full screen background image

“ஜெயப்பிரதாவுக்கு ஜோடி என்றவுடன் உடனே ஓடி வந்தேன்..” – நடிகர் நெப்போலியன் பேச்சு..!

“ஜெயப்பிரதாவுக்கு ஜோடி என்றவுடன் உடனே ஓடி வந்தேன்..” – நடிகர் நெப்போலியன் பேச்சு..!

ஏ.கே.எஸ்.எண்ட்டெர்டெயிண்மென்ட் அண்ட் மீடியா சார்பில் தயாரிப்பாளர் அஷ்வனி குமார் சகாதேவ் தயாரித்திருக்கும் புதிய படம் ‘யாகம்’.

இந்தப் படத்தில் தயாரிப்பாளரின் மகனான ஆகாஷ் குமார் நாயகனாகவும், மிஸ்தி சக்ரவர்த்தி என்ற மும்பைப் பெண் நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர்.

மேலும், நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே  இவர்களுடன் பல பிரபல தெலுங்கு நடிகர்கள் நடித்துள்ளனர். 

இயக்குநர் ஷங்கரிடம் அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக இருந்த நரசிம்மா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கூடுதலாக மெகா இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இந்தப் படத்தின் இயக்குநரான நரசிம்மாவை வாழ்த்துவதற்காக  ஷங்கரின் யூனிட்டில் பணியாற்றிய இயக்குநர்கள் அறிவழகன், ஹோசிமின், ஆடம்ஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.

Yaagam Movie Press Meet Stills (21) 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஹோசிமின், “ஏ.எம்.ரத்னம் சார் தயாரிப்பில் நான் தெலுங்கில் இயக்கிய ஒரு படத்துக்கு பணியாற்ற நரசிம்மா வந்தார். அதில் நான் எடுத்த ஒரு சைக்கிள் ரேஸ் காட்சியில் அவருடைய பங்களிப்பை பார்த்து வியந்து போனேன் . 

ஒரு முறை ஹைதராபாத்திற்கு ஷூட்டிங்கிற்காக போயிருந்த ஷங்கர் சார், அங்கிருந்து எனக்கு போன் செய்து, ‘திறமையான அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு ஆள் எனக்கு உடனே வேண்டும். நீயே யாரையாவது பிக்ஸ் பண்ணி என்னை வந்து பார்க்கச் சொல்..’ என்றார். எனக்கு சட்டென்று நியாபகத்திற்கு வந்தது நரசிம்மாதான். உடனேயே நான் நரசிம்மாவை போனில் அழைத்து ஷங்கர் ஸாரை போய் பார்க்கச் சொன்னேன். சொன்னேன்.

அடுத்த நாளே எனக்கு போன் செய்த ஷங்கர் சார், ‘ரொம்ப நல்ல ஆளை அனுப்பி வைச்சிருக்க..” என்று என்னை பாராட்டினார். அப்படியே ஷங்கர் சாரிடம் பணியாற்ற ஆரம்பித்த நரசிம்மா அவருடைய மிகப் பெரிய நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். இப்போது இவர் இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.

Yaagam Movie Press Meet Stills (20) 

இயக்குநர் அறிவழகன் பேசும்போது, ”நரசிம்மா நல்ல திறமைசாலி. பழகுவதற்கும் இனியவர். அது அனைவரும் அறிந்த  விஷயம். அவர்  எடுக்கும் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாகத்தான் இருக்கும். இப்போது நாம் பார்த்த காட்சிகள் அதைத்தான் உறுதி செய்திருக்கின்றன…” என்றார்.

Yaagam Movie Press Meet Stills (22)

படத்தின் இசையமைப்பாளரான கோட்டி பேசும்போது,  “தமிழில் சரித்திரம் படைத்த ‘சந்திரலேகா’, மற்றும் ‘மிஸ்ஸியம்மா’ படங்களுக்கு இசை அமைத்த ராஜேஸ்வரராவின் மகன் நான். ‘ராஜ்’ என்ற நண்பரோடு சேர்ந்து ‘ராஜ்கோட்டி’ என்ற பெயரில் நிறைய தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்தேன். பின்னர் தனியாக வந்தும் நிறைய படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டு இருக்கிறேன். 

தமிழ் ரசிகர்களின் இசை ரசனை அபாரமானது. ‘அருந்ததி’ படத்துக்கு நான் கொடுத்த இசைக்கு தெலுங்கு ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்களே என்னை கொண்டாடினார்கள். 

இந்தப் படத்தின் இயக்குநரான நரசிம்மா என்னை சந்தித்தபோது ‘அருந்ததி படத்துக்கு கொடுத்தது போல இசை கொடுங்கள்’ என்றார். ‘அருந்ததி போல படம் எடுங்கள். நான் இசை தருகிறேன்’ என்றேன். அவரும் எடுத்துக் கொண்டு வந்தார். நானும் கொடுத்து இருக்கிறேன். பாடல்களில் மட்டுமல்ல.. பின்னணி இசையில்கூட ‘அருந்ததி’ படம் அளவுக்கு இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறேன். ‘அருந்ததி’ படத்திற்குக் கொடுத்த வரவேற்பு போலவே இந்தப் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

நான் துவக்கக் காலத்தில் தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தபோது அனைத்து பாடல்களின் பாடல் பதிவும் சென்னையில்தான் நடக்கும். அப்போது இப்போதைய ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான், தேவி ஸ்ரீபிரசாத், எஸ்.எஸ்.தமன், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இப்போதைய பல பிரபல இசையமைப்பாளர்களும் எனது இசைக்காக இசைக் கருவிகளை மீட்டியிருக்கிறார்கள். இதில் நான் பெரிதும் பெருமையடைகிறேன்..” என்றார்.

ponvannan  

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “இந்தப் படம் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை…  அதில் தெய்வ சக்தி ஜெயிப்பதை சொல்லும் படம். நான் இதில் சாமியாராக நடித்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு டெக்னீஷியன். இந்தப் படத்தில் நடிக்கும்போது, டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ந்து இருக்குன்னு எனக்கு தெரிஞ்சது. அதாவது நான் காசு வாங்கி அதைக் கத்துக்கிட்டேன். 

முதன்முதல்லா எனக்கு தெரியாத மொழியில் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள் மத்தியில், சம்ஸ்கிருத சுலோகம் எல்லாம் சொல்லி நடிச்சதன் மூலமா, தெலுங்கு மொழியில் இப்போது கால் பதித்துவிட்டேன்…” என்றார் உற்சாகமாக.

naasar 

நடிகர் நாசர் பேசும்போது, “பொன்வண்ணன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இனி தெலுங்கு  சினிமா உலகின் கதவுகளும் திறக்கும். ஒரு பக்கம் இது நல்ல சக்தி, கெட்ட சக்திக்கு இடையேயான படம் என்று சொல்லப்பட்டாலும் நான் அதை அப்படி பார்க்கல.

ஒரு அம்மா, மகனுக்கு இடையேயான பாசத்தை ஆழமாக சொல்லும் படம் இது. என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது, பொன்வண்ணன் நடித்த கேரக்டருக்குத்தான் அழைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இயக்குநர் ஒரு காமெடியான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.  ரசிகர்கள் காமெடி என்று அதை உணர்ந்து ரசித்தால் நான் இதன் பின்பு காமெடி நடிகனாகவும் ஆகி விடுவேன்…” என்றார். 

Yaagam Movie Press Meet Stills (16)

நடிகை ஜெயப்பிரதா பேசும்போது, “அரசியலுக்கு போய்விட்டு திரும்பியிருக்கும் நானும், நெப்போலியனும் இதில் ஜோடியாக நடித்திருக்கிறோம். மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்றிருந்தபோது இயக்குநர் நரசிம்மா வந்து இந்தக் கதையை என்னிடம் சொன்னார்.

எனக்கு தமிழ்ப் படங்களில் நடிப்பது எப்போதுமே சந்தோஷமான விஷயம். இந்தப் படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டதால் நான் ஆர்வமாக நடித்தேன்.

ஒரு தாய்க்கும், மகனுக்குமான அன்பைச் சொல்லும் படம் இது. இன்னொரு பக்கம் பேண்டசி கதையாகவும் இருக்கும். தீய சக்திகளிடமிருந்து மகனைக் காக்க போராடும் காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். இனிமேல் இந்தப் படம் போன்று நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்…” என்றார்.

Yaagam Movie Press Meet Stills (6) 

நடிகர் நெப்போலியன் பேசும்போது, “இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன். அவரிடம் கேட்கும்போதெல்லாம் ‘கூப்பிடறேன். கூப்பிடறேன்…’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு போய் விடுவார். நரசிம்மா அவரது அசோசியேட் என்பதால்தான் இந்தப் படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒத்துக் கொண்டேன். 

அப்புறம் இன்னொரு விஷயம்.. நான் ஜெயப்பிரதாவின் மிகப் பெரிய பெரிய ரசிகன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. கடைசியில் அவரை ஒரு சக எம்.பி.யாக பாராளுமன்றத்தில்தான் சந்திக்க முடிந்தது.

பாராளுமன்றத்திற்கு ஜெயப்பிரதாவும், ஹேமமாலினியும் வரும்போது எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பார்கள். அப்பேர்ப்பட்ட ஜெயப்பிரதாவுக்கு ஜோடி என்றவுடன் மறுபேச்சு பேசாமல் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். 

இந்தப் படத்தை மிக சிறப்பாக எடுத்திருக்கிறார் இயக்குநர் நரசிம்மா.  நான் அமெரிக்காவில் இருந்து வந்து நடித்துக் கொடுத்ததற்காக, படப்பிடிப்பின் கடைசி நாளில் எனக்கு மாலை அணிவித்து பாராட்டியபோது நெகிழ்ந்து போனேன்…” என்றார்.

Yaagam Movie Press Meet Stills (2)

நிறைவுரை ஆற்றிய இயக்குநர் நரசிம்மா, “எனக்கு இது முதல் படம். எனினும் இவ்வளவு பெரிய நடிக நடிகையர்கள் எல்லாம், எனக்கு நடித்துக் கொடுத்ததும், ஒத்துழைப்பு கொடுத்ததும் மறக்க முடியாத ஒன்று. கேமராமேன் ரமண சல்வா இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்க முடியாது. அவ்வளவு பலமாக எனக்கு இருந்தார். 

லக்ஷ்மி நாராயணனின் ஒலி வடிவமைப்பு இந்தப் படத்தின் பெரும் சிறப்புகளில் ஒன்று. நான் இசைக்கு கோட்டி சாரிடம் போக முக்கியக் காரணம், அவரது பின்னணி இசைக்காகத்தான்.  ஆனால் அவர் அதோடு மிக அட்டகாசமான பாடல் இசையும் கொடுத்திருக்கிறார். 

புதுமுகங்கள் என்றாலும் ஆகாஷ் குமார் – மிஸ்தி சக்ரவர்த்தி இருவரும் மிக சிறப்பாக நடித்தார்கள். படத்தில் 64 நிமிடங்களுக்கு சி.ஜி.வொர்க் இருக்கிறது. எல்லாமே கதையோடு ஒன்றி வருபவைதான். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது…” என்றார்.

Our Score