இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை திசை திருப்பியது யார் என்று தெரியவில்லை..
இசையமைத்தல், ஆல்பம் வெளியிடுதல், இறை வணக்கம்.. தனது இசைப் பள்ளியின் வேலைகள்.. உலகச் சுற்றுலா என்று இருந்தவரை இப்போது படத் தயாரிப்பில் யாரோ தள்ளிவிட்டிருக்கிறார்கள்.
ரஹ்மான் சமீபத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறாராம். இந்த நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக அவரே எழுதிய கதையை வைத்து பாலிவுட்டில் படமாக்க இருக்கிறாராம். இதற்கடுத்த கட்டமாக தமிழில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.
இது குறித்து பேட்டியளித்துள்ள ரஹ்மான், “வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள்… நமக்குள்ளே கதைகளை ஒருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கியிருக்கிறது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து படமாக எடுக்கவிருக்கிறேன்.
20 வயதுள்ள புதுமுக ஹீரோ நடிக்கிறார். இயக்குனரும் தேர்வாகி விட்டார். நானும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இதனை தயாரிக்கிறோம்.
இந்த பணிகள் முடிந்ததும் தமிழில் படம் தயாரிக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி விட்டன. தயாரிப்பு மட்டுமே.. சினிமா இயக்கும் எண்ணமெல்லாம் எனக்கில்லை. அது மிகப் பெரிய பொறுப்பு. எதையெல்லாம் என்னால் சுமக்க முடியாது…” என்று சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆனாலும் இசையமைப்பாளர்களின் கவனம் திசை திரும்பும்போதெல்லாம் இசையமைப்புப் பணிகளிலும், படைப்புகளிலும் தடங்கல்கள் ஏற்படும்.. கோடம்பாக்கத்தில் இதற்கு முந்தைய இசையமைப்பாளரின் வரலாறுகள் இதையெல்லாம் சொல்கின்றன.
ரஹ்மான்ஜி சுதாரித்துக் கொண்டால் அவருக்கு நல்லது..!