full screen background image

விஜய் 65 படத்திற்கான ஹீரோயின் வேட்டை ஆரம்பம்..!

விஜய் 65 படத்திற்கான ஹீரோயின் வேட்டை ஆரம்பம்..!

‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டிற்கு சற்றும் குறையாத அளவிற்கு விஜய் 65 படம் பற்றிய செய்திக்கும் மிகுந்த பரபரப்பு எழுந்துள்ளது.

பரமபதம் விளையாட்டில் ஒரேயொரு சோழி உருட்டல் மூலமாக பெரிய ஏணியை எட்டிப் பிடித்தக் கதையாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பையே பெற்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

ஸ்டார் விஜய் டிவியில் தனது கலையுலக வாழ்க்கையை வசனகர்த்தாவாகத் துவக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ‘Boys Vs. Girls’, ’ ஜோடி நம்பர்-1’, ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு கதை வசனம் எழதியிருக்கிறார். ‘பிக் பாஸ்’ முதல் பாகத்திற்கும் திரைக்கதை எழுதிய அனுபவம் கொண்டவர் இவர்.

இதன் பின்புதான் நயன்தாராவை முதன்மை நாயகியாக்கி ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்போது விஜய்யின் 65-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ஜெட் வேகத்தில் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையிலும் பிரண்ட்ஸ், நண்பன் வரிசையில் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக இது உருவெடுக்கவிருக்கிறது என்கிறார்கள் நெல்சனின் உதவி இயக்குநர்கள் வட்டாரம்.

‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ இரண்டுமே நகைச்சுவை கலந்த கமர்ஷியல் திரைப்படங்கள்தான். இதே பாணியில்தான் இத்திரைப்படமும் இருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

படத்தில் அடுத்தக் கட்ட எதிர்பார்ப்பாக யார்தான் நாயகியாக நடிக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, ரகுல் ப்ரீத் சிங், பூஜா ஹெக்டே என்று மிகப் பெரிய நடிகைகளிடம் பேசி வருகிறார்கள். அதிர்ஷ்டம் யாருடைய கதவைத் தட்டப் போகிறது என்பது இந்த மாதத்திற்குள் தெரிந்துவிடும்..!

Our Score