full screen background image

யார் இவன் – சினிமா விமர்சனம்

யார் இவன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர்குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். 

விளம்பர டிஸைன்ஸ் – வெங்கட், பி.ஆர்.ஓ. – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், படத் தொகுப்பு – பிரவின் புடி, ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் – ரெய்னா ஜோஷி, எழுத்து, இயக்கம் – டி.சத்யா.

இயக்குநர் சத்யா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான ‘படகோட்டி’, நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பில் உருவான ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தமிழின் மிக மூத்த இயக்குநர்களில் ஒருவரான T.பிரகாஷ்ராவின் பேரனாவார். இந்த தமிழ்ப் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புதிய இயக்குநராக அறிமுகமாகிறார். சத்யா ஏற்கெனவே தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ். ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சைக்கோ திரில்லர் டைப் கதை என்றாலும், இது போன்ற கதைகள் கொரிய, ஹாலிவுட் படங்களில் நிறையவே வந்துவிட்டது என்பதென்னவோ உண்மை.

நாயகன் சச்சின், கோடீஸ்வர குடும்பத்தின் ஒரே வாரிசான ஹீரோயின் ஈஷா குப்தாவை விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். கல்யாணத்திற்கு மறுநாளே கோவாவுக்கு தேனிலவுக்குச் சென்ற இடத்தில் ஈஷா குப்தாவை கொலை செய்துவிட்டதாக ஹீரோவை கோவா போலீஸ் கைது செய்கிறது.

இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு அதிகாரியாக கிஷோர் நியமிக்கப்படுகிறார். அவர் இந்த வழக்கை விசாரிக்க.. விசாரிக்க விசாரணைகள் சச்சினுக்கு எதிராகவே அனைத்தும் இருக்கின்றன. பணத்துக்காகத்தான் ஈஷாவை தான் காதலிக்கிறேன் என்று சச்சின் தன்னிடம் சொன்னதாகச் சொல்கிறார் ஈஷாவின் நண்பியான தன்யா.

சச்சின் தன் ஒரே மகளை கொலை செய்துவிட்டான் என்பதால் அவனை உடனடியாக தூக்கில் போடும்படி சொல்கிறார் ஈஷாவின் தந்தை. இதற்கிடையில் சச்சின் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலின் ஜெயிலரின் சொந்தத் தம்பி சென்னையில் நடைபெற்ற கபடி போட்டியின் இறுதியாட்டத்தில் எதிர்பாராதவிதமாக இறந்து போக இதற்குக் காரணம் சச்சின்தான் என்று ஜெயிலரும் நினைக்கிறார். இதனால் சச்சினை எப்படியாவது ஜெயிலிலேயே கொலை செய்ய திட்டமிடுகிறார் ஜெயிலர்.

இந்த நேரத்தில் கிஷோர் வழக்கை விசாரிக்க, விசாரிக்க.. கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் ஈஷாவின் உடல் இதுவரையிலும் கிடைக்காமல் ஒரேயொரு கை மட்டுமே கிடைக்கிறது. கூடவே ஈஷாவுக்கு முன்பாகவே கேத்தரின் என்ற பெண்ணை சச்சின் காதலித்த்தும் தெரிய வருகிறது. அந்தப் பெண்ணும் இப்போது காணாமல் போய்விட்டதாகத் தெரிய விசாரணை டிவிஸ்ட்டு மேல் டிவிஸட்டாக பறக்கிறது..

கடைசியில் ஈஷாவை யார்தான் கொலை செய்தார்கள்..? சச்சின் என்ன ஆனார்..? ஜெயிலரின் திட்டம் நிறைவேறியதா என்பதையெல்லாம் படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சச்சின் அறிமுக நடிகர் என்பதால் நடிப்பாக அவர் காட்டியவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. கதையும், கதைக் களமும் சஸ்பென்ஸ், திரில்லராக இருப்பதால் உணர்ச்சிப்பூர்வ நடிப்புக்கு இடமில்லாமல் இருப்பதால் அதிகம் கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார் ச்ச்சின்.

நாயகியான ஈஷா குப்தாவுக்கு மிகப் பெரிய வேலையெல்லாம் இல்லை. நடுவில் சில டூயட்டுகளுக்கு வந்து செல்கிறார். இவரது தோழியாக நடித்திருக்கும் தன்யாவுக்குத்தான நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருக்கிறார் தன்யா. சில குளோஸப் ஷாட்டுகளை பார்க்கும்போது பேசாமல் இவரையே ஹீரோயினாக்கியிருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது.

கிஷோர் அழுத்தமான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சதீஷை விசாரணை செய்யும்போது மட்டும் அந்த தோரணை தானாகவே வெளியில் தெரிகிறது. சதீஷ் தான் சம்பந்தப்பட்ட காட்சியின் சீரியஸ் இல்லாமல் காமெடியாகவும் பேசியிருப்பதால் அந்தக் காட்சியின் தீவிரம் ரசிகர்களுக்கு புரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

கிஷோரின் உதவியாளராக வரும் சப்-இன்ஸ்பெக்டர் அவ்வப்போது ஏதோ ஒன்றைச் சொல்லி காமெடி போல் திரித்துக் கொள்ள.. உஷ்.. அப்பாடா.. அவர் வாயை மூடச் சொல்லுங்கப்பா என்று சொல்லத் தோன்றுகிறது.

பிரபு வில்லத்தனம் கலந்த அப்பா கேரக்டரில் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ் அப்பாவி சிறைவாசியாக வந்து சிறை தொடர்பான காட்சிகளை கடத்துவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

ஜெயிலராக நடித்தவரின் மூர்க்கத்தனமான பேச்சும், ஆக்சனும் உண்மையான வில்லனே அரசு அதிகாரிதான் என்பதாக படத்தையே திசை திருப்பியிருக்கிறது. கொலை என்றதும் கொலையாளியின் மீது வந்திருக்க வேண்டிய வெறுப்பும், கோபமும் ஹீரோ மீது படியவே இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் சோகமான விஷயம்.

படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஒளிப்பதிவுதான். அத்தனை பிரமாதம். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிக்குக் காட்சி ஒளிப்பதிவில் வித்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநரான பினேந்திரா மேனன். அதிலும் கோவாவின் ஜெயில் காட்சிகளிலும், கோவாவின் இயற்கை எழிலை காட்டுகின்ற காட்சிகளிலும் இயற்கை அழகை அப்படியே அழகாக படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்..!

எஸ்.எஸ்.தமனின் இசையில் பின்னணி இசைதான் படத்திற்கு பொருந்தியிருக்கிறது. பாடல் காட்சிகள் வழக்கம்போல இதுவும் ஒரு பாட்டு என்பதுபோல கடந்து சென்றாலும் பாடல்களை படமாக்கியவிதம் அழகு என்பதால் ரசிக்க வைத்திருக்கின்றன.

கபடி ஆட்டத்தை ரசிக்கும்படி எடுத்தவர்கள், அந்தச் சண்டை காட்சிகளை மட்டும் அதேபோல் எடுக்கத் தவறியிருக்கிறார்கள். ஜெயிலரின் இந்தக் கொலை வெறி தாக்குதல் தெரிந்தும் கிஷோர் அமைதியாக இருப்பதும்.. சச்சின் ஒரு மனநோயாளி போல தெரிவதாக பிரதாப் சொல்லும்போது மேற்கொண்டு அது பற்றி எந்த விசாரணையும் இல்லாமல் விட்டுவிடுவதுமாக திரைக்கதை நடுவில் தொங்கியிருக்கிறது..!

படத்தின் எதிர்பாராத முடிவுதான் படத்திற்கே முதுகெலும்பாக இருக்கிறது. ஆனால், இந்த முடிவை ரசிக்க வைக்கும் அளவுக்கு முன் காட்சிகள் தயாராக இல்லாததால், படத்தை முழுமையாக ‘ஆஹோ’ ‘ஓஹோ’ என்று சொல்ல முடியவில்லை.

Our Score