கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘தில் ராஜா’.
இந்தப் படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார்.
மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி – மனோ V.நாராயணா, கலை – ஆண்டனி பீட்டர், நடனம் – செந்தாமரை, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஷ், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல், தயாரிப்பு நிர்வாகம் – பூமதி – அருண், பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு – கோவை பாலா,
‘சாக்லேட்’, ‘பகவதி’, ‘ஏய்’, ‘வாத்தியார்’, ‘மாஞ்சா வேலு’, ‘மலை மலை’, ‘கில்லாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநரான A.வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
PVR Inox Pictures நிறுவனம், இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.
திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகன் விஜய் சத்யா படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
எதிர்பாராமல் நடக்கும் ஒரு மோதலால், நம்மை எதிர்த்தவர்கள் நம்மைவிட பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்னவாகும்…? அவர்களால் நாயகனுக்கும், அவனது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை முழுக்க, முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் படமாக மட்டுமின்றி சஸ்பென்ஸ், திரில்லர் பாணியிலும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
ஹீரோ விஜய் சத்யா சிவில் என்ஜீனியர். மனைவி ஷெரின். ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இரவில் ஒரு பார்ட்டிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மாநில அமைச்சர் ஏ.வெங்கடேஷின் மகன் நடுவழியில் காரை நிறுத்தி ஹீரோவை வம்பிழுக்க, இரு தரப்பினருக்கும் இடையில் மோதலாகிறது.
இந்த மோதல் வலுத்து, கடைசியில் மந்திரியின் மகன் கொலையாக.. அவனுடைய நண்பர்கள் 3 பேர் காணாமல் போகிறார்கள். போலீஸ் கொலையாளியையும், மந்திரி மகனின் நண்பர்களையும் வலைவீசி தேடுகிறது.
போலீஸ் கமிஷனர், துணை கமிஷனரான சம்யுக்தாவை இந்த வழக்கின் அதிகாரியாக நியமித்து, ஒரு தனிப்படையையும் அமைத்துக் கொடுத்து, சீக்கிரமாக குற்றவாளியைக் கைது செய்யும்படி உத்தரவிடுகிறார்.
சில நாட்கள் கழித்து இங்கேயிருந்தால் ஆபத்து என்று நினைத்து ஷெரினின் பெற்றோர் இருக்கும் மதுரைக்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்புகிறார்கள் விஜய் சத்யாவும், ஷெரீன் மற்றும் அவரது பெற்றோரும்.
வழியில் மந்திரி வெங்கடேஷின் மனைவி வனிதா, ஷெரீனின் அம்மாவைப் பார்த்து தன்னுடன் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையிலும் உடன் படித்த நண்பி என்று அடையாளம் கண்டு தனது வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்.
இன்னொரு பக்கம் போலீஸ் விசாரணையில் கொஞ்சம், கொஞ்சமாக விஜய் சத்யாவின் பெயரும் வெளியாக.. மந்திரிக்குத் தகவல் தெரிந்து வெறியாகிறார்.
அதற்குள் அங்கேயிருந்து எஸ்கேப்பாகும் விஜய் சத்யா, ஷெரீன் மற்றும் குழந்தையுடன் தப்பியோடுகிறார். ஒரு பக்கம் போலீஸ் தேடத் துவங்க. இன்னொரு பக்கம் மந்திரியின் அடியாட்களும் இவர்களைத் தேடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
அறிமுக நாயகனான விஜய் சத்யா கட்டுமஸ்தான உடலைக் காட்டி சண்டைக் காட்சிகளில் வீர தீரத்துடன் சண்டையிடுகிறார். எமோஷன் காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் அந்த டிபார்ட்மெண்ட் பக்கமே போகாமல், சாதாரணமாகவே வசனம் பேசி நடித்திருக்கிறார். மேற்கொண்டும் சிறந்த கதையம்சத்துடன் கூடிய படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையைக் காண்பித்தால் நிச்சயமாக உயர்வார்.
நாயகி ஷெரீனுக்கு மிகப் பெரிய ஸ்கோப் இல்லாத கேரக்டர் என்பதால் இவரும் சாதாரணமாகவே நடித்திருக்கிறார். நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பது மந்திரியாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷூம், அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதாவும்தான். கூடவே கே.பி.ஒய்.பாலாவும், இமான் அண்ணாச்சியும் சின்னச் சின்ன புன்முறுவலை பூக்க வைக்கும் அளவுக்கு காமெடி செய்துள்ளனர்.
மீடியம் பட்ஜெட் படத்துக்கேற்ற ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயண. பாடல் காட்சிகளில் அழகுணர்ச்சியோடு படப் பதிவினை செய்து பார்க்க வைத்திருக்கிறார்.
அம்ரீஷ் இசையில், கலைக்குமார் பாடல் வரிகளில், ஆண்டனி தாசன் குரலில் உருவாகியுள்ள ‘சாமி குத்து’ பாடல் தெறிக்க வைக்கிறது. டூயட் பாடலும் கேட்கும் ரகம்தான்.
கொலை வெறியோடு ஹீரோவைத் தேடி வரும் துணை கமிஷனர் சம்யுக்தாவின் நோக்கம் என்ன என்பது கடைசியில் தெரிய வரும்போது ஒரு சின்ன திருப்பம் நமக்குள்ளும் ஏற்படுகிறது. கடைசியில் யார்தான் கொலை செய்தது என்னுமிடத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் நிச்சயமாக பாராட்டுக்குரியது.
கதை, திரைக்கதையில் சஸ்பென்ஸை கடைசிவரையிலும் நீட்டித்துக் கொண்டு போய் ஒரு கமர்ஷியல் படமாக கடைசி வரையிலும் அமர்ந்து பார்க்க வைத்திருக்கும் இயக்குநர் ஏ.வெங்கடேஷுக்கு நமது பாராட்டுக்கள்.
தில் ராஜா – தில்லான படம்தான்..!
RATING : 2.5 / 5