“என் பள்ளிப் பருவக் காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன…” – நடிகர் கமல்ஹாசனின் பாராட்டு..!

“என் பள்ளிப் பருவக் காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன…” – நடிகர் கமல்ஹாசனின் பாராட்டு..!

வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரித்திருக்கும் புதிய படம் ‘பள்ளிப் பருவத்திலே’.

இந்தப் படத்தில் பிரபல  இசையமைப்பாளர் சிற்பியின் மகனான நந்தன் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் சிறு வயது கேரக்டரிலும், ‘காதல் கசக்குதய்யா’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்த வெண்பா இந்தப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் கே.எஸ்.ரவிக்குமார்,  தம்பி ராமைய்யா, பொன்வண்ணன்,  ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், பருத்தி வீரன் சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வினோத்குமார், இசை – விஜய் நாராயணன், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, வாசு கோகிலா, எம்.சி.சாரதா,  படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், எழுத்து, இயக்கம் – வாசுதேவ் பாஸ்கர், தயாரிப்பு – டி.வேலு. 

இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் ஏற்கெனவே ‘மறுபடியும் காதல்’ என்ற படத்தை இயக்கியவர்.

Palli-Paruvathilae-Movie-Audio-Launch-Stills-15 

படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, “இந்தப் ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இந்தப் படம் ஒவ்வொருவருடைய பள்ளி பருவத்தில் உள்ள ஞாபகங்களை நினைவுபடுத்தும். நந்தன் ராம், வெண்பா இருவரும் மாணவர்களாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். எனக்கும் இந்தப் படத்தின் டிரெயிலரைப் பார்த்தவுடன் என் பள்ளி பருவ காலங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அந்த வகையில், இந்த ‘பள்ளி பருவத்திலே’ படத்தை பார்க்க நானும் ஆர்வமாக  இருக்கிறேன்..”  என்றார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மற்றும் முக்கிய விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாண்டிராஜ், சற்குணம், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, மற்றும் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், அபிராமி ராமநாதன், தேவயானி  ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். 

naasar

விழாவில் நடிகர் நாசர் பேசும்போது, “இன்றையச் சமூகச் சூழலில் இன்னும் சாதீயத்தின் பிரம்பால் அடி வாங்கும் காதல் கதைதான் இந்த பள்ளிப் பருவத்திலே திரைப்படம். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வரவேண்டும்..” என்றார். 

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “பொதுவாக தமிழ் நடிகைகளுக்கு நடிப்பே வராது. ஆனால் இப்போது வெண்பா என்ற அழகிய தமிழ்ப் பெயரோடு, தமிழ் பேசத் தெரிந்த ஒரு கதாநாயகி தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான விசயம். அவர் நன்றாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்..” என்றார்.

venpa-nandhan ram 

படத்தின் ஹீரோவான நடிகர் நந்தன் ராம், “இவ்வளவு நல்ல திரைப்படத்தில் திறமையான, மூத்த நடிகர்கள் நடித்துள்ள படத்தில் நான் நாயகனாக அறிமுகமாவது எனக்குப் பெருமையான விஷயம். இந்த வாய்ப்பை எனக்களித்த படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..” என்றார்.  

படத்தின் கதாநாயகி வெண்பா பேசும்போது, “நான் தமிழ்ப் பெண் என்பதோடு நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்லி மேடையில் பலரும் பாராட்டினார்கள். இதைக் கேட்கும்போதே சந்தோஷமாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றிகள்..” என்றார். 

Palli-Paruvathilae-Movie-Audio-Launch-Stills-8

இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் பேசும்போது, “நம் அனைவருக்குள்ளும் இருக்கும் பள்ளி வாழ்க்கையின் நாஸ்டால்ஜி இந்தப் படத்தில் இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் இன்னும் நம்மிடையே இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை இப்படம் விமர்சனம் செய்கிறது. இது போன்ற பள்ளிக் கால கதைகளுடன் கூடிய திரைப்படங்களை கேலி, கிண்டலாய் விமர்சனம் செய்பவர்களுக்கு இங்கே கூடியிருக்கும் பத்திரிகை நண்பர்கள் மூலம் சவால் விடுகிறேன்.. நிச்சயமாக எனது ‘பள்ளிப் பருவத்திலே’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெறும்..” என்றார் உறுதியாக.    

Our Score