‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் வெளியாவது தமிழக அரசின் கையில் உள்ளதா..?

‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் வெளியாவது தமிழக அரசின் கையில் உள்ளதா..?

வரும் பொங்கல் பண்டிகை தமிழ்த் திரையுலகத்தில் மிக, மிக வித்தியாசமான பொங்கலாக இருக்கப் போகிறது.

இதுவரையிலான பொங்கல் தினக் கொண்டாட்டங்களில் திரைப்படங்களை வெளியிட்டு வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம் என்று மட்டுமே கணக்குப் போட்டுக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகம் 2021 பொங்கல் பண்டிகை தமிழ்த் திரையுலகத்தை மீட்டெடுக்கப் போகும் பொங்கலாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறது.

கொரோனா லாக் டவுன் காலத்திற்குப் பிறகு வரும் பெரிய பண்டிகை தினம் என்பதாலும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் தினத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பதாலும் இந்தத் தினம் திரையுலகத்தினர் மத்தியில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

‘மாஸ்டர்’ படம் பொங்கல் ரிலீஸ் என்று பல திசைகளில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் இது குறித்து இதுவரையிலும் எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

காரணம், அவர்கள் இப்போதைய கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்குட்பட்டு ‘மாஸ்டர்’ படத்தைத் திரைக்குக் கொண்டு வர தயங்குகிறார்கள்.

தமிழக அரசின் இப்போதைய உத்தரவுப்படி தமிழகத் தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு தியேட்டரிலும் 50 சதவிகிதம் என்றால் ‘மாஸ்டர்’ படத்திற்குக் கிடைக்கும் ஒட்டு மொத்த வசூலே 30-ல் இருந்து 40 கோடிக்குள்தான் இருக்கும்.

ஆனால், ‘மாஸ்டர்’ படத்தின் செலவோ 150 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறார்கள். எனவே திரையரங்குகள் வழக்கம்போல முழு அளவில் செயல்படலாம் என்று தமிழக அரசு வழிவிட்டால் ஒழிய.. ‘மாஸ்டரை’ வெளியில்விட அதன் தயாரிப்பாளர்களுக்கு இப்போது மனசில்லை.

இதே நிலைமைதான் ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளருக்கும். அவரும் ‘மாஸ்டருடன்’ போட்டியிடுவது உறுதி என்று சொல்லிவிட்டாலும் வேறெந்த முயற்சியும் எடுக்காமல் அமைதி காக்கிறார்கள்.

ஏனெனில், ‘மாஸ்டர்’ படத்திற்காக தமிழக அரசு கடைசி நிமிடத்தில் மனமிரங்கி 100 சதவிகித டிக்கெட்டுக்களையும் கொடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ‘ஈஸ்வரன்’ படக் குழுவினர்.

தங்களைவிடவும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பும், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் என்று மற்றொரு புற வணிக புள்ளிகளும் ‘மாஸ்டருக்காக’ தமிழக அரசிடம் பேசுவார்கள் என்று தெரிந்துதான் நைச்சியமாக வேடிக்கை பார்க்கிறது ‘ஈஸ்வரன்’ படக் குழு.

அப்படியொரு உத்தரவு கிடைத்துவிட்டால் ‘மாஸ்டரு’டன் கிடைக்கின்ற தியேட்டர்களில் ‘ஈஸ்வரனை’ வெளியிட்டுவிடலாம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்.

ஆக, தமிழக அரசுக்காக ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘மாஸ்டர்’ பட ரிலீஸுக்காக ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளர் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த இரு படங்களின் வெளியீட்டில் கிடைக்கப் போகும் வசூல் கணக்குக்காக தமிழ்த் திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது..!

Our Score