“சினிமாவுலகில் இருந்து விலகியது ஏன்..?” – நடிகர் அப்பாஸின் விளக்கம்..!

“சினிமாவுலகில் இருந்து விலகியது ஏன்..?” – நடிகர் அப்பாஸின் விளக்கம்..!

‘காதல் தேசம்’, ‘வி.ஐ.பி.’, ‘பூச்சூடவா’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘பூவேலி’, ‘ராஜா’, ‘படையப்பா’, ‘ஆனந்தம்’, ’த்ரீ ரோஸஸ் போன்ற முக்கியமான படங்களில் நடித்திருந்தவர் நடிகர் அப்பாஸ்.

தனி நாயகனாகவே 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த இவர், பிறகு இரண்டு நாயகர்களில் ஒருவராகவும், இரண்டாம் நிலை நாயகனாகவும் தொடர்ந்து பல படங்களில் 2016-ம் ஆண்டுவரையிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக 2016-ம் ஆண்டில் வெளியான ‘பஞ்சக்கலம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு திடீரென்று தமிழ்த் திரையுலகத்தில் இருந்து காணாமல் போனார். சில நாட்களில் இந்தியாவில் இருந்தே குடும்பத்துடன் வெளியேறிய அப்பாஸ், ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.

பின்பு அங்கிருந்து நியூஸிலாந்துக்குக் குடியேறியிருக்கிறார். நியூஸிலாந்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாக்களில் ஹீரோவாக நடித்துவிட்டு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் ஒரு நாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்பதே யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தது.

ஆனாலும், எந்த வகையிலும் தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடிக்கு அவர் தன்னை வைத்துக் கொண்டது ஏன் என்றுதான் தெரியவில்லை.

5 வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தான் விலகியது ஏன் என்பது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறார் நடிகர் அப்பாஸ்.

இது குறித்து அவர் எழுதியிருப்பது இதுதான் :

“ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பின் மீதான ஆர்வம் சுத்தமாகப் போய்விட்டது. சினிமா துறை எனக்கு போர் அடிக்கத் துவங்கியது. மனம் விரும்பாத விஷயத்தை செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் சினிமா துறையைவிட்டு விலகினேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் என்றாவது ஒரு நாள் அவர் சென்னைக்குத் திரும்பி கோடம்பாக்கத்தில் கால் வைப்பார் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்..!

Our Score