தமிழ்ச் சினிமாவில் ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் நடிப்பில், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் எந்த அளவுக்கான மரியாதையைப் பெற்றிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்யச் சென்றபோது நடந்த சுவாரஸ்யத்தை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சமீபத்தில் அவருடைய சொந்த யு டியூப் சேனல் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
“நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு நடிகனாக வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நடிப்பு வேட்கையை எனக்குள் தோற்றுவித்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான். அவருடைய ‘பராசக்தி’, ‘பாசமலர்’ போன்ற படங்களைப் பார்த்துதான் நடித்தால் இவரைப் போல நடித்துப் பெயர் பெற வேண்டும் என்று நினைத்துதான் கோடம்பாக்கத்தில் கால் வைத்தேன். ஆனால் காலம் என்னை இயக்குநராக்கிவிட்டது.

அப்போதும் நான் இதுவரையிலும் நடிகர் திலகத்தை வைத்து படம் இயக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நல்ல கதை கிடைத்தது. இதில் நடிக்க இவரைவிட்டால் வேறு ஆளே இல்லை என்ற நினைத்தேன். அதனால் சிவாஜி அண்ணனை நேரில் சந்தித்து கதை சொல்லி நடிக்கக் கேட்கலாம் என்று அவருடைய வீட்டிற்குச் சென்றேன்.
அவர் வீட்டில் தன்னுடைய அறையில் படுக்கையில் படுத்திருந்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னை அவரது அறைக்கு வரச் சொன்னார்.
நானும் சென்றேன். “என்னய்யா..?” என்றார். “அண்ணே.. ஒரு படம்.. நான் இயக்கப் போறேன்.. நீங்கதான் நடிக்கணும்..” என்றேன். “நடிக்கணுமா.. சரி நடிக்கிறேன்..” என்று பட்டென்று பதில் சொன்னார். “சம்பளம்…” என்று இழுத்தேன். “உனக்கு எவ்வளவு கொடுக்கணும்னு தோணுதோ, அதைக் கொடு..” என்றார். படம் பற்றி வேறு எதையும் அவர் கேட்கவில்லை.

‘முதல் மரியாதை’ படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகில் இருக்கும் சிவசைலம் என்னும் ஊரில் நடந்தது. அங்கே நடிப்பதற்காக சிவாஜி உட்பட அனைவரும் வந்துவிட்டார்கள். முதல் நாளே பாடல் காட்சியைத்தான் படமாக்கினேன். ‘பூங்காத்து திரும்புமா’ என்ற பாடல்தான் அது.
அன்றைக்கு மெதுவாக என்னிடம் “ஏம்ப்பா.. படத்தோட கதை என்ன..?” என்று கேட்டார் சிவாஜி. “அண்ணே.. எனக்குக் கதை சொல்ல வராதே.. நான் என்ன சொல்றது..?”ன்னு கேட்டேன். சிவாஜி அதிர்ச்சியாயிட்டார். கொஞ்ச நேரம் கழித்து “ஏன் உன் அஸிஸ்டெண்ட்கிட்ட சொல்லி சொல்லச் சொல்லேன்..” என்றார். “அவங்களுக்குக் கதையே தெரியாதே..?” என்று விகல்பமில்லாமல் சொன்னேன். அதற்குப் பிறகு சிவாஜி என்னிடம் கதை பற்றிக் கேட்கவே இல்லை…” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.