‘‘பாகுபலி’ திரைப்படத்தின் அமோக வெற்றி இந்திய திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இன்றைய தேதிவரையிலும் சுமாராக 303 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. முதல் ஷோவிலேயே படத்தின் வெற்றி முத்திரை குத்தப்பட்டுவிட்டதால் ‘பாகுபலி’ டீம் அதே சந்தோஷத்துடன் மாநிலம்விட்டு மாநிலம் பறந்து வெற்றி விழா கொண்டாடி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னைக்கும் விஜயம் செய்தார்கள். ஆனால் இருவர் மட்டுமே.. ‘பாகுபலி’யாக நடித்த பிரபாஸும், ‘சிவகாமி’யாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் மட்டுமே விழாவுக்கு டீம் சார்பில் வந்திருந்தார்கள்.
மற்றபடி அவர்களை வாழ்த்துவதற்காக தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் நெருங்கிய நண்பர்களான இயக்குநர்கள் லிங்குசாமி, எம்.ராஜேஷ், சாம் ஆன்டன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு ‘பாகுபலி’யைப் பாராட்டிப் பேசினார்கள்.
முதல் நபராக மைக்கை பிடித்த தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா., “இந்தப் படம் பார்த்ததில் இருந்தே பாகுபலி, பல்லலாதேவன், சிவகாமி, அவந்திகா, தேவசேனா, கட்டப்பா போன்ற பாத்திரங்களே தினமும் என் நினைவில் வந்து கொண்டிருக்கிறார்கள் . அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்தப் படம். இந்திய அளவில் பெரிய சக்ஸ்ஸை கொடுத்திருக்கும் இந்தப் படத்தின் முழு வெற்றிக்குக் காரணம் இயக்குநர் ராஜமெளலிதான். இந்த டீமுக்கு எனது வாழ்த்துகள்..” என்றார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பேசும்போது, “பாகுபலி’ உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவம். ஹாலிவுட் படங்களைப் பார்த்து நாம் வியந்ததுபோல், இப்போது நம்ம ஊர் படத்தைப் பார்த்து ஹாலிவுட் வியக்கும் காலம் இது. ‘பாகுபலி’ எடுத்தவிதம் பிரம்மாண்டம். சிற்ப்பான மேக்கிங். குறிப்பாக அந்த போர்க்களக் காட்சிகளைச் சொல்லலாம். ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் சார் எல்லாம் ரொம்ப பிரமாதமா நடிச்சு இருக்காங்க. பிரபாஸ், ராணாவெல்லாம் கடந்த மூணு வருஷமா ஒரே படத்துல, டைரக்டர் ராஜமவுலி மேல நம்பிக்கை வச்சிருந்து, பொறுமையா காத்திருந்து, சின்சியரா உழைச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. அடுத்த பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்..” என்றார்.
தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது, ”இப்படியொரு அற்புதமான படத்தை எடுத்த தயாரிப்பாளர்களைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது. லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ் வித்தியாசப்படுமேன்னு நினைத்துத்தான் ஒரே நேரத்துல இரண்டு மொழிகள்லேயும் ஷூட் பண்ணியிருக்காங்க.
ஒரு சாதரணமான படத்தை இரு மொழிப் படமா பண்ணி அதுல இன்னொரு மொழிக்காக தனியா ஷாட் எடுக்கறது பெரிய விஷயம் இல்ல. ஆனா இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்துல நேரத்தையெல்லாம் பொருட்படுத்தாமல், கஷ்டத்தையெல்லாம் கவனிக்காமல் எடுத்தாங்கன்னா அதுதான் பெரிய விஷயம்.
அதுனால இந்தப் படத்தை மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைச்சுத்தான் இதை வாங்கி ரிலீஸ் செஞ்சோம்.. எங்களுடைய கணிப்பு பொய்யாகலை. மக்கள் கொடுத்த ஆதரவுக்கு எங்களுடைய மனப்பூர்வமான நன்றி..” என்றார்.
இயக்குனர் லிங்குசாமி தன் பேச்சின் துவக்கத்திலேயே ஒரு குண்டை தூக்கி வீசினார். “படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு காலைல எனக்கு ஹைதராபாத்தில் இருந்து ‘பாகுபலி’ படம் பயங்கர ஃபிளாப் அப்படின்னு ஒரு போன். எனக்கு பயங்கர ஷாக். ஆனா இதையெல்லாம் நம்பக் கூடாது. நாம பார்த்துதான் முடிவு பண்ணனும்னு தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன். அசந்து போனேன். ஒவ்வொரு பிரேமும் அப்படி ஒரு அற்புத அனுபவமா இருந்தது.
படத்துல பார்த்தீங்கன்னா மலை உயரத்துக்கு நின்றார் பிரபாஸ். புது தமன்னாவை பார்க்க முடிந்தது. இரண்டு குழந்தைகளையும் கையில் ஏந்தியபடியே உட்காந்து கொண்டு, ‘இது என் கட்டளை அதுவே சாசனம்’னு மிரட்டி இருந்தாங்க ரம்யா கிருஷ்ணன். சத்யராஜ் ஸாரெல்லாம் அந்த கேரக்டராகவே வாழ்ந்துட்டார்.
இந்தப் படத்துல ஒரேயொரு வருத்தம்தான் எனக்கு. படம் முடியும்போது என்னவோ படம் பாதியில கரண்ட் கட் ஆன மாதிரி முடிஞ்சதுதான்.. ஆனா அது ஒரு டைரக்டரோட தைரியம்… நல்லா பிளான் பண்ணிதான் செஞ்சுருக்காரு.
ராஜமெளலி ஸாரை நான் இரண்டு தடவை ஹைதராபாத்துல சந்திச்சு பேசியிருக்கேன். ரொம்ப சாப்ட் கேரக்டர். அதே சமயம் பிராண்ட் மைண்ட்டா பேசுறாரு. ரொம்ப அடக்கமாகவும் இருந்தாரும். கைகளை குறுக்கக் கட்டிக்கிட்டு அவர் பேசுற தோரணையை பார்த்தால் இவர்தான் இந்த சாதனையாளரான்னு சந்தேகமே வரும். அவரைப் பார்த்து எனக்கும் அதே மாதிரி கைகளைக் கட்டிக்கிட்டு அடக்கமா இருக்கணும்னு தோணுது..” என்றார்.
ராணி சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, “இந்தப் படத்தைப் பார்த்திட்டு தனுஷ், சிம்பு, கார்த்தி எல்லோருமே எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. தமிழில் படையப்பா நீலாம்பரி கேரக்டருக்கு அப்புறமா இந்தப் படம்தான் எனக்கு ரொம்ப பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. இந்தப் படத்துல என்னோட காஸ்ட்யூம், நகைகள் எல்லாமே இயக்குநர் ராஜமெளலியின் மனைவிதான் செலக்ட் செஞ்சாங்க. அதோட மட்டுமில்லாமல் ஷாட்ல நான் எப்படி உக்காரணும்.. நடக்கணும் என்பதைக்கூட சொல்லிக் கொடுத்தார். முதல் பாகத்தைவிடவும் இரண்டாம் பாகத்தில்தான் கதை மொத்தமும் சொல்லப்பட்டிருக்கு. அதிலும் எனக்கும் அனுஷ்காவுக்கும் நடிக்க பெரிய வாய்ப்பு இருக்கு. தமிழ்ல மறுபடியும் நடிக்குறதுக்கு நான் தயாராத்தான் இருக்கேன். ஆனா நீலாம்பரி கேரக்டரை மறுபடியும் எடுத்தால் அதிலும் நான்தான் நடிப்பேன்..” என்றார்.
கடைசியாகப் பேசிய பாகுபலி பிரபாஸ், “எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் நடிக்கும்போது பல விபத்துகள். பல காயங்கள். இந்தப் படம் எடுத்த காலத்தில் ஐந்து படங்களை நான் இழந்தேன். ராஜமெளலியை நம்பி உழைத்தோம். நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கிறது. வெற்றிக்காக எங்களுடன் சேர்ந்து உழைத்த உங்களுக்கும், ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாகுபலி டீம் சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறேன்..” என்று சுருக்கமாகவே முடித்துக் கொண்டார்.
கேள்வி பதில் சீஸன் கொஞ்சம் அடக்கமாகவே ஆரம்பித்து கலகலப்படைய வைத்து கடைசியில் முடிச்சிரலாம் என்று சொல்ல வைத்தாற்போல் முடிந்தது.
நடிகர் சுரேஷ் டிவீட்டரில் தெலுங்கு நடிகர்களை நடிக்க வைக்காதது பற்றி எழுதியதை கேட்டபோது பிரபாஸிடம் இருந்து மைக்கை வாங்கிய தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா அதற்காக நீண்டதொரு விளக்கம் கொடுத்தார். கடைசிவரையிலும் பிரபாஸ் அதைப் பற்றி கருத்து சொல்லவேயில்லை.
பிறகு பிரபாஸ் பேசும்போது, “ஒரு நாள் ராஜமெளலி ஸார் என்னை போனில் அழைத்து, ‘நாளைக்கு சென்னை போய் சத்யராஜ் ஸாருக்கு கதை சொல்லப் போறேன்’ என்றார். சத்யராஜ் சார் என்னுடைய அப்பாவாக ‘மிர்ச்சி’ படத்தில் ஏற்கெனவே நடித்திருப்பதால் அவருடன் எனக்குப் பழக்கம் உண்டு. அப்போ நான் ராஜமெளலியிடம், ‘சத்யராஜ் சாரிடம் அவர் தலை மீது நான் காலை வைக்கும் காட்சியைப் பற்றி இப்பவே சொல்லி விடுங்கள்’ என்று சொன்னேன்.
அவர்களின் சந்திப்பின்போது ‘முழு கதையையும் சொல்லுங்கள்’ என்று சத்யராஜ் ஸார் கேட்க, ராஜமௌலி முழு கதையையும் சொல்லியிருக்கிறார். கூடவே நான் சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியையும் சொல்லி என்னுடைய சங்கடத்தையும் சொல்லியிருக்கிறார் ராஜமெளலி. ‘படத்தின் ஹைலைட்டான காட்சியே அதுதானே சார்.. எனக்கு அந்தக் காட்சியில் நடிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார் சத்யராஜ் ஸார்.
சத்யராஜ் ஸார் எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். என்னதான் நடிப்புன்னாலும் அவர் தலையில், என் காலை வைக்குற மாதிரி அந்தக் காட்சியை எடுக்குறப்போ எனக்குள்ள ரொம்ப கஷ்டமாத்தான் இருந்தது. நான் இந்தப் படத்துல நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்ட சீனும் அதுதான்..” என்றார் தன்மையாக.
“இந்தப் படத்தோட கதை அடிமைப் பெண் கதையின் பாதிப்பில்தானே இருக்கு..?” என்று அடுத்த கேள்வி எழ.. ரம்யா கிருஷ்ணன் இதனை ஆமோதித்து ஒத்துக் கொண்டார். உடனேயே மைக்கை வாங்கிய பிரபாஸ், “எம்.ஜி.ஆர். சார் நடிச்ச ஒரு கதையில நான் நடிக்கிறது பெரிய அதிர்ஷ்டம்தானே. எனக்கும் பெருமைதானே..?” என்று ஒரு போடு போட்டார்.
“இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்களே.. நீங்களே டப்பிங்கும் பேசியிருக்கலாமே..?” என்று கேட்டதற்கு, “எனக்கு இன்னும் தமிழ் சுத்தமா வரலை. கொஞ்சம் இடைல, இடைல தப்பா வரும். ஏதாச்சும் தப்பாயிருச்சா அது படத்தை பாதிக்குமேன்னுதான் நான் டப்பிங் பேசலை…” என்றார் அடக்கத்துடன்.
“தமிழில் ஒரு ரவுண்டு வரலாமே..?” என்று அழைப்பு விட்டபோது, “தமிழில் பொருத்தமான வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். குறிப்பாக ஷங்கர் சார், கவுதம் மேனன் இவங்க படங்களில் நடிக்குற ஆசையிருக்கு..” என்றார்.
வாங்க ஸார்.. தமிழகம் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும்..!