திருத்தணி, சிறுவாபுரியில் ‘குச்சி ஐஸ்’ விற்ற நடிகர் சமுத்திரக்கனி…!

திருத்தணி, சிறுவாபுரியில் ‘குச்சி ஐஸ்’ விற்ற நடிகர் சமுத்திரக்கனி…!

சென்ற ஆண்டு தமிழில் வெளியாகி சிறந்தத் திரைப்படமாக பலராலும் பாராட்டப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹலிதா சமீமின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ஏலே.’

இத்திரைப்படத்தினை Y Not Studios நிறுவனமும் Reliance Entertainment நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. S.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை சக்கரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து தயாரித்துள்ளார்.

படைப்பாளிகள் தம்பதியரான புஷ்கர் & காயத்ரி Wall Watcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத்தினை கிரியேட்டிவ் புரொடக்சன் செய்துள்ளனர்.

இசை – காபெர் வாசுகி, அருள் தேவ், ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், VFX சூப்பரவைஸர் – லின்கின் லிவி, ஒலிப்பதிவு – S.அழகியகூத்தன், ஒலி வடிவமைப்பு – G.சுரேன், விளம்பர வடிவமைப்பு – கபிலன்.

இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கிராமப் புறங்களில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் முத்துக்குட்டி’  என்னும் கலகலப்பான மனிதராக நடித்திருக்கிறார்.

படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் இந்த முத்துக்குட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் பெருமளவில் வந்துபோகும் திருத்தணி முருகன் கோவிலின் முன்பாக  ஏலே’ ஐஸ் வண்டியில் குச்சி ஐஸ்  விற்பனை செய்துள்ளார் நடிகர் சமுத்திரக்கனி.  

நகரம் முழுதும் முருகக் கடவுளின் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்கு படத்தைப் பற்றிய அறிமுகத்தை கொண்டு செல்லும் பொருட்டு படக் குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து இந்த விளம்பரத்தினை செய்துள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி ஐஸ் விற்பதை கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். சமுத்திரக்கனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து,  அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார்.

இதனை தொடர்ந்து இதே மாதிரியான விளம்பர யுக்தியினை சிறுவாபுரி முருகன் கோவிலிலும் சமுத்திரக்கனி செய்தார். அங்கும் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இப்படி தைப் பூசத் திருநாளில் துவங்கப்பட்ட ஏலே’ படத்தின் விளம்பர பணிகள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்ததில் நடிகர் சமுத்திரக்கனியும் ஏலே’ படக் குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் பொருட்டு, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது தந்தையுடனான உறவு குறித்து பேசி வெளியான சிறு வீடியோவும் ரசிகர்களிடம் நேர்மறையான பாராட்டுக்களை பெற்றுள்ளது.

படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்று வருகிறது.

இந்த ஏலே’ திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Our Score