full screen background image

“நான் என்றும் விஷால் பக்கம்தான் நிற்பேன்..” – நடிகர் விஷ்ணு விஷாலின் பேட்டி

“நான் என்றும் விஷால் பக்கம்தான் நிற்பேன்..” – நடிகர் விஷ்ணு விஷாலின் பேட்டி

சமீபத்தில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றியை ருசித்துவிட்டதால், கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

இந்த நேரத்திலேயே அவருடைய பிறந்த நாளும் வந்துவிட, அன்றைய நாளின் மதியப் பொழுதில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

IMG_8871

அப்போது திரண்டு வந்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய நிருபர்கள் மத்தியில் தனது இளமைப் பருவம், நடிக அனுபவம்.. திரையுலக வாழ்க்கை என்று அடுத்த ஒரு வருடத்திற்கு தன்னிடம் நிருபர்கள் யாரும் பேட்டியே எடுக்க வேண்டாம் என்கிற அளவுக்கு அனைத்தையும் பேசி விட்டுத்தான் ஓய்ந்தார்.

“என்னோட நிஜமான பெயர் விஷால்தான். ஆனா நான் சினிமாவுக்கு வந்த போது நடிகர் விஷாலும் இங்க இருந்ததால விஷ்ணுன்னு மாத்தி வச்சுக்கிட்டேன். ரெண்டு, மூணு படங்கள்ல நடிச்சப்புறம் சொந்தப் பெயரையே வைச்சுக்கணும்னு தோணுச்சு. அதோட அப்போ நம்ம விஷாலும் நமக்கு ரொம்ப குளோஸ் ஃபிரண்ட் ஆகிட்டாரு . அவரும் தப்பா எடுத்துக்க மாட்டார்ங்கிறதால விஷ்ணு விஷால்னு மாத்தி வச்சுக்கிட்டேன் .

‘வெண்ணிலா கபடிக் குழு’ என்னை நடிகனா ஆக்கின படம். எனக்கு ஒரு அடையாளம் கொடுத்த படம். அந்தப் படத்தின் வெற்றிதான் என்னை உருவாக்கியது. அடுத்து என் நடிப்பு மற்றும் தொழில் மேல எனக்கு பெரிய நம்பிக்கை வரக் காரணமான படம் ‘நீர்ப்பறவை’. அந்தப் படம் வந்த பிறகுதான் நானும் இந்தத் திரையுலகில் ஒரு நடிகனாக அங்கீகரிக்கப்பட்டேன். இதை எங்க வேண்ணாலும் வந்து சொல்வேன்.

IMG_8854

நான் லவ் பண்ணித்தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். லவ் பண்ணின காலத்துல நான் நடிகனா இல்ல. நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்.  ஒரு கட்டத்துல அது முடியாமல் போனதால வேலைக்கு போயிட்டிருந்தேன். என் மனைவிகிட்ட என் மாமனார் அப்பவே சொன்ன ஒரே விசயம்.. ”நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல. ஆனா உன் கணவன் சினிமாக்காரனா இல்லாம பாத்துக்க..” என்பதுதான். நான் லவ் பண்ண ஆரம்பிச்சப்பவே, என் வொய்ப் இதை என்கிட்டே சொன்னாங்க.

அப்போ நான் அவங்ககிட்ட என் சினிமா ஆசையை சொன்னேன். ஆனா அவங்க அதுக்கெல்லாம் பயப்படல. ‘இவனுக்கெல்லாம் எங்க சினிமா சான்ஸ் கிடைக்கப் போகுது?’ன்னு நினைச்சுட்டாங்க. எனக்கு ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் கிடைச்சப்ப, அவங்களை பீச்சுக்கு கூப்பிட்டுபோய் உட்கார வச்சு, ரெண்டு மணி நேரம் சுத்தி வளைச்சு எதை, எதையோ பேசிட்டு கடைசியாத்தான் இந்த விஷயத்தை சொன்னேன்.

ரொம்ப அதிர்ச்சியாயிட்டாங்க.. “எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டார்”னு சொல்லி  அழ ஆரம்பிச்சுட்டாங்க.  எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிருச்சு. அவங்களை சமாதானப்படுத்த வேண்டி ”சரி..  நான் சினிமா சான்ஸ் வேணாம்னு சொல்லிடறேன் . வேலைக்கே போறேன்”னு சொன்னேன். ஆனால் அதையும் அவங்க விரும்பலை… ‘நமக்காக தன்னோட லட்சியத்தையே விட்டுத்  தர்றானே’ன்னு நெகிழ்ந்துபோய், ”பரவாயில்ல.. நீங்க நடிங்க. எங்கப்பாவை நான் சமாளிச்சுக்குறே”ன்னு  சொல்லிட்டு அவங்க அப்பாவை எப்படியோ கன்வின்ஸ் பண்ணி என் கல்யாணத்துக்கு ரூட்டை கிளியர் செஞ்சாங்க.

காதலிக்கும்போதெல்லாம் ஏதாவது படத்துல லவ் சீன்ல நான் நடிச்சு இருக்கறத பார்த்தாகூட டென்சன் ஆயிடுவாங்க. ஆனா இப்போ அவங்க  முன்னாடியே நடிக்கும்போது மத்த பொண்ணுங்களோட நான் ரொமான்ஸ் பண்றத பார்க்குற அளவுக்கு முன்னேறிட்டாங்க. முதல் தடவை அப்படி பார்த்தபோது மட்டும், ”பாவி.. இப்படி பண்றியே.. இது நியாயமா?”ன்னு கேட்டாங்க. இப்போ  நோ பிராப்ளம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு. .” என்றார்.

கேள்வி பதில் சீஸனில் கேள்விகளுக்கு சங்கடமே படாமல் பதிலளித்தார்.

IMG_8831

“ஜீவால தொடங்கி இன்று நேற்று நாளைவரைக்கும் தொடர்ச்சியா வெற்றிப் படங்களை கொடுத்துட்டிருக்கீங்களே.. எப்படி..?” என்று கேட்டதற்கு, “எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள்தான் இதற்கு காரணம். என்னை நடிகனாக உருவாக்கிய சுசீந்திரன்தான் மறுபடியும் ‘ஜீவா’ல எனக்கு இடம் கொடுத்தார். என்னோட காட்ஃபாதர்  அவர்தான்.

‘நீர்ப்பறவை’ படத்துல சீனு ராமசாமி என்னை இன்னொரு உயரத்துக்கு கொண்டு போனார். நான் மறுக்கவே முடியாது. அப்புறம் ‘முண்டாசுப்பட்டி’. கடைசியா இப்போ ‘இன்று நேற்று நாளை’ படங்கள் மூலமா தயாரிப்பாளர் சி.வி.குமார் என்னை தொடர் வெற்றிப் பட நாயகனாக ஆக்கியிருக்கார். இவங்க ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நீங்கதான்.. ஆரம்பம் முதலே மீடியாக்கள் எனக்கு கொடுத்து வரும் சப்போர்ட்டை என்னால மறக்கவே முடியாது.” என்றார்.

“இன்று நேற்று நாளை பார்ட் டூ வருதாமே..? அதுல நீங்க இருக்கீங்களா..?” என்ற கேள்விக்கு, “பார்ட் டூ வரப் போறதா ஒரு செய்தி வந்திருக்கு. ஆனால், அதுல நான் நடிப்பேனா, இல்லையா என்பதை தயாரிப்பாளரும், இயக்குநரும்தான் முடிவு பண்ணனும். கதை ரெடி ஆகிட்டு இருக்குன்னுதான் டைரக்டர் சொன்னார். அவ்ளோதான் எனக்குத் தெரியும்..” என்றார்.

“நடிகர் சங்க விவகாரத்தில் நஈங்க யார் பக்கம்..?” என்று கேட்டதற்கு, “ஒரு இடத்தில் நல்ல விசயத்துக்காக கேள்வி கேட்கறது தப்பில்லையே. விஷால் கேட்டிருக்கார். அது சரியா இருக்கு. அதனால் அவர் பின்னாடி நிற்கிறோம். அதுக்காக விஷால் கட்சி ஆரம்பிச்சா அதுல அதுலெல்லாம் சேர மாட்டேன். எனக்கு அது தெரியாத விஷயம். நான் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டேன் என்பது விஷாலுக்கும் தெரியும்.” என்றார்.

“ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை அணி நீக்கப்பட்டது பற்றி ஒரு கிரிக்கெட் பிளேயரா நீங்க என்ன நினைக்கிறீங்க..?” என்று கேட்டதற்கு, “என்ன நடந்ததுனு முழுசா தெரியாமல் நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்பதில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனா, கிரிக்கெட் ரசிகனா எனக்கு வருத்தம். ஆனா சினிமாக்காரனா சந்தோசம். ஐ.பி.எல். சமயத்தில் தமிழ் சினிமா வசூல் பாதிக்கப்பட்டுக்கிட்டேயிருந்தது.  இதுனால இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அந்த பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன்..” என்றார்.

“இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிச்சிருக்கீங்களே.. பிரச்சினை ஒண்ணும் இல்லையா..?” என்ற கேள்விக்கு,  “நானும் விஜய் சேதுபதியும் முன்னாடியிருந்தே நல்ல பிரண்ட்ஸ். வெண்ணிலா கபடிக் குழுவுல விஜய் சேதுபதியும் ஒரு சீன்ல வந்துட்டு போவாரு. படத்தை நல்லா உத்து பார்த்தீங்கன்னா தெரியும்.

அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு என்கிட்ட கதை சொல்ல, அவரோட பிரண்டு ஒருத்தரை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். இப்படி அவர் பெரிய ஹீரோவாகறதுக்கு முன்னாடியிருந்தே நானும் அவரும் பிரண்ட்ஸ் என்பதால் எந்த ஈகோ சிக்கலும் எங்களிடையே இல்லை..” என்றார்.

சந்தோஷம் பிரதர்.. நீங்க பொழைச்சுக்குவீங்க..!

Our Score