full screen background image

யூகி – சினிமா விமர்சனம்

யூகி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை UAN Film House நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Rajadas Kurias இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா ல‌ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவாளராகவும், ஜோமின் படத் தொகுப்பாளாராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும். ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார். கதாசிரியர் பாக்யராஜின் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கியிருக்கிறார். பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.

வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்.

இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்து வருகிறது.  

தனது உதவியாளர்களுடன் இணைந்து ஆனந்தியைத் தேடத் துவங்குகிறார் நரேன். இந்தத் தேடுதல் வேட்டையின் முடிச்சுக்கள் அவிழ.. அவிழ.. இந்தக் களத்திற்குள் நிற்கும் யாருமே உண்மையாளர்கள் இல்லை. அனைவருமே போலிகள் என்பது காட்சிக்குக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக நிரூபணமாகிறது.  

கார்த்திகா யார்? கார்த்திகாவின் கணவன் யார்? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? பிரதாப் போத்தன் கண்டு பிடிக்க சொல்லும் பெண் யார்? சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கைத் தீர்த்தது யார்? ஜான் விஜய் எதற்காக கொல்லப்பட்டார்? இந்த எல்லா கேள்விகளுக்குமான விடைதான் இந்த யூகி’ படம்.

துப்பறியும் நிபுணரான நரேனை சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதும், பார்வையாலேயே குற்றங்களை அளவெடுப்பதும், கதிரை கண்காணிப்பிலேயே வைத்திருக்க அவர் எடுக்கும் அவசர ஸ்டண்ட்களும், தனது சக ஊழியர்களிடையேகூட உண்மையாக நடந்ததை மறைத்துவிட்டு கதையைத் திருப்பவதுமாய் ஒரு அழுத்தமான நடிகராய் திரையில் வலம் வருகிறார் நரேன்.

சாமி சரணம் என்று சொன்னபடியே கொலை செய்யக்கூட தயங்காத நடிப்பைக் காண்பித்திருக்கிறார் நட்டி நட்ராஜ். இவருக்கான பின்புலக் காட்சிகள் அழுத்தமாய் இல்லாதது மட்டும்தான் ஒரேயொரு குறை.

முதல் பாதியில் கதிருக்கு அதிக வேலையில்லை என்றாலும், போகப் போக அவரால்தான் கதையே நகர்கிறது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நேர் வழியில் சென்றால் நீதி கிடைக்காது என்று நினைத்து புத்திசாலித்தனமாய் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் அந்தக் கதாபாத்திரத்திற்கு கதிர் சாலப்பொருத்தம்தான்.

எப்போதும் இறுகிய முகம்.. பதட்டப்படாத குணம்.. காரியத்தில் முனைப்பு.. செய்து காட்டுவதில் திறமை என்று தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை உணர்த்தியிருக்கிறார் கதிர்.

பவித்ரா லட்சுமி ஒரு பரிதாபமான கதாப்பாத்திரத்தில் உயிராய், உணர்வாய் நடித்திருக்கிறார். உண்மை தெரியும்போது நம்மால் பாவப்படத்தான் முடிகிறது.

கார்த்திகாவாக வரும் ஆனந்தியின் நடிப்புதான் படத்தில் ரசிகர்களை கொஞ்சம் ஒன்றிப் போக வைக்கிறது. இயலாமையின் காரணமாய் வாடகைத் தாய் விஷயத்துக்கு ஒத்துக் கொண்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அந்தப் பரிதவிப்பை நடிப்பில் அழகாய் காட்டியிருக்கிறார் ஆனந்தி. பாராட்டுக்கள்.

ஜான் விஜய் வழக்கம்போல தெனாவெட்டு கேரக்டரை அலட்சியமாகச் செய்து பரிதாபமாய் செத்துப் போகிறார். வாடகை தாய் முறைக்கு புரோக்கர் வேலை பார்க்கும் மருத்துவராக வினோதினியும் தன் பங்குக்கு விஷம் தடவிய நடிப்பைக் காண்பித்து ஸ்கோர் செய்திருக்கிறார். பிரதாப் போத்தன் நடித்து வெளிவந்திருக்கும் கடைசி படம் இது. அந்த ஒரு பெருமையை மட்டுமே பிரதாப்பிற்கு இந்தப் படம் கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கேமிரா நல்லதும் செய்யவில்லை. கெடுதலும் செய்யவில்லை. படத்தையும் டிஸ்டர்ப் செய்யாமல் ரசிக்க வைத்திருக்கிறது. இது போதும் எனலாம்.

பாடலுக்கான ரஞ்சின் ராஜின் இசை மென்மையைக் கூட்டியிருக்கிறது. டான் வின்சென்ட்டின் பின்னணி இசை படத்தின் திகில், சஸ்பென்ஸ் உணர்வை கடக்க வைத்திருக்கிறது.

சமீப நாட்களில் பிரபலமாகியிருக்கும் வாடகைத் தாய் விவகாரத்தில் மறைந்திருக்கும் சில விஷயங்களை இந்தப் படம் நேர்மையாகப் பேசியிருக்கிறது. பிள்ளை பெற்றுக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ள தம்பதிகள் பிள்ளைப் பேறு காலத்திலேயே பிரிந்து போனால் அந்தப் பிள்ளைக்கு யார் பொறுப்பு.. அந்த வாடகைத் தாயை யார் கவனித்துக் கொள்வது.. இது போன்ற இந்த விஷயத்தில் மறைந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் எடுத்துக் காட்டியிருப்பது நல்ல விஷயம்தான்..!

கொஞ்சம் பிகசினாலும் கதை புரியாமற்போய்விடும் அபாயம் உள்ள இந்தக் கதையை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் திரைக்கதை திறமைக்கும், சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் கடைசிவரையிலும் கொண்டுபோயிருக்கும் விதத்திற்கும், நடிகர், நடிகைகளை அழுத்தமாக அந்தக் கேரக்டராகவே வாழ்வதுபோல நடிக்க வைத்திருக்கும் இயக்கத் திறமைக்காகவும் மனதாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகள்.

சிறந்த திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புவர்களுக்கேற்ற படம் இது..!

RATING : 4.5 / 5

Our Score