சில தினங்களாக நடிகை வனிதா விஜயகுமாரும், நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனும் கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவில வைரலானது.
இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், “அந்தப் புகைப்படங்கள் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘பிக்கப் டிராப்’ படத்தின் போஸ்டர்கள்…” என்று விளக்கமளித்தார்.
அப்போது பேசிய வனிதா விஜயகுமார், “நான் இயக்கிய ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி. ரஜினி, கமல்’ படத்தில் ‘பவர் ஸ்டார்’ சீனி ஸார் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார். அதற்கு அவர் பணம்கூட வாங்கவில்லை.
அந்த மரியாதைக்காகத்தான் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிக்கிறேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். நகைச்சுவையான கதை. நான் காமெடி படத்தில் நடித்தேவே இல்லை. அதனால்தான் இந்தக் கதையைக் கேட்டவுடன் நடிப்பதற்காக ஒத்துக் கொண்டேன்.
இப்படியொரு போட்டோ ஷூட் இருக்கிறது என்று சொன்னவுடன் நானும் ஒத்துக் கொண்டேன். படத்தின் விளம்பரத்திற்காக இதனை பயன்படுத்திக் கொள்வோம் என்று நினைத்துதான் எனது டிவீட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டேன்.
ஆனால் மீடியாக்கள்தான் இதை கல்யாணம் என்ற அர்த்தத்தில் கொண்டு போய்விட்டன. இரண்டு நடிகர்கள் சேர்ந்து போட்டோ வெளியிட்டால் அதை திருமணம் என்பதா..? இதை இவ்வளவு பெரிய சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை.
தனிப்பட்ட வாழ்கையில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை. ஒரு ஆண் நான்கைந்து திருமணம் செய்தால்கூட அதை யாரும் பேசுவதில்லை. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தால் பேசுகின்றனர். நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை.
பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால்தான் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. ஒருவருடன் வாழ்ந்து கொண்டே பலருடன் தொடர்பில் இருப்பதுதான் தவறு…” என்றார்.
இது குறித்து விளக்கம் அளித்த நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், “இந்த சமூகத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சரியான வாழ்க்கையை வாழ்வது இல்லை, ஆனால் அதையெல்லாம் வெளியே சொல்லாமல் வாழ்கிறார்கள். அந்த வகையில் வனிதா விஜயகுமார் ஒரு இரும்புப் பெண்மணி…” என்று பட்டமும் அளித்தார்.