full screen background image

“பார்த்தவுடன் காதல்; பழகியவுடன் அத்துமீறலா…?” – ‘ராஜலிங்கா’ படம் சொல்லும் நீதி..!

“பார்த்தவுடன் காதல்; பழகியவுடன் அத்துமீறலா…?” – ‘ராஜலிங்கா’ படம் சொல்லும் நீதி..!

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகத்தில் விநியோகஸ்தராக இருப்பவரும், சில படங்களைத் தயாரித்தவருமான திருச்சி மாரிமுத்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ராஜலிங்கா’.

இப்படத்தின் இயக்குநரான ஷிவபாரதியும், இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் அருண் பாண்டியன் என்பவரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  நாயகியாக சோனியா நடித்துள்ளார்.

இயக்குநர் ஷிவபாரதி இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பல இயக்குநர்களிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த தயாரிப்பாளர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பை ஷிவபாரதிக்குக் கொடுத்திருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி பேசும்போது, “தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு வாழ்வியல் சிக்கலை கதைக் கருவாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

பார்த்தவுடன் காதல்… பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.

அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.

இப்படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். அருண் பாண்டியன் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வேடம் மிகவும் பேசப்படும்.

இந்தப் படத்தின் நாயகி வேடத்துக்கு இருபதுக்கும் மேற்பட்டோரைப் பார்த்தோம். கதையைக் கேட்டுவிட்டு பயந்து போய் பலரும் நடிக்க முடியாது என்று போய்விட்டார்கள். இப்போது நாயகியாக நடித்திருக்கும் சோனியா, கதையைக் கேட்டதும் இது போன்ற பவர்ஃபுல்லான வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்திருந்தேன் என்று சொல்லி நடிக்க வந்தார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் வல்லவனின் இசையில் பாடல்கள் இளைஞர்களைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது. நிச்சயம் பாடல்கள் வெற்றிப் பாடல்களாக இருக்கும் என்பது நிச்சயம்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன….” என்றார் இயக்குநர் ஷிவபாரதி.

Our Score