ஒரு கை பார்த்துவிடுவது என்கிற ஒற்றை குறிக்கோளில் உறுதியாக இருக்கிறார்கள், விஷால் தலைமையிலான நடிகர் சங்கத்தின் போராளிகள் அணி.
வரவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர் சங்கத்தினரிடம் நேரில் சென்று சந்தித்து எதிரணியினருக்கு கடும் பயத்தை உண்டாக்கியதோடு மட்டுமில்லாமல் உயர்நீதிமன்றத்திலும் தேர்தலை நடத்தும்விதத்தில் தங்களுக்கு சாதாகமான தீர்ப்பையும் பெற்றிருக்கின்றனர் விஷால் அணியினர்.
இந்த நேரத்தில் தமிழ்ச் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவரையும் இன்று ஒரே நாளில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கேட்டுள்ளனர் விஷால் அணியினர்.
நடிகர்கள் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நாசர் தலைமையிலான டீம்தான் இன்று சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது.
இந்த அணிக்கு இப்போது பகிரங்கமாக ஆதரவு தந்து இவர்களுடன் இணைந்துள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், பிரபல நடிகையுமான குஷ்பு.
ரஜினியை அவரது வீட்டிலும், கமல்ஹாசனை ஏவி.எம். ஸ்டூடியோவிலும் சந்தித்து பேசியுள்ள இந்தக் குழுவினர் தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு, தலையெடுத்ததன் காரணத்தை இருவரிடமும் விளக்கினார்கள். தங்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது நடிகர் சங்கத்தை மீட்டெடுக்க உதவும் என்று அவர்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளனராம்.
குஷ்புவை பொறுத்தவரையிலும் அவர் சின்னத்திரையில் எப்போதுமே ராதிகாவுக்கு எதிரணிதான் என்பதால் இந்த அணியில் சேர்ந்ததில் ஆச்சரியமில்லை.
தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் பல நட்சத்திரங்கள் வெளிப்படையாக தங்களது ஆதரவை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவார்கள் என்று தெரிகிறது. கடைசியாக நடிகர்களுக்கு நல்லது செய்ய உருவாக்கப்பட்ட இந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் நடிகர்களிடையே பிளவை ஏற்படுத்தப் போவதுதான் உண்மை.