் கூடாத ஆப்பிள் பழத்தை ஆதாம் மூலமாக பெற வைத்து.. கடவுளின் கோபத்திற்கு ஆளாகி.. இதற்கு தண்டனையாக அனைத்துவித மனித குணங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கையில் சிக்கித் துன்பமாகுமாறு சபிக்கப்படுகிறாள். இது தெரிந்த கதைதான்.

காணாமல் போன லிலித் இதன் பின்பு தனக்கென்று ஒரு தனி உலகத்தை படைத்துக் கொள்கிறாள். கடவுளை பழி வாங்குவதாக நினைத்து  காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கி அவர்களது கர்ப்பத்தை கலைத்து, அவர்களை இறப்புக்கு ஆளாக்கி தனது உலகத்திற்கு அழைத்துக் கொள்ளும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறாள். அவர்களை தன் உலகத்தில் பேயுருவில் அலைய விடுகிறாள் லிலித்.

இப்போது லிலித்தின் மாய உலகத்தில் இருக்கும் ஷிவதாவின் அம்மாவின் மூலமாக ஷிவதாவை தன் வயப்படுத்துகிறாள் லிலித். அம்மாவின் அழைப்பின் பேரில் அவளது உலகத்தை அடிக்கடி சென்று பார்க்கும் ஷிவதா, அதனுள் முழுமையாக ஆட்பட முடியாமல் தவிக்கிறாள். இந்த்த் தடுமாற்றத்துக்குக் காரணம் அஸ்வினின் உண்மையான காதல்தான் என்பதை புரிந்து கொண்ட லிலித்.. முழுமையாக ஷிவதாவை ஆக்கிரமித்து அவளை கொலை செய்ய பார்க்கிறாள்.

இந்த நேரத்தில் இறந்து போன தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வரும் ஜே.டி.சக்கரவர்த்தியின் துணையுடன் அஸ்வின் தனது மனைவியை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதும் திரைக்கதைதான்.

கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதைதான்.. சயின்டிபிக் சைக்காலஜிக்கல் திரில்லர் ஸ்டோரின்னும் சொல்லலாம். இல்லையென்றால் சைக்காலஜிக்கல் ஸ்டோரின்னும் சொல்லலாம்..! ஆனால் படத்தின் மையப்பிடி இதுவரைக்கும் இந்த உலகத்தில் அதிகம் அறியப்படாத லிலித்தின் கதை பற்றியதுதான்..!

இது போன்ற படங்களில் கதையையும் மீறி நடிகர்கள் தங்களது ஆளுமையைக் காட்டிவிட்டால், படத்திற்கு ஏதோவொரு பெயர் கிடைக்கும் என்பார்கள். அது இந்தப் படத்திற்கு நிச்சயம் கிடைக்கும். உபயம் கதாநாயகி ஷிவதா.

இது ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் ‘நெடுஞ்சாலை’ ஷிவதாவை தேடிப் பிடித்து களத்தில் இறக்கியிருக்கிறார்கள் போலும். ஒரு சின்ன ஷாட்டில்கூட நடிப்பென்றே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். சிம்ப்ளி சூப்பர்ப்.. சட்.. சட்டென மாறும் அவரது முக பாவனைகள்.. ‘நவராத்திரி’ சிவாஜி மாதிரி வீட்டுக்குள்ளேயே பலவித கெட்டப்புகளில் அஸ்வின் வேடத்தில் தன்னை சூழ்ந்து நிற்கும் கெட்ட ஆவியின் செயலை பார்த்து திகைப்பது.. குழம்புவது.. என்று படம் பார்ப்பவர்களையும் கொஞ்சம் பதைபதைக்க வைத்திருக்கிறார்.

அழகும், அறிவும் ஒரு சேர சேர்ந்தால் விஜயலட்சுமி என்பார்களே.. அது போலத்தான் அழகும், நடிப்பும் ஒன்று சேர்ந்து மிளிர ஷிவதா படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார்.

அஸ்வினுக்கு இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவரைவிடவும் இரண்டு இரண்டு காட்சிகள் என்றாலும் டாக்டர் ஷர்மிளாவின் பயமுறுத்தலே படத்திற்கு கொஞ்சம் பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

எதிர்வீட்டு துளசியின் குணாதிசயம்.. அவரது மீனுக்கு நேரும் கதி.. சாத்தானின் ஆக்கிரமிப்பு.. சாத்தானின் எச்சரிக்கையையும் மீறி லிலித் தன் ஆதிக்கத்தை செயல்படுத்த நினைக்கும் காட்சிகள்.. ஷிவதாவின் சில நொடியில் மாறும் பேயாட்சி செய்யும் காட்சிகள்.. கிளைமாக்ஸில் தொடுதல் என்ற உணர்ச்சியில் அனைத்தும் மிஸ்ஸாகி லிலித்தின் ஆயுட்காலம் முடிவது.. இதெல்லாம் ஒட்டு மொத்தமாக கதை புரிந்தவர்களுக்கு நிச்சயம் ரசிப்பாகத்தான் இருக்கும்.

ஆனால் அதற்கு முன்பாக கதையை முன் பின்னாக மாற்றிப் போட்டு திரைக்கதை அமைத்திருந்தால் படத்தில் நிகழ்ந்திருக்கும் குழப்பத்தை பெரிதும் தவிர்த்திருக்கலாம்.

பாபுகுமாரின் ஒளிப்பதிவு படம் முழுவதிலுமே அழகு. பாராட்டுக்குரியது. இன்னொரு உலகத்தைக் காட்டுகின்ற காட்சிகளில் கேமிராவின் பங்களிப்பு அதிகம்.  காதுகளுக்கு பஞ்சு வைக்கும் அளவுக்கு போகாமல் கொஞ்சமாகவேனும் பயமுறுத்தியிருந்த நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசைக்கு பாராட்டுக்கள்..

“கடவுளைப் பழி வாங்க யாரையும் நம்பக் கூடாது. நாமளேதான் செயலில் இறங்கணும்..” என்று சாத்தான் சொல்வதோடு படம் முடிகிறது. இதேபோல, ரசிகனை ஈர்க்க நடிகர்களும், இயக்குநரும் மட்டுமே போதுமானதல்ல.. நல்ல கதையும், அதைவிட சிறந்த திரைக்கதையும் கிடைக்க வேண்டும் என்பதையும் இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது..!

இன்னமும் கொஞ்சம் முயற்சித்து மிக எளிய முறையில் பாமரனுக்கும் புரிகின்ற வகையில் திரைக்கதையை எழுதியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்..!

Our Score